Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Wednesday, July 11, 2007

எட்டாவது சாதனைகள்

நம்ம கச்சேரி தேவ் என்னைய எட்டு போட்டு காட்டி‍யே ஆகனும்னு சொல்லிபுட்டாக அவரு கூப்புட்ட எல்லாரும் போட்டுட்டாங்க நான்தேன் கடைசி. ம் என் எட்டு சாதனைகள் கீழே போடறேன் யாரும் பயந்து அல்லது வெறுத்து போயி திட்டாதீங்க.

‍என் வலையுலக சாதனை

1. முதன் முதல்ல பதிவு எழுதுனப்ப நமக்கு (இந்தியாவும் உலக அதிசயமும்) என்ன எழுத தெறியும் சும்மா வெட்டி வேலைனு நினைச்சுதான் ஆரம்பிச்சு கிறுக்கினேன். அதையும் படிச்சுட்டு நல்லா இருக்குனு தமிழ் நாளிதழ் ஒன்னு (தினமலர்) பிரசுரிச்சு இருந்தாங்க. இது ஒரு சாதனைதான் என்ன பொறுத்தவரைக்கும்.


2. அடுத்து நம்ம ஜி கெளதம் அவங்க ஒரு தடாலடி போட்டி வெச்சிருந்தாங்க. படம் போட்டு அதுக்கு கவிஜ எழுதனும். அதுதான எனக்கு ஈசியான வேலையாச்சே. எழுதியிருந்தேனுங்க அதைய குங்குமத்துல கூட போட்டிருந்தாங்க. அதை படிச்சிட்டு என் நட்பு வட்டம் அடிச்ச நக்கலுக்கு அளவே இல்ல அது வேற விசயம்.

3. சுடர் ஏத்த சொன்னாங்கனு ஏத்துனேன் நானும் அது கொஞ்சம் உறுப்படியாதான் இருக்குனு எல்லாரும் சொன்னாங்க. அதனால அதையும் சேர்த்துட்டேன்.



4. காந்தார கலை பத்தி ஒரு பதிவு எழுதினேன் அது பூங்கா இதழில் வந்தது. பாவம் புத்தருக்கு கொஞ்சம் மரியாதை கிடைச்சது. :)

இன்னும் நிறைய சாதனைகள் பண்ணனும்னு ஆசைதான் ஆனா பாருங்க நமக்கு எழுதறது வரவே வராது. மத்தவங்கள நக்கல் பண்றது மட்டும் கொஞ்சம் நல்லா வரும் அதனால அதை மட்டுமே பண்ணிட்டு இருக்கேன். இப்டியே சொல்லிகிட்டே போன இதுக்கு பேரு விளம்பரம்னு சொல்லு வாங்க. அதனால (அதனால மட்டும்தான்) கொஞ்சம் என் பெருமைகளை அடக்கி வாசிக்கிறேனுங்க.

ஒன்னா ரெண்டா சொக்கா எட்டு சாதனைய போடனுமாமே என்ன போடுவேன் எப்படி போடுவேன். எதை போடுவேன். அதனால போதும் நிறுத்திக்கிறேன். இத்தோட நிறுத்திக்கிறேன். கிட்ட தட்ட எல்லாரும் எட்டு போட்டுட்டாங்க. இருந்தாலும் வடுவேனா எனக்கு கிடைச்சத அவங்களும் அனுபவிக்கனும்ல
நான் கூப்பிடற எட்டுபேரு

1. எப்பபாரு சீரியசா மட்டுமே பதிவு போடற கோபாலன்
2. சவுண்ட் பார்ட்டினு பேர் வெச்சிட்டு அமைதியா இருக்கற உதயகுமார்.
3. கபீர் பத்தி எழுதற திரு உமேஷ் அய்யா
4. கவுஜனு என்னமோ எழுதற கமல்ராஜா
5. எப்பவாது பதிவு போடும் மனசு
6. டெக்னிகலா எழுதற அருண்குமார்
7. மதுரைய சேர்ந்த (மீட்ட) பாண்டியன்
8. புதுகை பாண்டியன் அண்ணாச்சி (ஆங்கிலத்தில எட்டு போட்டாலும் பரவாயில்ல‍ை)

விளையாட்டின் விதிகள்:


1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Wednesday, April 18, 2007

அழகே அழகே

அழகு பத்தி எழுத சொல்லி தேவ் சொல்றாரு ஆனா பாருங்க எனக்கு இந்த சனி உச்சத்துல இருக்கும் போலயிருக்கு. கடந்த 2 வாரமா வீட்டுல இணையம் வேலை செய்யில சரினு ஆபீஸ் வந்தா தமிழ் வர மாட்டேங்குது இப்டி பல பிரச்னைகளுக்கு நடுவுல ஒரு வழியா சுடர ஏத்தி முடிச்சுட்டு பாத்தா நம்ம தேவ் அழகபத்தி எழுத சொலறாரு. ம்ம்ம்ம்... எனக்கு எது அழகுனு தோணுதோ அதை பத்தி ‍எழுதறேன்.

1. மலர்கள்


எனக்கு அழகுனு சொன்னவுடனே ஞாபகம் வரது மலர்கள்தான். எந்த பூவ பார்த்தாலும் எனக்கு அழகாதான் தெரியுது. எங்க பூ படம் பார்த்தாலும் புடிச்சு நம்ம கணிணியில நிறைச்சுடுவேன் :). மலர்களை பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் தனியானது.

2. இயற்கை

அழகுங்கறது என்ன பொருத்தவரைக்கும் மனதுக்கு உற்சாகம் தரக்கூடியதா இருக்கனும் அப்டி பார்த்தா இயற்கைய விட்டா சிறந்த அழகு எதுவும் இல்லை. மலைகள், பச்சை பசும் புல் வெளிகள், பனிவிழும் காலை நேரம், பறவைகள், பூக்கள் இப்டி சொல்லிகிட்டே போகலாம். இயற்கையில எல்லாமே அழகுதான்.

3. புன்னகை

மனுசனோட முகம் எப்டியிருந்தாலும் சரி புன்னகை செய்யும்போது அழகா ஆயிடுவாங்க அது புன்னகையின் சிறப்பு. எவ்ளோ அழகான முகமாயிருந்தாலும் புன்னகையில்லாம உம்முனு இருந்தா அழகு கெட்டு போயிடுது. ஒரு சின்ன புன்னகை மிக அழகா மாத்திடும். எனக்கு புன்னகை செய்யற முகம் எல்லாம் அழகுதான் :)

4. கருணை முகம்

பொதுவா எல்லாருக்கும் அவங்கஅவங்க அம்மாதான் முதல் அழகி. அவங்க எப்டியிருந்தாலும் அவங்க முகம் மடடும்தான் அழகா தெரியும் எல்லா குழந்தைகளுக்கும் அதுக்கு ஒரே காரணம் அன்புதான். எவ்ளோ முகங்களை பார்த்தாலும் அவங்க அம்மா முகம் மட்டும் அழக தெரிய காரணம் அவங்களோட தூய்மையான அன்புதான். அன்னை தெரசா எல்லாருக்கும் அழகா தெரிய காரணமும் அன்பு கருணைதான். நம்மிடம் அன்பா இருக்கற எல்லாரோட முகமும் அவங்கவங்களுக்கு அழகுதான்.

5. குழந்தைகள்.

எந்த நிறம் சாதி உயரம் எடை எப்டியிருந்தாலும் எல்லா குழந்தைகளும் அழகுதான். அவங்க சிரிப்பு அழுகை எல்லாமே அழகுதான்.

அப்பாடி எப்டியோ தேவ் எழுத சொன்னத எழுதிட்டேன்.

நான் கூப்பிடறவங்க...

கொங்கு ராசா
இளா.
இராகவன்

Wednesday, April 11, 2007

சுட்டும் விழிச் சுடரே...

இத்தனை பெரியவர்கள் ஏந்திய சுடரை நம்பிக்கையுடன் இச்சிறுப் பெண்ணிடம்கொடுத்த அய்யா ஞானவெட்டியான் அவர்களுக்கு நன்றி. என்னால் இயன்ற வரை சுடரைசிறப்பாக ஏற்ற முயற்சித்துள்ளேன்.

1.இக்காலகட்டத்தில், பணிபுரியும் மங்கையருக்கு உண்டாகும், அல்லது பிறரால் உருவாக்கப்படும் சரவல்கள் எத்தன்மையது? அவைகளால் ஏற்படும் மனத் தாக்கத்தைப்போக்க அல்ல எதிர்கொள்ள எடுக்கவேண்டிய செயல்கள் என்ன?

முதலில் சரவல்கள் என்றால் சரியாக விளங்கவில்‍லை எனினும் இடையூறுகள் எனக்கொண்டு நான் பதில் கூறுகிறேன். பொதுவாக தற்காலத்தில் பணிபுரியும் மங்கையர்கள் மட்டும் அல்ல, அந்த காலத்தில் இருந்து பெண் வெளியே செல்லும் போது பலப்பல இடையூறுகளை சந்தித்துதான் வருகிறாள். ஆனால் இக்காலகட்டத்தில் சற்று குறைந்துள்ளது என்பது எனது கருத்து. ஆனால் இந்த சரவல்களை சமாளிக்க முதலில் பெண்களுக்குள்ளே ஒற்றுமை வேண்டும். அது கொஞ்சம் குறைவாகவே உள்ளது என்பது என் கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட படித்த பெண்களிடம் இருப்பதில்லை.

பிரச்சினைகள் அற்ற மனிதர்கள் தான் யார் உள்ளனர். பெண்களுக்கு வரும் பிரச்சினைகள் மட்டும் பிரச்சினையா உடல் ஊனமுற்ற நண்பர்களுக்கு வருவதை காணும் போது பெண்கள் பிரச்சினை எனப்படும் வாய்க் கேலி போன்றவை சற்று தாக்கம் குறைவாகவே இருக்கும்.நமது பிரச்சினையை பிறரிடம் தொடர்ந்து சொல்லுவதால் புலம்பல்வாதி (புலம்பல் கேசு) என்ற பெயர்தான் கிடைக்கும். முடிந்த அளவு ஒரு பிரச்சினைக்கு தீர்வை கண்டறிதல்தான் அவசியம். சரவல்களை விளக்கி பலருக்கும் சொல்லுவதால் முன்னேற்றம் ஏதும் கிடையாதே.

"குற்றம் பார்க்கின் சுற்றம் கிடையாது"

2.இணைய அனுபவம் எப்படி உள்ளது? வலைப்பூக்களில் நிலவி வரும் சாதி சமய, ஆத்திக நாத்திக விவாதங்களால் அவைகளைப் படிப்பவரின் மன நிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? இவைகளால் பயனுண்டா? அல்லது கால விரயமா?

இணைய அனுபவம் என்னை பொறுத்த வரையில் மசாலா கலவை போல எல்லா சுவையும் கலந்தே இருக்கிறது. ஆனால் நிறைய நல்ல நண்பர்களை அறிமுகம் செய்தது இந்த இணையம்தான். மேலும் சில எதிர்கருத்துக்களை அறிய உதவியதும் இணையம்தான் சில விசயங்களில் இப்படி கூட யோசிக்க முடியுமா என வியக்கவும் வைத்துள்ளது.

சாதி, சமய, ஆத்திக, நாத்திக விவாதங்கள் இன்று இந்த இணையத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்லவே. இது தொன்று தொட்டு பல பெயர்களில் நடைபெற்றுள்ளது. சைவ, வைணவ சண்டை, பகுத்தறிவு பற்றிய சர்ச்சை, மத சண்டை, பெண்ணுரிமை இப்படி பல தலைப்புகளில் விவாதங்கள் பழங்காலத்தில் இருந்து நடந்து கொண்டே உள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக காணோம். ‍வெறும் அரசியலுக்கும் புகழ் பெறவும் மட்டுமே உதவுகிறது என்பது என் கருத்து. என்னதான் விவாதங்கள் நடத்தினாலும் இன்னும் தெய்வ வழிபாடு செய்பவர்களும் தெய்வத்தை எதிர்பவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த விவாதம் அவர்களுக்கு உதவாது சொந்த அனுபவம், வாழ்க்கை சூழ்நிலை மட்டுமே இதை தீர்மானிக்கிறது.

இந்த விவாதங்களால் மன அமைதி பாதிப்படைகிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். சில விவாதங்களை பார்க்கும்போது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களோ என எண்ணத் தோன்றுகிறது. விவாதிப்பவர்கள் ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். நாம் கூறும் கருத்துக்கு கட்டாயம் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதை விடுத்து நாம் சொல்லும் கருத்து மட்டும் மிகச்சிறந்தது இதை விட வேறு இல்லை என எண்ணக்கூடாது.

"கற்றது கைம்மண் அளவு.. கல்லாதது உலகளவு"

3. "தமிழ் வாழவேண்டும்; அழிந்துவிடலாகாது." இது குறித்து இன்றைய இளைய தலைமுறையினரின் கருத்து என்ன? செயல்கள் எப்படி உள்ளன?

இந்த கால இளைஞர்களிடம் தமிழ் நன்றாகவே வளர்ந்து வருகிறது என்பது என் கருத்து. தினம் தோன்றும் தமிழ் வலைப்பூக்களை பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்த இளைய தலைமுறையினர் யாரும் தமிழ் வாழ்க என கோஷம் போட்டு அதை செயல் படுத்துவதில்லை அமைதியாக தங்களின் கருத்துக்களை கணிணியில் தட்டிவிட்டு இருந்து விடுகிறார்கள். வீதியில் வந்து போராட்டம் நடத்த தயாராக இல்லை. படிக்கும்வரை எப்படியோ ஆனால் படித்து வேலையில் அமர்ந்த பின்பு தங்களின் தாய்மொழி மீதான பற்று அதிகப்படுவதாகவே தோன்றுகிறது.

"காய்த்த மரமே கல்லடி படும்"

4.மங்கையரின் சுதந்திரம் பற்றித் தங்களின் கருத்துக்களை விரிவாக எழுதவும்.

மங்கையரின் சுதந்திரம் பற்றி என் கருத்து மங்கையர்க்கு தேவையான அளவு சுதந்திரம் இருக்கிறது. இதை பயன்படுத்தி முன்னேற வேண்டியது பெண்களின் வேலைதான். இந்தியஅரசின் அரசியல் அமைப்பில் இருந்து நடைமுறை வாழ்க்கை வரை பெண்ணுக்கு படிப்பு, உடை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கருத்து என அனைத்திலும் முழு சுதந்திரம் இருந்து கொண்டுதான் உள்ளது. அதை பயன்படுத்தி முன்னேற வழி பார்க்க வேண்டும் அதை விடுத்து பெண்ணுரிமை சுதந்திரம் என பேசிக்கொண்டே இருப்பது அநாவசியம். சுதந்திரம் அதிகம் உள்ள மேற்கத்திய நாடுகளில் கூட பெண் அதிபர்களோ அதிகபட்சம் பெண்கள் அரசியலில் சாதித்ததோ இல்லை ஆனால் இந்தியாவில் மட்டுமே பெண்கள் அரசியலில் கூட அதிக அளவில் சாதித்துள்ளார்கள்.
இந்த வலைப்பூவில் எடுத்துக்கொண்டால் கூட பெண் வலைபதிவர்கள் இடும் பதிவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பல ஆண் வலைபதிவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் மிக குறைந்த எணணிக்கையில் பெண்கள் இருப்பதால் அதிக அளவில் கவனிக்கப்படுகிறார்கள் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும் அதிகம். இங்கு பெண் எதிர் கொள்ளும் அதே அளவு பிரச்னைகளை ஆண்களும் எதிர் கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த கருத்துகள் அவ்வளவாக முக்கியத்துவம் பெறுவதில்லை. இதை நல்ல விதமாக உபயோகிக்க வேண்டிய கடமை பெண் பதிவர்களுக்கு உள்ளது. பெண் முயற்சி செய்தால் முன்னேற இந்த நாடு எல்லா உதவியும் செய்கிறது. ஆனால் இது பத்தாது என்று மேலும் பல சிறப்பு சலுகைகளை எதிர்பார்ப்பது அநாவசியம் என்பதே என் கருத்து.

"மாதா பிதா குரு தெய்வம் "

5.தங்களுக்குப் பிடித்த தங்களின் பதிவு, அல்லது மிகவும் பிடித்த தலைப்பில் ஒரு பதிவை இடவும்.
இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி பதிவு எழுதுனதே இல்லீங்க (பதிவு ஏதாவது போட்டாதான :)) எனக்கு பிடித்த தலைப்பில் பதிவு இனிவரும் நாட்களில் எழுதலாம் என எண்ணியுள்ளளேன். இப்போதைக்கு இந்த சுடரை ஏத்திட்டேன்.

"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்"

அடுத்தது நமது பெயரிலி(அனானி) புகழ் செந்தழல் இரவி அவர்களிடம் ஒப்படைக்கிறேன்.
அவருக்கு வைக்க ஆசைப்படும் ஆப்புகள்..

1. சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்த வளாகத்தேர்வுகள் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. இந்த போக்கின் எதிர்காலம் என்ன?

2. E-lanes வகை வேலைகள் தமிழர்கள் எந்த அளவு பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். நடைமுறையில் இந்த வகை வேலைகளின் எதிர்காலம் மற்றும் வெற்றி சாத்தியகூறுகள் என்ன?

3. நாஸ்காம் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் குடுத்துள்ள அறிக்கையில் 25% மாணவர்கள் கூட வேலைக்கு தகுதியற்றவர்கள் என கூறியுள்ளது. இது குறித்து தங்களின் சொந்த கருத்து மற்றும் சொந்த அனுபவம் என்ன?

4. இந்த கால இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்த பின்பு பொருளாதாரத்தை எதிர்காலத்திற்காக சேர்ப்பவர்கள் அதிகமா? அல்லது ஆடம்பரத்தில் மூழ்கி விடுகிறார்களா?

5. இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலையின் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்மற்ற துறையினரின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் பாதிக்கப் படுகிறது. இந்த அதீத ஊதியம் பற்றிய தங்களின் கருத்துதேவைதானா?

Friday, September 22, 2006

புத்தகங்கள் ... ... ...

புத்தகங்களை பற்றி எழுத சொல்லி பரத். ரவி ரெண்டு பேரும் மாட்டி விட்டுட்டாங்க. நமக்கு இந்த படிப்பு வாசனை கொஞ்சம் கம்மிதானுங்க இருந்தாலும் ஏதோ நமக்கு தெரிஞ்சத எழுதியிருக்கேனுங்க.

One book that changed my life
இதுவரை படிச்சதுல வாழ்க்கைய மாத்தக்கூடிய அளவு எதுவும் படிக்கல. ஆனா, ஏதாவது பிரச்னைனா நெனச்சு பார்க்கிற அளவு ஞாபகம் இருக்கறது சில புத்தகங்கள். அதுல பட்டாம்பூச்சினு ஒரு புத்தகம் (Bapillon in english) ஆசிரியர் ஹென்றி ஷாரியர் எழுதுனது சுதந்திரமான வாழ்க்கைக்காக எவ்வளவு கஷ்டம் வேணாபடலாம்னு எழுதியிருப்பாரு.
அப்புறம் ஏழைபடும் பாடு, மோபிடிக் இதெல்லாம் ரொம்ப பிடிச்சது.

The book you have read more than once
பொன்னியின் செல்வன் 5 தடவைக்கு மேல படிச்சாச்சு ஆனா திரும்ப படிக்கற ஆசை இன்னும் இருக்கு. சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு 3 தடவை படிச்சிருக்கேன்.

One book you would want on dessert island
ஜெயமோகனோட விஷ்ணுபுரம் ஆளில்லாத தனி தீவிலயாவது வேற வழியில்லாம படிப்பேன்னு நினைக்கிறேன் :).

One book that made you laugh
எல்லா ஜென் கதைகளும் பிடிக்கும் படிச்சா மனச கொஞ்சம் லேசாக்கி சந்தோசத்த தரும் புத்தகங்கள்.

one book that made me cry
வேதியியல் பாட புத்தகங்கள் எப்ப படிச்சாலும் அழ வைக்க கூடியது அதுதான்.

One book you wish you had written
குழந்தைகளுக்கான சிறுகதை புத்தகம் எழுதனும்னு ஆசை.

One book that you wish had never been written
தெரியல

One book you are currently reading
இப்ப கைவசம் படிச்சிட்டு இருக்கறது ஊர்மண் ஆசிரியர் மேலாண்மை பொன்னுசாமி எழுதியிருக்கறார். அதுபோக வழக்கமான விகடன், இந்தியாடுடே, காமிக்ஸ் எல்லாம் படிச்சிட்டு
இருக்கறேன்.

One book you have been meaning to read
படிக்க விரும்பற புத்தகங்கள் நிறைய இருக்கு. கற்றது கை மண் அளவுதானுங்க..

இந்த புத்தகம் படிக்கற பழக்கம் சின்ன வயசுலயிருந்து இருக்கறதால நிறைய விசயம் தெரிஞ்சிக்கறதவிட கல்லூரியில பெரிய பெரிய புத்தகங்களை பாத்து பயப்படாம இருக்க முடிஞ்சுது. (முக்கியமா புக் படிக்கும்போது தூங்காமயாவது இருக்க முடிஞ்சுது :) )

அப்புறம் நான் மாட்டிவிட நினைக்கிறது சந்திர S சேகரன்.

Thursday, June 29, 2006

என்னை கவர்ந்த ஆறு

ஆறு பதிவுக்கு என்னை உண்மை, இளா ரெண்டு பேரும் அழைச்சிருக்காங்க. சரி நமக்கு பிடிச்ச ஆறுகளை பற்றி எழுதலாம்னு (யோசிச்சு) எழுதியிருக்கேன்.

1. சியன்னா - பிரான்ஸ்




இந்த ஆறு பிரான்ஸ்ல ஓடுது. ஈபிள் டவர் மேல இருந்து பாக்கும்போது ரொம்ப அழகா இருக்குது. அதவிட ஆத்துமேல அவங்க கட்டியிருக்கற பாலங்கள் தான் சூப்பர். எவ்வளவு அழகழகா கட்டியிருக்காங்க. பார்க்க பார்க்க அழகா இருக்குது. பல முக்கியமான இடங்கள் எல்லாமே இந்த ஆத்தங்கரையோரத்துலயேதான் இருக்குது. இரவு நேரத்துல படகுல போய் ஊர் சுத்தி பாக்கலாம் ரொம்ப நல்லாயிருக்கும்.

2. போ - இத்தாலி

இந்த ஆறு இத்தாலில ஓடுது. நம்ம ஊர் காவிரி மாதிரி அந்த ஊருக்கு. நான் தங்கியிருந்த பெராரா நகர்ல இந்த ஆறு ஓடுது. தினமும் என் டைம் பாஸ் இந்த ஆத்த வேடிக்கை பாக்கறதுதான். ஊர் பெரிசாயிருச்சுங்கறதுக்காக ஆத்தையே கொஞ்சம் தள்ளி வெச்சிருக்காங்க.


3. கங்கை - இந்தியா
இது வரைக்கும் நேர்ல பார்த்தது இல்ல. ஆனா கதைகளிலும் கட்டுரைகளிலும் படிச்சு படிச்சு கங்கை மேல ஒரு பெரிய மரியாதையும் பார்க்கனும்கற ஆவலும் அதிகமா இருக்கு. பார்க்கலாம் எதிர்காலத்தில் பார்க்க முடியுதானு.

4. காவிரி - கர்நாடகம்
முதன் முதலா காவிரிய சின்ன வயசுல கர்நாடகா சுற்றுலா போனப்போ ஸ்ரீரங்க பட்டினம்னு ஒரு இடத்துல பாத்தது. அப்ப எனக்கு ஒரே ஆச்சரியம் இவ்ளோ தண்ணியானு. அது வரைககும் நான் இவ்வளவு பெரிய ஆத்த பாத்தத‍ே இல்லை. இங்க கரை அகலமா இருக்கும் அதுல மீன் துள்ளி விளையாடிட்டு இருக்கும். சின்ன வயசுல பார்த்ததாலே அப்டியே மனசுல பதிஞ்சிடுச்சு.

5. வைகை - மதுரை
"வைகை நதியோரம் பொன்மாலை நேரம்... " அப்படீங்கற பாட்டு ரொம்ப பிடிக்கும். அவ்வளவுதான் எனக்கும் வைகைக்கும் உள்ள உறவு. எப்டியோ ஆறு ஆறுகளைப்பற்றி எழுதனுமே கணக்குக்காக இத சேர்த்திட்டேன். :)

6. நொய்யல் நதி - கொங்கு நாடு
எங்க ஊர்ல இருக்கற ஒரே ஆறு இதுதான். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு இருக்கறது. எனக்கு தெரிய இந்த ஆத்துல தண்ணிய பார்த்ததே இல்லை.




நொய்யலை காப்பாத்த இப்ப சிறுதுளினு ஒரு அமைப்பு ஏற்பாடு பண்ணி தூர்வாறி, நீர் பிடிப்பு பகுதிகளை சுத்தம் பண்ணி எப்டியோ ரொம்ப வருசத்துக்கு அப்புறம் தண்ணி வர வழைச்சிட்டாங்க. வாழ்க சிறுதுளி. வெளி நாடுகள்ள ஆறு களை அவங்க மிக மிக சுத்தமா கரை கட்டி பராமரிக்கறாங்க. ஆத்துல ஒருத்தரும் குளிக்கறதோ, துவைக்கறதோ, இறங்கி விளையாடறதோ இல்ல. அனுபவிக்க தெரியாதவங்க. நம்ம ஊருல அப்டியா? பண்ணாத வேலையெல்லாம் பண்றோம். அப்படிபட்ட ஆறுகளை முடிஞ்சவரைக்கும் குப்பைகளை போட்டு நிறைக்காம இருந்தாலே போதும்.

நான் அழைக்கும் ஆறு பேர்,
1. மனசு
2. பரத்
3. தியாகு
4. கோபாலன்
5. நெல்லை கிறுக்கன்
6. காயத்ரி

Tuesday, February 21, 2006

சங்கிலி

ஏதோ இந்த சங்கிலி அப்படீ இப்படீங்கறாங்க சரின்னு நானும் போட்டுட்டேன். எல்லாம் நம்ம கொங்கு நாட்டு தங்கம். ராசா வோட புண்ணியத்தில போட்டாச்சு. நன்றி ராசு.

Four jobs I have had:
1. காலங்காத்தால நல்லா இழுத்து போத்தி தூங்கறது
2. மயிலு அனுப்பறது
3. நல்லா கொட்டிக்கறது.
4. திரும்ப தூங்கறது.

Four movies I would watch over and over again:
English
1. E-D (English)
2. The day after tomorrow
3. The god must be grazy
4. Mummy

Tamil
1. காந்தி
2. காதலிக்க நேரமில்லை
3. மின்சார கனவு
4. அன்பே சிவம்


Four places I have lived (for years):
1. ஈரோடு
2. கோவை
3. பெராரா
4. மீண்டும் கோவை


Four TV shows I love to watch:
1. தூர்தர்ஷன் - வயலும் வாழ்வும்
2. தூர்தர்ஷன் - குடியரசு தின நிகழ்ச்சிகள்
3. Cartoon network - Tom & Jerry
4. Cartoon network - Poppye Show


Four places I have been on vacation:
1. பாரீஸ்
2. இத்தாலி
3. மாமா வீடு
4. சிங்கை தொடர் வண்டி நிலையம்

Four of my favourite foods:
1. தோசை
2. மசால் தோசை
3. நெய் தோசை
4. ஆனியன் தோசை

Four places I'd rather be now:
1. வீதியிலே பராக்கு பார்த்துக்கிட்டிருக்கலாம்
2. சும்மா ஷாப்பிங் போயி ஒண்ணும் வாங்காம வரலாம்.
3. அம்புலி மாமா படிக்கலாம்
4. படக்கதை படிக்கலாம்

Four sites I visit daily:
1. தமிழ் பயணி
2. கூகிள்
3. தமிழ்மணம்
4. தமிழ் சத்திரம்

Four bloggers I am tagging: *
1. என்னார்
2. அனுசூயா
3. சிவா
4. ஞானம்