Saturday, April 12, 2008

மக்களாட்சி

பல நாளா நானும் யோசிச்சது உண்டு. இந்த ஜனநாயகம் அரசியல் அமைப்பு சட்டம், திட்டங்கள், கொள்கை, அறிக்கை இப்டியெல்லாம் எப்பபாரு மெனக்கெட்டு பேசிக்கறாங்க. இதுக்காக எல்லா அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டபடி திட்டி திண்டாடி என்ன என்னமோ பண்ணி நிறைவேத்துறாங்களே. இதுக்கெல்லாம் ஏன் இப்டி கஷ்டப்படறாங்க. எதுக்கு வீணா வாதம் பிரதிவாதம் பண்ணி நேரத்தையும் பணத்தையும் வீணாக்குறாங்க இப்‍டியெல்லாம் யோசிச்சதுண்டு. ஏன்னா பள்ளிகூடத்துல இருந்து பாடங்கள பெறும்பாலும் இதை சுத்தியேதான் இருக்கும். ஆனா எந்த மாணவனும் அதை படிச்சு பயன் அடைஞ்சதா தெரியல இதுக்கு காரணம் நம்ம கல்வி சொல்லி தர முறை மாற வேண்டும் அல்லது விசயத்தை கொஞ்சம் சுருக்கி படங்கள் மற்றும் நடப்பு நிலவரத்தோட கம்பேர் பண்ணி சொல்லி தரனும். சரி விடுங்க அது கல்வி முறை மாற்றத்தில வருது. இப்ப தலைப்புக்கு வர்ரேன்.

திட்டம்னா முதன் முதல்ல இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்போ மக்கள் தொகை கிட்டதட்ட வெறும் 50கோடிதான் ஆனா பஞ்சம் வறுமை எல்லாம் நல்லா அமோகமா இருந்துச்சு இதை போக்க என்ன பண்ணலாம்னு சில நல்ல அரசியல்வாதிகள் ஐந்தாண்டு திட்டம்னு ஒன்னு கொண்டு வந்து எங்க எங்க முடியுதோ அங்க எல்லாம் அணைகளை கட்டி வாய்க்கால் வெட்டி நீர் பாசனத்தை பெறுக்கி உணவு உற்பத்திய பெறுக்கி இப்டி என்ன என்னவோ செஞ்சு உணவு பற்றாக்குறையில்லாம வறுமை அண்டாம இன்னிய மக்கள் தொகையிலயும் காலந்தள்ளற அளவு முன்னேற்றம் பண்ணியிருக்காங்க.

அதுக்கு பிறகு உள் கட்டுமானம் அதாங்க (Infra structure) போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு. இத பத்தி சொல்லவே வேண்டாம் யாராவது தப்பி தவறி மொபைல் போன் இல்லைனு சொன்னா ஒன்னு அவரு வெளிநாட்டுகாரரா இருக்கும் இல்லைனா பேச முடியாத குழந்தையா இருக்கும் அந்த அளவு பெறுத்துடுச்சு. போக்குவரத்தும் ஒன்னும் குறைஞ்சிடல கிட்டதட்ட எல்லா கிராமங்களும் போக்குவரத்து வசதில தன்னிறைவு பெற்றுதான் இருக்கு.

அது போக சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு இப்டி சொல்லிகிட்டே போகலாம். கண்டிப்பா 100 சதவீத தன்னிறைவு இல்லை. ஆனா கிட்டதட்ட முழு அளவு இருக்குது. சரி எதுக்கு இப்போ இந்த விளம்பரம்னு கேட்கறீங்களா? ஒன்னும் இல்லீங்க திட்டம்னு ஒன்னு போட்டா அதை நிறைவேத்தி செயல் படுத்த கொஞ்ச காலம் ஆகும். ஏன்னா எத்தனையோ அரசு அலுவலகங்களை தாண்டி மக்களை வந்தடையவே பல காலம் ஆகும். அது வரைக்கும் அரசாங்கம்னு ஒன்னு நிலையா இருந்தாதான் அந்த திட்டம் கடைசி குடி மகனுக்கும் வந்து சேர்ந்து கொஞ்சமாச்சும் ஆமை வேகத்திலயாவது முன்னேற முடியும், அதை விட்டுட்டு இந்த ஜனநாயம் எல்லாம் சுத்த தெண்டம். கம்முனு சர்வாதிகாரம்தான் நல்லதுஅல்லது வேற ஆட்சி முறைதான் நல்லதுனு இள ரத்தங்கள்லாம் கர்ஜணை பண்றாங்க ஆனா ஒரு விசயம் தெளிவா இருக்கனும் என்ன ஆட்சி நடந்தாலும் ஜனநாயகத்துலதான் பலன் ஆமை வேகத்துலயாவது நிஜமா கஷ்டப்படுற மக்களுக்கு போய் சேரும் அதை விட்டுட்டு குதிச்சா அது முக்கிய நகரங்கள்ள மட்டும்தான் பலன் அடைஞ்சு முன்னேறும். ஆனா சத்தம் இல்லாத கிராமங்கள் முன்னேறாது. அதனால மக்களே முடிஞ்ச வரைக்கும் ஜனநாயகத்தை பாதுகாக்க நம்மளால முடிஞ்ச கடமைய செய்யனும் இல்லீனா அடுத்த தலைமுறைக்கு ‍ரொம்ப சிரமமா போயிடும்.

எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் இப்படி பாராட்டவோ அல்லது திட்டவோ அல்லது மொக்கை போடவோ அனுமதிக்கும் மக்களாட்சிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய ஒரு மொக்கை கட்டுரை சமர்ப்பணம்.

வாழ்க மக்களாட்சி..!!

Thursday, April 10, 2008

கற்கை நன்றே..!!

நான் கற்ற புத்தகங்களில் முக்கியமான சிலவற்றை குறித்த பகிர்தல்.
இதை நான் நமது புதிய இளைய தலைமுறைக்கு எனது ஆலோசனையாகவும் தெரிவிக்க விரும்புகிறேன். இதில் காந்தியின் சத்திய சோதனை போன்ற நீதிநெறி மற்றும் பகவத்கீதை போன்ற மதம், அரசியல் சார்ந்த தனிநபர் விருப்பு வெறுப்புகளை பேச போவதில்லை. உலக அறிவு மற்றும் பல்வேறு வெற்றி தோல்விகளையும், ஒற்றுமை மற்றும் விரோதங்கள் குறித்து சொல்லும் நூல்கள் இவை. தவிரவும் இவைகளை பின்வரும் வரிசையில் படிப்பதால் உலக அறிவும் வளரும் என்றே அசட்டு நம்பிக்கையும் உள்ளது.

நீரினுள் எழும்பி வெடிக்கும் காற்று குமிழி போல...
- நேரு


1. நேருவின் உலகவரலாறு பாகங்கள் 1 & 2
தனது பதின்ம வயது மகளுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே என்றாலும்
பலமடங்கு வயதான நமக்கும் வியப்பான ஒரு நூலே. இது புத்தகமாக வெளி வந்த சமயத்திலேயே தமிழாக்கம் (திரு.அழகேசன் என்பது சரி என்றே எண்ணுகிறேன்) செய்யப் பட்டுவிட்டது. ஒரு தந்தை தன் குழந்தைக்கு சொல்லும் அதே பாங்குடன் உலகை குறித்த வரலாற்றை விவரிக்கிறார். பல்வேறு மொழிகள், மதங்கள், இராச்சியங்கள் என்று அனைத்தையும் கால வெள்ளத்தினுள் நீந்திவாறே விளக்குகிறார்.

அவருடைய கொள்கைகளை மறந்து படிக்க ஆரம்பித்தால் மிக அருமையான நூல் இது. எண்ணற்ற மதங்கள், மொழிகள், கொள்கை கோட்பாடுகள், இராச்சியங்கள் அனைத்தும் தோன்றி அழிந்த பாங்கினை விவரித்து வரும் போது மேலே சொல்லியுள்ள உவமையை காட்டுவார். மெய்சிலிர்க்க வைக்கும் தருணம். கிட்டதட்ட ஆங்கில அரசாங்கமும், அடிமை இந்தியாவும் என்ற வரைக்கும் இருக்கும்.

2. மதனின் - வந்தார்கள் வென்றார்கள்

கிட்டதட்ட இரு பாகங்களாக உள்ள உலக வரலாற்றின் சுருக்கி வரைதல் போன்று எளிய முறையில் சுவைபட விவரித்துள்ளார். தைமூரில் ஆரம்பித்து கிட்டதட்ட ஆங்கில ஆட்சி துவக்கம் வரை புத்தகத்தை கீழே வைக்க இயலாத அளவு சுவையுடன் கொடுத்துள்ளார். வண்ண வண்ண ஓவியங்கள் மிக அழகாக மனதை கொள்ளை கொள்ளும் வ‍கையில் இருக்கிறது.

3. கல்கியின் - சிவகாமியின் சபதம்

காலத்தே இரண்டாவதாக எழுதப்பட்டு இருந்தாலும் முதலில் படிக்க வேண்டியது. ஓவியக்கலை, சிற்பக் கலை, நடனக் கலை என்று எங்கு எந்த பக்கம் படித்தாலும் அரசியலும் , கலையும் சரியான போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். இவை தவிர அன்றைய தமிழர் தம் வாழ்வியல் முறைகள், போர் திட்டமிடல், ஒற்றாடல் என்று இன்றைய நவீன நாவல்களுக்கு சவால் விடும் வண்ணம் அமைந்திருக்கும்.

4. கல்கியின் - பார்த்தீபன் கனவு

கல்கியின் கிட்டதட்ட முதலாவது வரலாற்று நாவல். அளவில் சிறிதாக
இருப்பினும் படிக்க சுவையான எளிய கதை.

5. கல்கியின் - பொன்னியின் செல்வன் 1,2,3,4 & 5

சொல்லி தெரியவேண்டியதில்லை பொன்னியின் செல்வன் பெருமைகளை. யாவரும் படித்து இன்புறும வண்ணம் தமிழர் தம் வாழ்க்கை முறை, அது இது என எண்ணற்ற செய்தி குவியல்கள் நிலவறையினுள் உள்ள பொக்கிஷம் போல குவிக்கப் பட்டுள்ளது. உள்ளே போய் வர பயிற்ச்சி எடுத்தால் அனுபவிக்க ஏராளம், ஏராளம்...

6. நள்ளிரவில் சுதந்திரம்- வெளிநாட்டு ஆசிரியர்கள் (Larry Collins,Dominique Lapierre)

இந்திய சுதந்திர சமயத்தில் நடைபெற்ற சுவாரசியமான தகவல்கள் களஞ்சியம் என்றே சொல்லலாம். இன்றைய இந்திய டூடே புத்தகத்தின் அன்றைய முன்மாதிரியாக செய்தி திரட்டுவது மற்றும் வழங்கும் கோணங்கள் பிரமிக்க வைக்கிறது. நாம் எதிர் பாரா கோணங்கள் நமக்கு வெளிச்சமிடப் பட்டு காண்பிக்க படும் போது மிகவும் வியப்படைய வேண்டியிருக்கிறது. தமிழாக்கம் செய்ய பட்டு வெகு அருமையாக உள்ளது. தமிழாசிரியர் பெயர் அறிய இயலவில்ல‍ை.

மேற்க் கண்ட புத்தகங்களை மேற்க் கண்ட வரிசையிலேயே படிப்பது
நமக்கும், நம் வாரிசுகளுக்கும் பாரதம் மற்றும் பிற சமூகங்கள் குறித்த தேவையான அறிவை வழங்கும் என்றே எண்ணுகிறேன்.

Tuesday, April 08, 2008

ஊழல்

இந்தியர்கள் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஊழல் வழக்கு உண்டென்றால் அது போபர்ஸ் பீரங்கி ஊழலதான்..இது நடந்த போது(1987) இப்போது இருக்கும் இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் பிறக்கவே இல்லை..இந்த வழக்கினால் காங்கிரஸ் கட்சி 1989ல் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது..ஆனால் அந்த ஊழல் வழக்கு மட்டும் இன்னும் நடந்துட்டு இருக்கு .கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் எதுவும் முடிவுக்கு வந்தபாடில்லை..போபர்ஸ் போல நிறைய ஊழல் வழக்குகள் நம் அன்றாட வாழ்க்கையில் வந்து போயிருக்கின்றன. இதுபோல பரபரப்பாகப் பேசப்பட்டு நம்மால் மறக்கப்பட்ட ஊழல்கள் குறித்தும், அந்த ஊழல்கள் சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தண்டனை பெற்றவர்கள் குறித்தும் இந்தப்பதிவில் சில விசயங்கள் எழுத எண்ணம்.


1. போபர்ஸ் ஊழல்- 64 கோடி


வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி-22-01-1990
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- 22-10-1999

தண்டனை பெற்றவர்கள்--- தேடுராங்க,தேடுராங்க....தேடிட்டே இருக்காங்க.
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


2.HDW Submarine- 32.55 கோடிவழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி-05-03-1990
தண்டனை பெற்றவர்கள்--- தேடித்தேடி சலிச்சுபோய் ஒன்னும் பண்ண முடியாம சி.பி.ஐ வழக்கை மூடிச்சுக்கறோம் அனுமதி கொடுங்கனு நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள்.

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


3. பங்குச்சந்தை ஊழல்- 4100 கோடிவழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி - 72 வழக்கு.(1992 - 1997 வரை)
குற்றம் சாட்டப்பட்டவர்கள்--- 4 பேர்(ஹர்சத் மேத்தா உட்பட)

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


4. ஏர்பஸ்(Airbus) ஊழல்- 120கோடிவழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி- 23-03-1990
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- இன்னும் தாக்கல் செய்யப்படவில்லைதண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


5.இந்தியன் வங்கி ஊழல்- 762.92 கோடி


வழக்குப் பதிவு- 45 (1992ல் இருந்து)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 27 நபர்கள் மீது

தண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


6.ஹவுஸிங் ஊழல்- 65 கோடி


வழக்குப் பதிவு- 11/03/1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -தண்டனை பெற்றவர்கள்-- நான்கு இளநிலை ஊழியர்கள் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


7.கால்நடைத் தீவன ஊழல்- 950


கோடிவழக்குப் பதிவு- மார்ச் 1995லிருந்து (64 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -63

தண்டனை பெற்றவர்கள்-- ஒரே வழக்கில் மூன்று அதிகாரிகள் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


8.பெட்ரோல் பங்க் ஊழல்- 950கோடி


வழக்குப் பதிவு- நவம்பர் 1996 -1997 (15 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


9.யூரியா ஊழல்- 133கோடிவழக்குப் பதிவு- 28/05/1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 26/12/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


10.சி.ஆர்.பி(CRB) ஊழல்- 1031கோடி


வழக்குப் பதிவு- 20/05/1997

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 02/09/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


11.டெலிகாம் ஊழல்- 1200கோடி


வழக்குப் பதிவு- ஆகஸ்ட் 1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 4

தண்டனை பெற்றவர்கள்-- ஒருவர் மட்டும்

கைப்பற்றப் பட்ட பணம்- 5.36 கோடி


12.யுடிஐ(UTI) ஊழல்- 9500கோடிவழக்குப் பதிவு- ஜூலை 2001(1 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 2004 வரை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


13.கே.பி ஊழல்(KAY PEE)- 3128கோடி


வழக்குப் பதிவு- மார்ச்&மே 2001(மூன்று வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இரண்டு
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


14.வீடு விற்பனை (Home Trade) ஊழல்- 1200கோடிவழக்குப் பதிவு- 10/05/2002

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


இதெல்லாம் சும்மா சில கூகிள் தேடல் மூலமும், சில கட்டுரைகள் உதவியுடனும் கிடைத்த தகவல்கள்..சரி, என்னோட ஒரே ஒரு கேள்வி என்ன என்றால் இந்திய மக்களாகிய நாம் ஊழல் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றே நினைக்கிறேன்?...அதை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி எதற்கு நம் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணாக்கவேண்டும்?

Monday, April 07, 2008

மணற்கோவில் - கைலாச நாதர் கோவில்

பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் அமைந்துள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று தென்திசைக் கைலாயம் எனும் கைலாசநாதர் கோயில் ஆகும். இந்த ஆலயம் கட்டிட கலையின் முக்கியமான ஒரு வகையாகும். கல்வெட்டு இக்கோயிலை "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" ன்றழைக்கிறது.மணற்சிலைகள் கண்ணை கவரும் விதத்தில் காலத்தே சிறிது சிதைவுற்று அழகுற விளங்குகின்றன.

(அனைத்து படங்களையும் சொடுக்கினால் முழுமையான பெரிய அளவிலான ஒளிப்படத்தை காணலாம்.)


ஒளிபடம் (1) கோவிலின் முழு உருவத்தை காட்டுகிறது. கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுபாட்டில் உள்ளதால் சுற்றிலும் அழகிய புல்வெளி பராமரிக்க பட்டுவருகிறது.

ஒளிபடம் (2) கோவிலின் முன்நுழைவாயில் அருகே உள்ள கோபுரமாகும்.
இதன் இருபுறமும் உள்ளே நுழைய வழிகள் உள்ளன. பொதுவாக மற்ற கோவில்களில் கோபுரத்தின் வழியே நுழைவதாக இருக்கும்.ஒளிபடங்கள் (3,4) உள்சுற்றுபுற பிரகாரங்கள் ஆகும். இவைகள் முழுக்க முழுக்க சிற்பங்கள் நிறைந்துள்ளன. மணற் சிற்பங்கள் (சுதை) என்ற வகையில் அமைந்துள்ளன.ஒளிபடம் (5) ஒரு சிதைந்த சிற்பத்தைக் காட்டுகிறது. மற்ற அங்கங்கள் அனைத்தும் சரியே பெற்று தங்கள் முகத்தை மட்டும் காலதேவனின் இரக்கமற்ற அலட்சியத்தால் இழந்து விட்ட இந்த நடன ஜோடியினரை எண்ணினால் மனம் பதைக்கிறது.

ஒளிபடம் (6) நடனத்தின் அழகை துல்லியமாக காட்ட முயன்றுள்ள சிற்பியின் திறனை கண்டு நாம் வியக்காமல் இருக்க இயலாது அல்லவா..? எத்தனை எத்தனை கற்பனையை நம் கண் முன் கொண்டு நிறுத்தியுள்ளனர் சிற்பி...ஒளிபடம் (7) அன்றிலிருந்து இன்று வரை நம் பாரதம் கலாச்சாரத்தில் பிண்ணி பிணைந்தவை என்பதை உணர்த்தும் சிற்பம். இன்று பாரதத்தின் தேசிய சின்னமாக உள்ள நான்கு சிங்கங்களின் முன்மாதிரியாக உள்ள சிற்பம்.
ஒளிபடம் (8) இங்கு எதைச் சொல்ல எதை விட..? ஒரே இடத்தில் சிங்கங்கள், யானைகள், ஆடல் மகளீர், வதம் செய்யும் காட்சி, மற்றும் பிற உப குள்ளர்கள் போன்றவைகளை காட்டி தன் முழு திறனை வெளிகாட்டியுள்ளார் சிற்பி.

ஒளிபடம் (9) கோவிலின் சுற்று சுவரில் உள்ள காவல் சிற்பங்கள். எண்ணற்ற சிற்பங்கள் வகைவகையாய் அமைந்துள்ளன. விலங்குகள் மீதமர்ந்துள்ள காவற் வீரர்கள் என மிகவும் தத்துரூபமாய் அமைக்கபட்டு நம்மை வியக்க வைக்கிறது.
குறிப்பு : இந்த தலமானது தற்கால புகழ்பெற்ற காமட்சி அம்மன் கோவில் போன்றவைகளிலிருந்து சற்றே விலகியுள்ளது. நகர மையத்திலிருந்து 4கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் செல்லாத காரணத்தால் அதிக கடைகள் மற்றும் உணவுவிடுதிகள் அருகில் இல்லாத குறையுண்டு.