Sunday, December 16, 2007

டிசம்பர் மாத PIT போட்டிக்கு


ரொம்ப நாளா இந்த PIT போட்டில கலந்து வெற்றியடையனும்னு நினைக்கிறது ஆனா நம்ம மக்கள் எல்லாரும் போடர படத்த பார்த்தா நான் எடுக்கறதெல்லாம் சும்மா பக்கத்துல கூட போக முடியாத அளவு இருக்குது. இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா அதுவும் இந்த மாசம் எனக்கு புடிச்ச பூக்கள்தான் தலைப்பு குடுத்திருக்காங்க. அதை பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டேன் கொஞ்சம் மெனக்கெட்டு இதுக்குன்னே படம் எடுத்து போடனும்னு அதுனால என் வீட்டு ரோசா செடில பூ மலரும் வரைக்கும் (அதுக்குள்ள போட்டி முடிய கூடாதுனு வேண்டிக்கிட்டு) காத்திருந்து எடுத்து போட்டிருக்கேன். பாத்துட்டு நம்மளோடது தேறுமானு பாத்து சொல்லுங்கப்பா.
படத்து மேல சொடுக்கி பெருசு பண்ணி பாருங்க அப்போ கொஞ்சம் நல்லா இருக்கும் :)

Monday, November 12, 2007

நவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக

சாலைகள் தான தலைப்பு இதுவும் சாலைதான் என்ன இது கொஞ்சம் விதயாசமான சாலை தண்ணிக்குள்ள போற சாலை அவ்ளோ தான்.

இது வெனிஸ் அந்த ஊர்ல அவங்களோட சாலை இதுதான்


இது ரோம்ல இருக்கிற கோலோசியும்

Monday, October 15, 2007

முத்தே முத்தம்மா!!!

முத்து மணி மாலை பாட்டு கேட்டு நல்லா அனுபவிப்போம் அந்த முத்துக்களை பற்றி இன்னிக்கு வந்த மெயில் பார்த்து அசந்துட்டேன். பொதுவாவே முத்துக்கள்னா எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். அதுலயும் வெண் முத்து பாக்க ரொம்ப அழகாதான் இருக்கும். ஆனா இந்த படங்களை பார்த்த பிறகு கொஞ்சம் வருத்தமா போயிடுச்சு எனக்கு. இவ்வளவு பாடு படுத்திதான் முத்து எடுக்கறாங்களா? பாவம் இந்த முத்து சிப்பி உயிரினம். :(



முத்துங்கிறது எப்டி உருவாகுதுனா சிப்பியோட உடலுக்கு உறுத்தலா போற சில குப்பைகள்கிட்ட இருந்து பாதுகாக்க அது ஒரு திரவத்தை பூசி தன் உடம்ப பாதுகாத்துக்கும். அந்த திரவம்தான் பிற்காலத்தில முத்தா ஒரு திட பொருளா உருவாகும். இதையதான் நாம எடுத்து நகை பண்ணி போட்டு ரசிக்கறோம்.

இதுல செயற்கை முத்து இயற்கை முத்துனு ரெண்டு வகை உண்டு, எப்டினா இயற்கையா சிப்பிக்குள்ள அழுக்கு போய் அதை தடுக்க சிப்பி உண்டாக்கற முத்து இயற்கை முத்து. ஆனா அப்டி உருவாகறது ரொம் கம்மிதான். அதனால மனுசனே சிப்பிய வளர்த்தி அதுக்குள்ள சில நெருடல உண்டு பண்ணி செய்யறது செயற்கை முத்து.

கிட்டதட்ட எல்லா சிப்பிகளும் இந்த மாதிரி ஒரு திட பொருள உருவாக்கும். ஆனா எல்லாமே நல்ல முத்து கிடையாது. நிறைய சிப்பிகள்ள கிடைக்கறது வெறும் திடமற்ற அல்லது மட்டமான முத்துக்கள்தான்.

பொதுவா முத்துங்கறது வெறும் கால்சியம் (CaCo3)அதாவது சுண்ணாம்பு சத்துல இருந்து உருகாறதுதான்.





இந்த முத்து நல்ல தண்ணியில இருந்து கிடைக்கறது, அதாவது ஏரி,குளம்,ஆறுல வளர்ந்து வர சிப்பி முத்து முக்கியமா சீனாவுலதான் கிடைக்கும். அது போக கடல் அதாவது உப்பு தண்ணியில வளர்ந்து வர்ரதும் உண்டு.

ஆனா முத்தகள்ள பால் வெள்ளை, மஞ்சம், ரோஸ் மற்றும் கருப்பு கலர் இப்படி பல வகை உண்டு. ரொம்ப காஸ்ட்லி கருப்புதானுங்க.



Friday, October 05, 2007

முகவரி மறந்ததே !



இன்று நான்

வீடு திரும்ப மாட்டேன்


உன் பிசாசு நினைவுகள்

என் வீட்டிற்கான பாதைகளை

கலைத்து விட்டன


என் வீட்டிற்கு வழிகாட்டும்

விளக்குகளை உன்

பிரியத்தின் கண்களின் வெளிச்சம்

மூழ்கடித்துவிட்டன


என் வீட்டின் எண்களை

உனது பறவைகள் தானியங்களெனெ

கொத்திச் சென்றுவிட்டன


இனி நான் வீடென்று நம்பிய

என் வீட்டிற்கு

ஒரு போதும் திரும்ப மாட்டேன்
டிஸ்கி : கவிதை எழுதிய நண்பருக்கு நன்றி. அப்புறம் யாரும் இதை படிச்சிட்டு நான் வீட்டுக்கு போக மாட்டேன்னு நினைச்சு சந்தோசப்படாதீங்க. :)

Wednesday, October 03, 2007

போராட்டங்களும் வெற்றிகளும்

கடந்த வாரம் ஒரு பெரிய பந்த் நடந்து முடிஞ்சிருக்கு அப்டியே காந்தி ஜெயந்தியும் வந்து போயிடுச்சு. எனக்கு இந்த ரெண்டையும் பார்க்கும்போது இந்த போராட்டங்களால் என்ன வெற்றிகளை அடைஞ்சிருக்கோம்னு தெரியல. காந்தி காலத்துல அவரு உண்ணா விரதம் இருந்தாரு ஆங்கிலேயர்களை விரட்ட. ஆனா அதுல பொது மக்களுக்கு ஒரு சின்ன இடைஞ்சல் வந்தாலும் உடனே போராட்டத்த கைவிட்டுடுவாரு. அதுவும் போராட்டம்தான், இப்பவும் நடத்தறாங்களே தலைவர் போராட்டம் அறிவிக்கறதுக்கு முன்னாடியே பொது மக்கள் சொத்துக்கு கேடு விளைவிக்கனும்னு தெளிவா இருக்காங்க.
பஞ்சாலை நகரம் (Cotton City) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் அப்டினு பேர் வாங்குன ஊர் எங்க கோயமுத்தூர். ஏன் இந்த பேர்னா இங்க இருக்கற அளவு பஞ்சாலைகள் (cotton Manufacturing Mills) தென்னிந்தியாவுல வேற எங்கயும் கிடையாது. இங்க எப்டியும் வீட்டுக்கு ஒருத்தர் பஞ்சாலை தொழிலாளர் இருந்திருப்பாங்க. ஆனா இப்ப நிலைமை சுத்தமா மாறி போச்சு. பஞ்சாலை எல்லாத்தையும் மூடிட்டு காம்ளக்ஸ், ரியல் எஸ்டேட் அப்டினு மாத்திட்டாங்க. காரணம் ஸ்‍ரைக், ஏன் பண்ணறோம்? எதுக்கு பண்ணறோம்? னு யோசிக்காம மக்கள் பண்றத பாத்து பயந்துபோயி மில் மொதலாளிகள் மூடிட்டு போயிடறாங்க. உதாரணமா ஒரு நிரந்திர தொழிலாளி ஒரு நாளைக்கு 120 ரூபாய் முதல் 170 வரை சம்பாதிப்பவர் இந்த பெரிய ஆலை மூடப்படும்போது சிறு சிறு வேஸ்ட் காட்டன் யூனிட் என அழைக்கப்படும் சின்ன சின்ன தொழிற்சாலைகளில் வே‍லை செய்ய நேர்கிறது அவர்களுக்கு அங்கு கிடைக்கும் கூலி ஒரு நாளைக்கு 40 முதல் 70 வரை மட்டுமே. இது மட்டும் அல்ல அங்கு போனஸ் மருத்துவ செலவு எதுவும் கொடுக்கப்படுவதில்லை காலம் முழுவதும் அவர்கள் தற்காலிக பணியாளர்களாக மட்டுமே இருக்க முடியும். ஆனாலும் பெரிய ஆலைகளில் போனஸ் பேச்சு வார்த்தையில் சற்று தோல்வி ஏற்பட்டாலும் உடனே ஸ்ரைக் செய்து மில்லை மூடிவிட்டு சிறு தொழில்சாலைக்கு தற்காலிகமாக செல்கிறார்கள். இதனால் நஷ்டம் கட்டாயம் தொழிலாளர்களுக்குதான் அதை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.
அதே போல ப்ரிக்கால் ஒரு உதாரணம், அங்க கடந்த ஆண்டு போனஸ் மட்டும் 62 சதவீதம் கொடுக்கப்பட்டது. இது தனியார் துறையில் மிக உயர்ந்த அளவு. ஆனால் இந்த ஆண்டு ஐந்து தொழிலாளர்களை மாநிலம் விட்டு மாநிலம் இட மாற்றம் செய்ததை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஸ்ரைக் செய்து கொண்டு அந்த தொழிற்சாலையை மூடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளாரகள். இந்த காலத்தில் ஐடி துறையில் நாடு விட்டு நாடே மாற்றினாலும் ஒருவரும் மூச்சு விடுவதில்லை. :)
இப்படி போராட்டம் செய்து செய்து என்ன சாதித்து இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அதே போல இனிமேலாவது போராட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அப்படி முன் அனுமதி பெறுபவர் கட்டாயம் கொஞ்சம் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் சட்டம் வந்தாலாவது திருந்துவார்களோ என்னவோ ?

Saturday, September 29, 2007

ஆப்பிள் பூவே நீ யாரோ.. ...


"ஆப்பிள் பெண்ணே நீ யாரோ"னு பாட்டு கேட்டுருக்கறோம் ஆனா ஆப்பிள் பூவ பத்தி பாட்டு இல்ல. இங்க பாருங்க ஆப்பிள் பூ சூப்பரா இருக்குது. மத்த எல்லா பூவயும்விட இது அழகா இருக்கு.
ஆப்பிள் மரம் 6 லயிருந்து 30 அடி வரை வளரும். அது மண்ணோட தன்மைய பொறுத்தது. ஆப்பிளோட சரித்திரம் தெளிவா கிடையாது ஆனா இது காஸ்பியன் மற்றும் கருங்கடலுக்கு நடுவுல இருந்திருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் கருதுறாங்க.இது ரோமானியர் களுக்கும் கிரேக்கர்களுக்கும் பிடித்தமான உணவா இருந்திருக்குது. அவ்ளோ ஏனுங்க ஆதாம் ஏவாள் கதைலயே ஆப்பிள்தான வருது.
அ‍மெரிக்காவுக்கு ஆப்பிள் வியாபாரிகளாலும் ஐரோப்பியர்களாலும் கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது.





ஆப்பிள் பூ பெரிய அளவுல வெள்ளை மற்றும் இளம் ரோசா வண்ணத்துல இருக்கும். 2 - 4 இன்ச் அளவுல நடுவுல அதிகமான மகரந்த துகள்களுடன் இருக்கும். இந்த மலரில் தேன் அதிக அளவுல இருக்கறதால தேனீக்களுக்கு எப்பவும் கொண்டாட்டம்தான். இத விட சிறப்பு இந்த மலரோட நறுமணம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் பாத்ததில்ல நீங்க யாராவது பாத்திருந்தா சொல்லுங்கப்பா.
ஆப்பிள் பழத்த பத்தி ஒன்னும் சொல்ல வேண்டியதில்ல நமக்கே தெரியும்ல.ஆப்பிள் பழத்தோட விதையும் வேர்களும் மிக விஷத்தன்மையுள்ளதுனு சொல்லறாங்க.இதுல முக்கிய விசயம் ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டா டாக்டரே தேவையில்லங்கற பழமொழிதான். பாத்துங்க டாக்டருக்கு படிக்கறவங்க யாரும் ஆப்பிள் மரத்த வளர்த்துடாதீங்க அப்புறம் உங்க தொழிலுக்கு கஷ்டம் ஆயிடும். :)

Tuesday, August 14, 2007

சுதந்திர தின திருவிழா !!



"இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் செளக்கியமே"
இந்த பாட்டு வேற சூழ்நிலைக்கு நம்ம கண்ணதாசன் எழுதுனது ஆனா இப்ப நினைச்சு பார்த்த நமக்கு பொருந்துது. சோமாலியாவுல பசி பட்டினி மனுசங்க சோறு கண்டு பல வருசம் ஆச்சு. ஆப்கானிஸ்தான்ல பொண்ணுங்க வெளிய போக முடியாது படிக்க முடியாது. நம்ம சகோதர நாடு நம்ம கூட பிறந்த பாகிஸ்தான்ல இப்பவோ அப்பவோ அவசரநிலை வரலாம்னு மத்த நாடுக எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க. ஆனா இது எதுவுமே இல்லாம நாம மட்டும் சுதந்திரமா நினைச்சத எழுதிகிட்டு நினைச்சபடி படிச்சு வேலைக்குபோய் மொக்கை போஸ்ட் போட்டுகிட்டு இருக்கறோம்னா அதுக்கு காரணம் நம்ம பெரியோர்களோட கடும் உழைப்பு, அஹிம்சைங்கற அடித்தளம் பல ஐந்தாண்டு திட்டங்கள போட்டு கொஞ்சமாவது நிறைவேத்தனும்கற எண்ணத்தோட உழைச்ச உழைப்பு இப்டி சொல்லிகிட்டே போகலாம். சுதந்திரம் வாங்குனு சமயம் நம்ம நாடு இருந்த வறுமை பஞ்சம் பத்தி எல்லாருக்கும் நல்லா தெரியம் ‍ அதெல்லாம் மாறி இன்னிக்கு கொஞ்சம் சந்தோசமா இருக்கோம்னா அதுக்கு காரணம் அப்ப இருந்த பல நல்ல தலைவர்களோட தியாகம்தான். அரசியல் அமைப்பு சட்டமாகட்டும், ஐந்தாண்டு திட்டமாகட்டும் எல்லாமே சுதந்திரமான மனப்பான்மையோட போட்டதாலதான் இன்னிக்கு நாம சந்தோசமா இருக்கறோம். அதையெல்லாம் மனசுல நினைச்சு பார்த்து கொஞ்சமாவது சிறப்பா நம்ம சுதந்திர தினத்தை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடனும்.



அப்டியே இந்த சுதந்திரம் அடுத்த தலைமுறைக்கும் தொடரனும்னு ஆண்டவனை பிரார்தனை செய்வோம்.பல விதமான தினங்கள கொண்டாடர நாம இந்த சுதந்திர தினத்தையும் சிறப்பா கொண்டாடனும் அப்பதான் இனி வரும் தலைமுறைக்கு இந்த சுதந்திரத்தோட அருமை கொஞ்சமாவது தெரியும். அதை புரிய வைக்கிறது நம்ம கடமை இல்லீனா அக்கம் பக்கத்து நாடுக மாதிரி நாமளும் ஒரு நாள் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை வந்திடும். இந்தியர்கள்னு சொல்லிகிட்டு நிம்மதியா வாழற இந்த வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கும் தொடரட்டும்.
வாழ்க சுதந்திர இந்தியா
வளர்க இந்தியர்கள் :)

Wednesday, July 18, 2007

செவ்வந்தி







ஆயுத பூ‍ஜை சரஸ்வதி பூஜை வந்தா கண்டிப்பா எல்லா பக்கமும் சும்மா பளிச்னு இந்த செவ்வந்தி பூ கடை போட்டிருப்பாங்க. யார் யாரோ திடீர் திடீர்னு கடை போட்டு வியாபாரம் ரெண்டு நாள் செய்வாங்க. மழைக்கு வரும் காளான் போல இந்த கடை தோன்றி மறையும். நாமும் அந்த பூவ வாங்கி சாமிக்கு போட்டு பூஜை பண்ணுவோம் ஆனா ஒரு நாள் கூட அதோட பூர்வீகம் என்ன அதனோட குணங்கள் என்னனு யோசிச்சது இல்ல.
செவ்வந்தி பூ பத்தி தெரிஞ்சுக்கலாம்னு கூகுளாண்டவரையும் விக்கி அண்ணனையும் போய் கேட்டா அப்டி ஒரு பேரே இல்லைனு சொல்லிபுட்டாங்க. அட கொடுமையே இது என்ன நம்ம பூவூக்கு வந்த சோதனையின்னு தேடுனப்ப இந்த வலைப்பூ கிடைச்சது. யாரோ ஒரு நல்லவங்க என்ன மாதிரியே பூக்கள பத்தி பதிவுகளா போட்டு தள்ளியிருக்காங்க. அவங்க யாரு எவருனு தெரியல ஆனா அவங்க புண்ணியத்துலதான் தெரிஞ்சுது செவ்வந்திப்பூ பேரு க்ருசாந்தேமம் (Chrysanthemum). இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையில இருந்து வந்ததா சொல்றாங்க.









இந்த பூக்கள் பல நிறங்களில் இருக்கின்றன. மஞ்சள் நமக்கு தெரியும் அதுபோக சிவப்பு, ஆரஞ்சு இப்டி நிறைய கலர்ல இருக்குதுங்க. ஆனா நாம சாமிக்கு வெக்கறது மஞ்சள்தானுங்களே. அது போக வெள்ளை கலரும் வெப்போம்.

அப்புறம் இத முக்கியமா ஜப்பான் சீனாவுல தானுங்க வளர்த்து பயன்படுத்தறாங்க. ஆனா அவங்க இத மன்னரோட சின்னமாவும் துக்கத்தோட வெளிப்பாடாவும் நினைக்கிறாங்க. ஜப்பானுல இத மகிழ்ச்சியான புனித சின்னமா பாக்கறாங்க. ஊருக்கு ஊரு ஒரே பொருள் வெவ்வேறு விதமா பார்க்கபடுது.





இந்த பூக்களுக்குனு பல மருத்துவ குணம் சொல்லறாங்க முக்கியமா இதிலிருந்து தயாரிக்கபடும் ஒரு ரசாயனம் சிறந்த கொசு மற்றும் பூச்சி கொல்லியா பயன்படுது. ஆனா இதுல இருக்கற ரசாயனம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தறதில்ல அது மட்டும் இல்ல இது பயோ டீ கிரேடபுல் (அதாங்க இயற்கையா மட்கும் பொருள்) அதனால சுற்றுசூழல் பாதிப்பு சுத்தமா கிடையாது. கொஞ்சம் பேரு இதனோட இதழ்கள காய வெச்சு டீ தயாரிச்சு சாப்பிடறாங்களாம் நல்லா இருக்குனு போட்டு இருக்குது குடிச்சு பார்த்தாதான் தெரியும்.

Wednesday, July 11, 2007

எட்டாவது சாதனைகள்

நம்ம கச்சேரி தேவ் என்னைய எட்டு போட்டு காட்டி‍யே ஆகனும்னு சொல்லிபுட்டாக அவரு கூப்புட்ட எல்லாரும் போட்டுட்டாங்க நான்தேன் கடைசி. ம் என் எட்டு சாதனைகள் கீழே போடறேன் யாரும் பயந்து அல்லது வெறுத்து போயி திட்டாதீங்க.

‍என் வலையுலக சாதனை

1. முதன் முதல்ல பதிவு எழுதுனப்ப நமக்கு (இந்தியாவும் உலக அதிசயமும்) என்ன எழுத தெறியும் சும்மா வெட்டி வேலைனு நினைச்சுதான் ஆரம்பிச்சு கிறுக்கினேன். அதையும் படிச்சுட்டு நல்லா இருக்குனு தமிழ் நாளிதழ் ஒன்னு (தினமலர்) பிரசுரிச்சு இருந்தாங்க. இது ஒரு சாதனைதான் என்ன பொறுத்தவரைக்கும்.


2. அடுத்து நம்ம ஜி கெளதம் அவங்க ஒரு தடாலடி போட்டி வெச்சிருந்தாங்க. படம் போட்டு அதுக்கு கவிஜ எழுதனும். அதுதான எனக்கு ஈசியான வேலையாச்சே. எழுதியிருந்தேனுங்க அதைய குங்குமத்துல கூட போட்டிருந்தாங்க. அதை படிச்சிட்டு என் நட்பு வட்டம் அடிச்ச நக்கலுக்கு அளவே இல்ல அது வேற விசயம்.

3. சுடர் ஏத்த சொன்னாங்கனு ஏத்துனேன் நானும் அது கொஞ்சம் உறுப்படியாதான் இருக்குனு எல்லாரும் சொன்னாங்க. அதனால அதையும் சேர்த்துட்டேன்.



4. காந்தார கலை பத்தி ஒரு பதிவு எழுதினேன் அது பூங்கா இதழில் வந்தது. பாவம் புத்தருக்கு கொஞ்சம் மரியாதை கிடைச்சது. :)

இன்னும் நிறைய சாதனைகள் பண்ணனும்னு ஆசைதான் ஆனா பாருங்க நமக்கு எழுதறது வரவே வராது. மத்தவங்கள நக்கல் பண்றது மட்டும் கொஞ்சம் நல்லா வரும் அதனால அதை மட்டுமே பண்ணிட்டு இருக்கேன். இப்டியே சொல்லிகிட்டே போன இதுக்கு பேரு விளம்பரம்னு சொல்லு வாங்க. அதனால (அதனால மட்டும்தான்) கொஞ்சம் என் பெருமைகளை அடக்கி வாசிக்கிறேனுங்க.

ஒன்னா ரெண்டா சொக்கா எட்டு சாதனைய போடனுமாமே என்ன போடுவேன் எப்படி போடுவேன். எதை போடுவேன். அதனால போதும் நிறுத்திக்கிறேன். இத்தோட நிறுத்திக்கிறேன். கிட்ட தட்ட எல்லாரும் எட்டு போட்டுட்டாங்க. இருந்தாலும் வடுவேனா எனக்கு கிடைச்சத அவங்களும் அனுபவிக்கனும்ல
நான் கூப்பிடற எட்டுபேரு

1. எப்பபாரு சீரியசா மட்டுமே பதிவு போடற கோபாலன்
2. சவுண்ட் பார்ட்டினு பேர் வெச்சிட்டு அமைதியா இருக்கற உதயகுமார்.
3. கபீர் பத்தி எழுதற திரு உமேஷ் அய்யா
4. கவுஜனு என்னமோ எழுதற கமல்ராஜா
5. எப்பவாது பதிவு போடும் மனசு
6. டெக்னிகலா எழுதற அருண்குமார்
7. மதுரைய சேர்ந்த (மீட்ட) பாண்டியன்
8. புதுகை பாண்டியன் அண்ணாச்சி (ஆங்கிலத்தில எட்டு போட்டாலும் பரவாயில்ல‍ை)

விளையாட்டின் விதிகள்:


1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Tuesday, July 03, 2007

இணைய நண்பர்கள் சந்திப்பு 3

சில ஒளிப்படங்கள்...


ரொம்ப பிசியா நடக்குது கூட்டம்.

போண்டா குடுக்கலீனு யாரும் சொல்லகூடாதுல்ல அதான் போண்டா மற்றும் கேசரியுடன் படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன்... :)



மழை வந்ததால் கூட்டம் வெளியில் இருந்து வீட்டுக்கு உள்புறம் சென்று தொடர்ந்தது.













Monday, July 02, 2007

இ‍ணைய நண்பர்கள் சந்திப்பு - 2

நேற்று காலை தொடங்கிய சந்திப்பில் அனல் பறந்ததுஎப்போதும் விளையாட்டாய் போகும் சந்திப்பு நேற்றோமிக சீரியசாய் போனது .சில விவாதங்கள் :
1.தமிழ்மணம் ஆரம்பிக்கபட்டதன் நோக்கம் என்ன -காசி அவர்களின் பதில்
2.. நான் வீரப்பனை பிடிக்கும்போது அந்த படையில்வேலை பார்த்தேன் துறை சார்ந்த ரகசியங்களைவெளியிடலாமா - ஓரு போலீஸ் அதிகாரி கேட்டார்
3.விடாது கருப்பு பல நன்மைகளும் செய்துள்ளார் -நண்பர் ஒருவர் தகவல்
4.கம் யூனிஸ்டுகள் 100 சதவீத தீர்வை தரமுடியுமா-செல்லா அதிரடி கேள்வி
5.அசுரனை ஏன் விலக்கினீர்கள் ,எனது கேள்விக்குமுத்தமிழ் நிர்வாகி திணறல்
6.பிளாக்கர்கள் இனி என்ன செய்யலாம் -அனைத்து ஊடகங்களிலும் பிரபலபடுத்தலாம் தகவல்
7.திருப்பூரில் இருந்து கலந்து கொண்ட ஓனர் ஒருவரின்வலைப்பூக்கள் பற்றிய கருத்து -நான் ஒரு திராவிட விரும்பி
8.தமிழ்மணத்தில் மக இக வின் ஆதிக்கமா - செல்லா குற்றச்சாட்டுஎதிர்பார்க்காத அளவு நிறைய பேர் கலந்து கொண்டதாலும் புதிதாக நிறைய பேர் வலைபதிவர் ஆகி இருப்பதும் வரவேற்க தக்க விசயங்கள்

இதெல்லாம் தியாகு எழுதியது இதன் விரிவான விளக்கம் அவரே எழுதுவாருங்க

கோவை இணைய நண்பர்கள் சந்திப்பு - 1

நேற்று (01-07-07) இணைய நண்பர்கள் சந்திப்பு கோவையில் இனிமையாக நடந்து முடிந்தது. ‍நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த சந்திப்பு மாலை 5.30 வரை அடாத மழையிலும் விடாது நடந்தது. இடம் கவுண்டம்பாளையத்தில் உள்ள மஞ்சூர் ராஜா அவர்களின் இல்ல மூன்றாம் தளத்தில் நடந்தது.
இதன் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என எண்ண வேண்டாம். ஏனெனில் இதில் கலந்து கொண்டவர்கள் வெறும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் மட்டும் அல்ல, முத்தமிழ் குழுமத்தில் உள்ளவர்கள் மற்றும் தமிழ்பயணி வலைதளத்தை சேர்ந்தவர்கள் எனவே இதற்கு பெயர் இணைய நண்பர்கள் சந்திப்பு என்று வைத்தோம்.

கலந்து கொண்டவர்கள் 15 பேர் கீ‍ழே பட்டியலில் உள்ளவர்கள்.

1. கமல்ராஜா

2. உமேஷ்

3. வின்சென்ட்

4. K.P.குப்புசாமி

5. காசி (தமிமணம்)

6. பாண்டியன்

7. வி.கனகராஜ்

8. ஓசை செல்லா

9. தியாகு

10. செந்தில்குமார்

11. யுவராஜ் சம்பத்

12. நம்பிக்கை பாண்டியன்

13. தமிழ்பயணி சிவா

14. மஞ்சூர் ராஜா

இவங்ககூட நானும் கலந்துகிட்டேன் :)


சரி இன்னும் என்ன பேசுனோம் அப்புறம் புகைப்படங்கள் எல்லாம் அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போதைக்கு கொஞ்சம் ஆணி புடுங்கனும் வர்ட்டா :)

Thursday, June 28, 2007

மழையில் ஓரிதழ்



பெருமழைக்கு
ஒடிந்து சிதறும்
வர்ண மலர்கள்
சாயம் போகவில்லை
ஓரிதழும்

Sunday, June 24, 2007

இணைய நண்பரகள் சந்திப்பு, கோவையில்

                   
அன்பின் நண்பர்களுக்கு வரும் ஜீலை 1 (ஒன்றாம்) தேதி ஞாயிறுகால‍ை 10.00 மணியளவில் கோ‍வையில் இணைய நண்பர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து நண்பர்களையும் வருக, வருக என இனிதே வரவேற்கிறேம்.


விழா குறித்து சில கேள்வியும் & பதிலும்...


        முதலில் இது எதற்க்கு? அவசியம் என்ன?


        குழுமங்கள் மற்றும் பல இணைய நண்பர்களின் நீண்ட நாள் சந்திப்புதிட்டம் செயலுக்கு வந்துள்ளது.


        யார், யார் கலந்துக்க?


        நீங்கள் வலைபதிவராகதான் இருக்கனும் என்று அவசியமில்லை, குழுமங்களில் கலக்குபவராக இருக்கலாம், மன்றங்களில் வெழுத்துக் கட்டுபவர்களாக இருக்கலாம், இணைய தளங்களில் ஊக்கத்துடன் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். அட அவ்வளவு ஏனுங்க சும்மா நடப்பதை எல்லாம்வேடிக்கை பார்ப்பவராக இருக்கலாம். இணையம் மற்றும் தமிழ் இவ்விரண்டேநம்மை இணைப்பதாக இருக்கும்.


        எதைப் பற்றி பேச?


        பல்வேறு தலைப்புகள் குறித்தும் பேசலாம். விரைவில் தலைப்புகள்பட்டியலிட படும்.


        அட இன்னமும் கிளம்பலையா...?


        சரி சரி நீங்க கேட்பது புரியுது யாரை தொடர்புக் கொள்ளனும் என்பது தானே உங்க கேள்வி...


        முத்தமிழ் மஞ்சூர் ராசா - 9443854163


        தமிழ்பயணி சிவா -             9894790836


        மின்னஞ்சல் முகவரி - vanusuya@gmail.com


       
வருகை தருபவர்கள் தவறாது முன்னதாக தொடர்புக் கொண்டால் தேவையான வசதிகள் செய்ய உதவியாக இருக்கும்.


இணைய நண்பர்களின் சந்திப்பு, கோவையில்....


        


வருவதாக உறுதியளித்துள்ளவர்கள் பெயர் பட்டியல்...







சிறப்பு 
விருந்தினராக தமிழ்மணம் நிறுவனர் திரு.காசிலிங்கம் அவர்கள்



1.முத்தமிழ் மஞ்சூர் ராசா

2.தமிழ்பயணி சிவா

3.திருப்பூர் தியாகு

4.அனுசுயா

5.ஆசாம் சிவா

6.கபீரன்பர் உமேசு

7.புதுகை பாண்டியன்

8.நாமக்கல் சிபி

9.ஜேகே

10.விஜய்

11.கமல்

12.ஆனந்த்



நீங்களும் உங்கள் வருகைய‍ை இங்கே பின்னூட்டமிடுவதன்
மூலம் உறுதி செய்யுங்கள்....

Monday, June 18, 2007

சிவாஜி படம் அனுவின் பார்வை

அப்பப்பா ஒரு ஆறு மாசமா ஆடி தள்ளுபடி, ஆட்சி மாற்றம், மழை, வெயில் கொடுமை எதுவுமே தெரியாத அளவு சிவாஜி பட வெள்ளத்துல மூழ்கடிச்சிடுச்சு நம்ம தமிழ்நாட்டு மக்கள. நான் பொதுவா சினிமாவுக்கே போக மாட்டேன் ஏதோ ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை போனா உண்டு. அப்டியாபட்ட நானே சிவாஜி படம் பாக்க வேண்டியதா போயிடுச்சு. எல்லாம் நேரம்....

என் கல்லூரி நண்பனோட கல்யாணத்துக்கு போயிட்டு வரும்போது நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து போயே ஆகனும்னு அடம்பிடிச்சு கூட்டிட்டு போயிட்டாங்க. இதுக்கு டிக்கட் விலை வேற ரொம்ப அதிகம் (ரொம்ப டூ மச் :( )

சரி சொந்த நொந்த கதை அப்புறம் படத்த பத்திய என் கருத்துக்கள் கீழே
ஞாபகம் வருதே ஞபாகம் வருதே

1. எத்தன நாளைக்கு ஒரு தனி மனிதன் ஆறு மாசத்துல நாட்ட திருத்துவான்னு படம் எடுப்பீங்க.? லஞ்சம் கேட்கற அதிகாரிங்ககிட்ட ஏன் நான் லஞ்சம் தரனும் எதுக்கு நான் தரனும்னு அதே கேள்விகள். (இந்தியன் படம் ஞாபகம் வருதே)
2.அப்புறம் திருடுன பணத்த பழைய பேப்பர் கூட ஒழிச்சு வெக்கிறது (ஜென்டில்மேன் படம் ஞாபகம் வருதே)
3. பாடல் காட்சிகள் குறிப்பா சகானா பட காட்சி அமைப்புகள் (ஜீன்ஸ் படம் ஞாபகம் வருதே)
4. அதே போல ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் 250கோடி சம்பாதிக்க எவ்வளவு வருசம் பாடுபடனும் அதே மாதிரி படிச்சு முடிக்கவே 25 வருசம் போயிடும் அப்டீனா அவரோட வயசு என்ன அந்த வயசுல காதல் பண்ணி கல்யாணம் பண்ணி இப்டி லாஜிக் ரொம்ப இடிக்குதே? (லாஜிக் பார்த்தா சினிமாவே பாக்க முடியாதுனு என் ப்ரெண்ட் சொன்னா அது கரெக்ட்தானுங்க :) )

சிறப்பு அம்சம்
1. நல்ல நகைச்சுவை காட்சிகள் பரவாயில்ல வாய்விட்டு சிரிக்க வெக்கறாங்க சில இடங்கள்ள.
2. ரஜினி நடிப்பு பரவாயில்ல நல்லாயிருக்கு.
3. இசை சிறப்பாயிருக்கு ஆனா பாடல் வரிகள் புரியற மாதிரி அமைச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

இதெல்லாம் என்னோட சின்ன அறிவுக்கு எட்டுன விசயங்கள். எனக்கு இருக்கற சின்ன மூளைக்கு இவ்ளோதான் யோசிக்க முடிஞ்சுது. என் கேள்வி ஒன்னே ஒன்னுதான் கடைசியா, இவ்ளோ செலவு பண்ணி இவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாருமா சேர்ந்து இந்த படம்தான் எடுக்க முடிஞ்சுதா? கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம். :)

Monday, June 04, 2007

இது வெறும் விளம்பர பதிவு :)

வணக்கம் மக்களே ரொம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு. எல்லாம் இந்த அப்ரைஸல் பண்ற வேலை. தலை சூடானதுதான் மிச்சம் வேற ஒன்னும் காணோம். எவ்ளோ நேரந்தான் வேலை செய்யறா மாதிரியே நடிக்கறது அதான் திரும்ப பதிவு போட வந்துட்டேன். கடந்த ஒரு மாசத்துல பெரிசா ஒன்னும் நடக்கல அது அது அப்டி அப்டியேதான் போயிட்டு இருக்கு. நம்ம கச்சேரி தேவ் போட்ட பதிவுல மிகப்பெரிய கமெண்ட் (கதை) எழுதுனது தவிர வேற ஒன்னும் பெரிசா கானோம்.

அதுபோக ரெண்டு வாரம் முன்ன நம்ம பாலா அண்ணாச்சி மற்றும் ரவி, செல்லா தலைமைல வெற்றிகரமா ப்ளாக்கர் மீட் முடிஞ்சிருக்கு. உண்மையா பாராட்ட வேண்டிய விசயம். எனக்கு வேற சில சொந்த வேலை இருந்ததால போக முடியல. அடிச்சு பிடிச்சு போய் ரவியையும் வனஜ்ராஜாவையும் சந்திச்சேன். இதுல நம்ம பாலா அண்ணாச்சிக்கு போன் பண்ணா திட்டுவாருனு பயந்து போன் பண்ணல அதனால அவரு மனம் வருத்தமடைஞ்சு பதிவெல்லாம் போட்டாரு. (சாரிங்க :( ).




ஒரு மனுசி வேலை நல்லா பண்றானா அதுக்காக இப்டியா திரும்ப திரும்ப ஆணிய குடுத்து உக்கார வைக்கிறது முடியலப்பா சாமி. ஒரு ப்ளாக் எழுத முடியல ப்ளாக்ல போட்ட கமெண்ட்டுக்கு பதில் போட முடியல என்ன கொடுமை இது சாமி (டயலாக் மாத்திட்டேன் :)). இந்த நேரத்தில நம்ம நண்பர்கள் எல்லாரும் மெயில் அனுப்பி கேட்கிறாங்க. நீங்க ப்ளாக் எழுதறத நிறுத்திட்டீங்களானு? (உள்ளுக்குள்ள அவங்களுக்கெல்லாம் சின்ன சந்தோசம்). இல்லீங்க நான் இன்னும் உங்களையெல்லாம் சுலபமா விட்டுற மாட்டேன். வந்துட்டேயிக்கேனுங்க. :)

Saturday, April 21, 2007

தமிழ்நாடு தேசிய மலர்


சித்திரை கனி முடிஞ்சு ஆபீஸ் வந்தவுடன் என் சகா ஒருத்தரு கேரளா காரர் தன் கணிணி பெட்டியில் மஞ்சள் நிற கனி பூ படம் வச்சிருந்தாரு. நான் போ்ய் இந்த பூ எனக்கு ரொம்ப பிடிக்கும் இதோட பேர் என்னங்கனு கேட்டேன். உடனே அவரு இதுக்கு பேரு கனிக்கொன்னா பூ இத வச்சுதான் நாங்க விஷு பண்டிகை கொண்டாடுவோம்னு சொன்னாரு. அத்தோட விட்டா பரவாயில்ல இதுதான் எங்க மாநிலத்தோட பூ (State flower of Kerala) அப்டீனு சொன்னாரு. சொல்லிட்டு உங்க மாநில பூ எதுனு வேர கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி. அதுலதான் பிரச்னையே நானும் தேடறேன் தேடறேன் தேடிட்டேயிருக்கேன். கிடைக்க மாட்டேங்குது.


கூகுள் ஆண்டவர கேட்டேன், விக்கி அண்ணன கேட்டேன் ஒன்னும் பிரயோசனம் இல்ல. என் அரட்டையில ஸ்டேடஸ் போட்டு பார்த்தேன். என் நண்பர்களுக்கும் தெரியல. சிலரு சட்னு தாமரைனு சொல்லி சிரிக்க வெச்சாங்க. சிலர் அப்டி ஒரு விசயம் இருக்கானு கேள்வி கேட்டாங்க. இப்டியே போகுதே தவிர பதில் இன்னும் கிடைக்கல. நம்ம ப்ளாக்க படிக்கற மக்கள் யாராவது விபரம் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா மாநிலங்களுக்குனு மலர் உண்டா? அதாவது தேசிய மலர் போல. அப்டியிருந்தா நம்ம மாநில மலர் எதுனு ‍சொல்லுங்க? அது சம்பந்தமா இணையத்துலயிருந்தா லிங்க் கொடுங்கப்பா.

Wednesday, April 18, 2007

அழகே அழகே

அழகு பத்தி எழுத சொல்லி தேவ் சொல்றாரு ஆனா பாருங்க எனக்கு இந்த சனி உச்சத்துல இருக்கும் போலயிருக்கு. கடந்த 2 வாரமா வீட்டுல இணையம் வேலை செய்யில சரினு ஆபீஸ் வந்தா தமிழ் வர மாட்டேங்குது இப்டி பல பிரச்னைகளுக்கு நடுவுல ஒரு வழியா சுடர ஏத்தி முடிச்சுட்டு பாத்தா நம்ம தேவ் அழகபத்தி எழுத சொலறாரு. ம்ம்ம்ம்... எனக்கு எது அழகுனு தோணுதோ அதை பத்தி ‍எழுதறேன்.

1. மலர்கள்


எனக்கு அழகுனு சொன்னவுடனே ஞாபகம் வரது மலர்கள்தான். எந்த பூவ பார்த்தாலும் எனக்கு அழகாதான் தெரியுது. எங்க பூ படம் பார்த்தாலும் புடிச்சு நம்ம கணிணியில நிறைச்சுடுவேன் :). மலர்களை பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் தனியானது.

2. இயற்கை

அழகுங்கறது என்ன பொருத்தவரைக்கும் மனதுக்கு உற்சாகம் தரக்கூடியதா இருக்கனும் அப்டி பார்த்தா இயற்கைய விட்டா சிறந்த அழகு எதுவும் இல்லை. மலைகள், பச்சை பசும் புல் வெளிகள், பனிவிழும் காலை நேரம், பறவைகள், பூக்கள் இப்டி சொல்லிகிட்டே போகலாம். இயற்கையில எல்லாமே அழகுதான்.

3. புன்னகை

மனுசனோட முகம் எப்டியிருந்தாலும் சரி புன்னகை செய்யும்போது அழகா ஆயிடுவாங்க அது புன்னகையின் சிறப்பு. எவ்ளோ அழகான முகமாயிருந்தாலும் புன்னகையில்லாம உம்முனு இருந்தா அழகு கெட்டு போயிடுது. ஒரு சின்ன புன்னகை மிக அழகா மாத்திடும். எனக்கு புன்னகை செய்யற முகம் எல்லாம் அழகுதான் :)

4. கருணை முகம்

பொதுவா எல்லாருக்கும் அவங்கஅவங்க அம்மாதான் முதல் அழகி. அவங்க எப்டியிருந்தாலும் அவங்க முகம் மடடும்தான் அழகா தெரியும் எல்லா குழந்தைகளுக்கும் அதுக்கு ஒரே காரணம் அன்புதான். எவ்ளோ முகங்களை பார்த்தாலும் அவங்க அம்மா முகம் மட்டும் அழக தெரிய காரணம் அவங்களோட தூய்மையான அன்புதான். அன்னை தெரசா எல்லாருக்கும் அழகா தெரிய காரணமும் அன்பு கருணைதான். நம்மிடம் அன்பா இருக்கற எல்லாரோட முகமும் அவங்கவங்களுக்கு அழகுதான்.

5. குழந்தைகள்.

எந்த நிறம் சாதி உயரம் எடை எப்டியிருந்தாலும் எல்லா குழந்தைகளும் அழகுதான். அவங்க சிரிப்பு அழுகை எல்லாமே அழகுதான்.

அப்பாடி எப்டியோ தேவ் எழுத சொன்னத எழுதிட்டேன்.

நான் கூப்பிடறவங்க...

கொங்கு ராசா
இளா.
இராகவன்

Wednesday, April 11, 2007

சுட்டும் விழிச் சுடரே...

இத்தனை பெரியவர்கள் ஏந்திய சுடரை நம்பிக்கையுடன் இச்சிறுப் பெண்ணிடம்கொடுத்த அய்யா ஞானவெட்டியான் அவர்களுக்கு நன்றி. என்னால் இயன்ற வரை சுடரைசிறப்பாக ஏற்ற முயற்சித்துள்ளேன்.

1.இக்காலகட்டத்தில், பணிபுரியும் மங்கையருக்கு உண்டாகும், அல்லது பிறரால் உருவாக்கப்படும் சரவல்கள் எத்தன்மையது? அவைகளால் ஏற்படும் மனத் தாக்கத்தைப்போக்க அல்ல எதிர்கொள்ள எடுக்கவேண்டிய செயல்கள் என்ன?

முதலில் சரவல்கள் என்றால் சரியாக விளங்கவில்‍லை எனினும் இடையூறுகள் எனக்கொண்டு நான் பதில் கூறுகிறேன். பொதுவாக தற்காலத்தில் பணிபுரியும் மங்கையர்கள் மட்டும் அல்ல, அந்த காலத்தில் இருந்து பெண் வெளியே செல்லும் போது பலப்பல இடையூறுகளை சந்தித்துதான் வருகிறாள். ஆனால் இக்காலகட்டத்தில் சற்று குறைந்துள்ளது என்பது எனது கருத்து. ஆனால் இந்த சரவல்களை சமாளிக்க முதலில் பெண்களுக்குள்ளே ஒற்றுமை வேண்டும். அது கொஞ்சம் குறைவாகவே உள்ளது என்பது என் கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட படித்த பெண்களிடம் இருப்பதில்லை.

பிரச்சினைகள் அற்ற மனிதர்கள் தான் யார் உள்ளனர். பெண்களுக்கு வரும் பிரச்சினைகள் மட்டும் பிரச்சினையா உடல் ஊனமுற்ற நண்பர்களுக்கு வருவதை காணும் போது பெண்கள் பிரச்சினை எனப்படும் வாய்க் கேலி போன்றவை சற்று தாக்கம் குறைவாகவே இருக்கும்.நமது பிரச்சினையை பிறரிடம் தொடர்ந்து சொல்லுவதால் புலம்பல்வாதி (புலம்பல் கேசு) என்ற பெயர்தான் கிடைக்கும். முடிந்த அளவு ஒரு பிரச்சினைக்கு தீர்வை கண்டறிதல்தான் அவசியம். சரவல்களை விளக்கி பலருக்கும் சொல்லுவதால் முன்னேற்றம் ஏதும் கிடையாதே.

"குற்றம் பார்க்கின் சுற்றம் கிடையாது"

2.இணைய அனுபவம் எப்படி உள்ளது? வலைப்பூக்களில் நிலவி வரும் சாதி சமய, ஆத்திக நாத்திக விவாதங்களால் அவைகளைப் படிப்பவரின் மன நிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? இவைகளால் பயனுண்டா? அல்லது கால விரயமா?

இணைய அனுபவம் என்னை பொறுத்த வரையில் மசாலா கலவை போல எல்லா சுவையும் கலந்தே இருக்கிறது. ஆனால் நிறைய நல்ல நண்பர்களை அறிமுகம் செய்தது இந்த இணையம்தான். மேலும் சில எதிர்கருத்துக்களை அறிய உதவியதும் இணையம்தான் சில விசயங்களில் இப்படி கூட யோசிக்க முடியுமா என வியக்கவும் வைத்துள்ளது.

சாதி, சமய, ஆத்திக, நாத்திக விவாதங்கள் இன்று இந்த இணையத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்லவே. இது தொன்று தொட்டு பல பெயர்களில் நடைபெற்றுள்ளது. சைவ, வைணவ சண்டை, பகுத்தறிவு பற்றிய சர்ச்சை, மத சண்டை, பெண்ணுரிமை இப்படி பல தலைப்புகளில் விவாதங்கள் பழங்காலத்தில் இருந்து நடந்து கொண்டே உள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக காணோம். ‍வெறும் அரசியலுக்கும் புகழ் பெறவும் மட்டுமே உதவுகிறது என்பது என் கருத்து. என்னதான் விவாதங்கள் நடத்தினாலும் இன்னும் தெய்வ வழிபாடு செய்பவர்களும் தெய்வத்தை எதிர்பவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த விவாதம் அவர்களுக்கு உதவாது சொந்த அனுபவம், வாழ்க்கை சூழ்நிலை மட்டுமே இதை தீர்மானிக்கிறது.

இந்த விவாதங்களால் மன அமைதி பாதிப்படைகிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். சில விவாதங்களை பார்க்கும்போது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களோ என எண்ணத் தோன்றுகிறது. விவாதிப்பவர்கள் ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். நாம் கூறும் கருத்துக்கு கட்டாயம் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதை விடுத்து நாம் சொல்லும் கருத்து மட்டும் மிகச்சிறந்தது இதை விட வேறு இல்லை என எண்ணக்கூடாது.

"கற்றது கைம்மண் அளவு.. கல்லாதது உலகளவு"

3. "தமிழ் வாழவேண்டும்; அழிந்துவிடலாகாது." இது குறித்து இன்றைய இளைய தலைமுறையினரின் கருத்து என்ன? செயல்கள் எப்படி உள்ளன?

இந்த கால இளைஞர்களிடம் தமிழ் நன்றாகவே வளர்ந்து வருகிறது என்பது என் கருத்து. தினம் தோன்றும் தமிழ் வலைப்பூக்களை பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்த இளைய தலைமுறையினர் யாரும் தமிழ் வாழ்க என கோஷம் போட்டு அதை செயல் படுத்துவதில்லை அமைதியாக தங்களின் கருத்துக்களை கணிணியில் தட்டிவிட்டு இருந்து விடுகிறார்கள். வீதியில் வந்து போராட்டம் நடத்த தயாராக இல்லை. படிக்கும்வரை எப்படியோ ஆனால் படித்து வேலையில் அமர்ந்த பின்பு தங்களின் தாய்மொழி மீதான பற்று அதிகப்படுவதாகவே தோன்றுகிறது.

"காய்த்த மரமே கல்லடி படும்"

4.மங்கையரின் சுதந்திரம் பற்றித் தங்களின் கருத்துக்களை விரிவாக எழுதவும்.

மங்கையரின் சுதந்திரம் பற்றி என் கருத்து மங்கையர்க்கு தேவையான அளவு சுதந்திரம் இருக்கிறது. இதை பயன்படுத்தி முன்னேற வேண்டியது பெண்களின் வேலைதான். இந்தியஅரசின் அரசியல் அமைப்பில் இருந்து நடைமுறை வாழ்க்கை வரை பெண்ணுக்கு படிப்பு, உடை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கருத்து என அனைத்திலும் முழு சுதந்திரம் இருந்து கொண்டுதான் உள்ளது. அதை பயன்படுத்தி முன்னேற வழி பார்க்க வேண்டும் அதை விடுத்து பெண்ணுரிமை சுதந்திரம் என பேசிக்கொண்டே இருப்பது அநாவசியம். சுதந்திரம் அதிகம் உள்ள மேற்கத்திய நாடுகளில் கூட பெண் அதிபர்களோ அதிகபட்சம் பெண்கள் அரசியலில் சாதித்ததோ இல்லை ஆனால் இந்தியாவில் மட்டுமே பெண்கள் அரசியலில் கூட அதிக அளவில் சாதித்துள்ளார்கள்.
இந்த வலைப்பூவில் எடுத்துக்கொண்டால் கூட பெண் வலைபதிவர்கள் இடும் பதிவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பல ஆண் வலைபதிவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் மிக குறைந்த எணணிக்கையில் பெண்கள் இருப்பதால் அதிக அளவில் கவனிக்கப்படுகிறார்கள் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும் அதிகம். இங்கு பெண் எதிர் கொள்ளும் அதே அளவு பிரச்னைகளை ஆண்களும் எதிர் கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த கருத்துகள் அவ்வளவாக முக்கியத்துவம் பெறுவதில்லை. இதை நல்ல விதமாக உபயோகிக்க வேண்டிய கடமை பெண் பதிவர்களுக்கு உள்ளது. பெண் முயற்சி செய்தால் முன்னேற இந்த நாடு எல்லா உதவியும் செய்கிறது. ஆனால் இது பத்தாது என்று மேலும் பல சிறப்பு சலுகைகளை எதிர்பார்ப்பது அநாவசியம் என்பதே என் கருத்து.

"மாதா பிதா குரு தெய்வம் "

5.தங்களுக்குப் பிடித்த தங்களின் பதிவு, அல்லது மிகவும் பிடித்த தலைப்பில் ஒரு பதிவை இடவும்.
இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி பதிவு எழுதுனதே இல்லீங்க (பதிவு ஏதாவது போட்டாதான :)) எனக்கு பிடித்த தலைப்பில் பதிவு இனிவரும் நாட்களில் எழுதலாம் என எண்ணியுள்ளளேன். இப்போதைக்கு இந்த சுடரை ஏத்திட்டேன்.

"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்"

அடுத்தது நமது பெயரிலி(அனானி) புகழ் செந்தழல் இரவி அவர்களிடம் ஒப்படைக்கிறேன்.
அவருக்கு வைக்க ஆசைப்படும் ஆப்புகள்..

1. சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்த வளாகத்தேர்வுகள் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. இந்த போக்கின் எதிர்காலம் என்ன?

2. E-lanes வகை வேலைகள் தமிழர்கள் எந்த அளவு பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். நடைமுறையில் இந்த வகை வேலைகளின் எதிர்காலம் மற்றும் வெற்றி சாத்தியகூறுகள் என்ன?

3. நாஸ்காம் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் குடுத்துள்ள அறிக்கையில் 25% மாணவர்கள் கூட வேலைக்கு தகுதியற்றவர்கள் என கூறியுள்ளது. இது குறித்து தங்களின் சொந்த கருத்து மற்றும் சொந்த அனுபவம் என்ன?

4. இந்த கால இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்த பின்பு பொருளாதாரத்தை எதிர்காலத்திற்காக சேர்ப்பவர்கள் அதிகமா? அல்லது ஆடம்பரத்தில் மூழ்கி விடுகிறார்களா?

5. இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலையின் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்மற்ற துறையினரின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் பாதிக்கப் படுகிறது. இந்த அதீத ஊதியம் பற்றிய தங்களின் கருத்துதேவைதானா?

Saturday, March 31, 2007

காந்தாரக் கலை

நமது பள்ளிகளில் இன்றும் மறவாது சொல்லிதரும் வரலாற்றில் முக்கியமானது காந்தாரக் கலை. இது புத்தமதத்தின் சார்பாக தோன்றி அதிகம் அது குறித்த கலைச் செல்வங்களை வழங்கி மறைந்த ஒன்றாகும். பாகிஸ்தான் தேசம் இந்த வாரத்தை (ஏப்ரல் 1வரை) காந்தாரக் கலை வாரமாக கொண்டாடுகிறது. பல்வேறு நெளிவு,சுளிவுகளை கொண்ட கலைப் படைப்புகளை தன்னகத்தே கொண்டது காந்தாரக் கலை. சில ஒளிப்படங்கள்...




புத்தரின் சிலை



புத்தர் பெருமான் தனது சீடர்களுடன் கையில்
கப்பறை எனும் உணவுஏற்க்கும் பாத்திரத்துடன் அமர்ந்துள்ளார். மேலாடையும், சிகையும் சுருள் வடிவம்பெற்றதே காந்தாரக் கலை எனப்படும். இனி வருவது நம் தாய்குலங்களுக்காக. அவர்கள் ஆதரவு இன்றி எந்தநாகரீகமும் வளராதே. இன்னமும் சொல்ல போனால் அவர்கள் தான் நாகரீகஅளவுக்கோல் ஆவர்கள்.



தங்க காதணிகள்.






தங்க கைக்காப்பு(Bracelet)




தங்க நெக்லஸ்

அடுத்து வருவது... புத்தப் பெருமான் அழகிய உருவம்



புத்தரின் தியான முத்திரை



புத்தரின் முகம்



தாமரை மலர் ஏந்திய புத்தர் கரம்



புத்தப் பெருமானின் அழகிய உருவச் சிலை.

இவ்வளவு அன்பு, அஹிம்சை என்று போதித்தும் காந்தாரகலை எனும் அழகிய ஒரு கலையால் அமைக்கப் பட்ட ஒரு படைப்புக்குநம் மனித இன நவநாகரீக வளர்ச்சியில் ஏற்பட்ட நிலைமை என்ன தெரியுமா... ஆம். இரத்தக் கண்ணீர் விட ‍வேண்டிய படம்தான் கலங்கிய மனதுடன்...



தீவிரவாதிகளால் அழிக்கப் பட்ட பாமியான் குன்றுச் சிலை. இடது புறம்(முதல் பாகம்) சிலை உள்ளது. முன்புறம் ஒரு மனிதன் நின்றுக் கொண்டு உள்ளான் பாருங்கள். மனிதனை விட எவ்வளவுஉயரம் அப்பப்பா. வலது புறம் (இரண்டாம் பாகம்) ஏவுகணை மற்றும்பீரங்கி தாக்குதலால் அழிக்கப் பட்டு விட்டு காலியாகி விட்ட இடம்.இங்கும் முன்புறம் பல மனிதர்கள் நின்று கொண்டு உள்ளார். இனிவரும் நாட்களிலாவது கருணையும், சகிப்பு தன்மையும்உலகெங்கும் பரவட்டும். புத்தம் தர்மம் கச்சாமி...!!! சங்கம் தர்மம் கச்சாமி...!!!