Saturday, March 31, 2007

காந்தாரக் கலை

நமது பள்ளிகளில் இன்றும் மறவாது சொல்லிதரும் வரலாற்றில் முக்கியமானது காந்தாரக் கலை. இது புத்தமதத்தின் சார்பாக தோன்றி அதிகம் அது குறித்த கலைச் செல்வங்களை வழங்கி மறைந்த ஒன்றாகும். பாகிஸ்தான் தேசம் இந்த வாரத்தை (ஏப்ரல் 1வரை) காந்தாரக் கலை வாரமாக கொண்டாடுகிறது. பல்வேறு நெளிவு,சுளிவுகளை கொண்ட கலைப் படைப்புகளை தன்னகத்தே கொண்டது காந்தாரக் கலை. சில ஒளிப்படங்கள்...




புத்தரின் சிலை



புத்தர் பெருமான் தனது சீடர்களுடன் கையில்
கப்பறை எனும் உணவுஏற்க்கும் பாத்திரத்துடன் அமர்ந்துள்ளார். மேலாடையும், சிகையும் சுருள் வடிவம்பெற்றதே காந்தாரக் கலை எனப்படும். இனி வருவது நம் தாய்குலங்களுக்காக. அவர்கள் ஆதரவு இன்றி எந்தநாகரீகமும் வளராதே. இன்னமும் சொல்ல போனால் அவர்கள் தான் நாகரீகஅளவுக்கோல் ஆவர்கள்.



தங்க காதணிகள்.






தங்க கைக்காப்பு(Bracelet)




தங்க நெக்லஸ்

அடுத்து வருவது... புத்தப் பெருமான் அழகிய உருவம்



புத்தரின் தியான முத்திரை



புத்தரின் முகம்



தாமரை மலர் ஏந்திய புத்தர் கரம்



புத்தப் பெருமானின் அழகிய உருவச் சிலை.

இவ்வளவு அன்பு, அஹிம்சை என்று போதித்தும் காந்தாரகலை எனும் அழகிய ஒரு கலையால் அமைக்கப் பட்ட ஒரு படைப்புக்குநம் மனித இன நவநாகரீக வளர்ச்சியில் ஏற்பட்ட நிலைமை என்ன தெரியுமா... ஆம். இரத்தக் கண்ணீர் விட ‍வேண்டிய படம்தான் கலங்கிய மனதுடன்...



தீவிரவாதிகளால் அழிக்கப் பட்ட பாமியான் குன்றுச் சிலை. இடது புறம்(முதல் பாகம்) சிலை உள்ளது. முன்புறம் ஒரு மனிதன் நின்றுக் கொண்டு உள்ளான் பாருங்கள். மனிதனை விட எவ்வளவுஉயரம் அப்பப்பா. வலது புறம் (இரண்டாம் பாகம்) ஏவுகணை மற்றும்பீரங்கி தாக்குதலால் அழிக்கப் பட்டு விட்டு காலியாகி விட்ட இடம்.இங்கும் முன்புறம் பல மனிதர்கள் நின்று கொண்டு உள்ளார். இனிவரும் நாட்களிலாவது கருணையும், சகிப்பு தன்மையும்உலகெங்கும் பரவட்டும். புத்தம் தர்மம் கச்சாமி...!!! சங்கம் தர்மம் கச்சாமி...!!!

Friday, March 30, 2007

கோடையும் குளுமையும்

கோடை வெம்மை இங்கே வாட்டி எடுக்குது. இன்னமும் தமிழகத்தின் பிற பகுதிகளில் அக்னி நட்சத்திர ‍வெப்பம் ஆரம்பம் ஆகவில்லை. அதற்க்குமுன்னதாகவே ஆரம்பித்து முன்னரே முடிந்திடும் கோவையின் கோடை இப்போது சரியாக உச்சத்தில் உள்ளது.



அட அதுக்காக என்ன செய்யலாம் தர்பூசிணி போன்ற பழங்களை நாடலாம்.ஆனாலும் வயிறு நிறைந்த பிறகு அதிகம் சாப்பிட இயலாதே... ஆதனால் கண்நிறைய குளு குளு வென பார்த்து இரசிக்கலாம் அல்லவா இந்த மாதிரியான ஒளிப் படங்களை...











மேட் இன் ஜப்பான் மோகம் கொஞ்ச நாள் முன்னர் வரை நம்ம ஊருலேஇருந்ததில்லே அதனால் இந்த அருவி படத்தை சப்பானிய நாட்டில் இருந்து சுட்டது. ஊரு பேரு டக்கசிக்கோ-க்யோ (Takachiho-Kyo Gorge).

Thursday, March 29, 2007

சிரிக்கலாம் வாங்க...

பின்வரும் சித்திரங்கள் நகைச்சுவை என்றும் ஆகாது வாய் விட்டும்சிரிக்கும் அளவு இருக்காது.. ஆனால் இதழோர புன்னகைக்க வைக்கும்.இதன் பெயர் தான் அங்கதம் என்பதோ அல்லது இந்த வகைக்கு என்னபெயரோ...







Thursday, March 08, 2007

மகளிர் தினம்



ஆயகலைகள் அனைத்தும்
தளிர் கரங்களில் ஏந்தி...
ஆருயிர் அன்னையாய்
அன்பு சகோதரியாய்
உயிரில் பாதி மனைவியாய்...
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
தோழிகள், நண்பிகள்,
சகோதரிகள், தாய்மார்களுக்கும்

மகளிர் தின வாழ்த்துகள்...!!!

அன்புடன்,
அனு

Sunday, February 11, 2007

இணையாத பாலம்





"இணையாத பாலம் இருந்தென்ன லாபம்"
இந்த ஸ்லோகன்தான் இப்ப கோவையில் அதிகமா பேசப்படும் வார்த்தைகள். கோவை கிழக்கு தொகுதியை சேர்ந்த ஒண்டிப்புதூர் அப்டீங்கற ஊர்ல ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி ரயில்வே மேம்பாலம் கட்ட ஆரம்பிச்சாங்க. ஆரம்பிச்சப்ப ‍ஒரே ஜோராதான் இருந்தது. அந்த ரோடு திருச்சி ரோடு அதிகமான அளவு போக்குவரத்து உள்ள சாலைதான். அதை அடைத்துவிட்டு ஊருக்கு உட்புறமாக உள்ள சிறிய சாலையில் அதுவும் இரண்டு ரயில்வே லைன்களை கடந்து செல்லும் பாதையை ஒதுக்கினார்கள். சரி ஒரு வருடம்தானே என்ன செய்வது என்று அனைவரும் பொருத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.


பிறகு திடீர் என்று பாலத்தின் நடுவே அதாவது இருப்பு பாதை மேல் கட்ட வேண்டிய பகுதியை மட்டும் அப்படியே விட்டு விட்டார்கள் கேட்டதற்கு அது மத்திய அரசு வேலை என்று விளக்கம் வந்தது. சரினு அதுக்கு ஒரு வருசம் போயிடுச்சு. இப்டியே கட்டி கட்டி கடந்த நான்கு வருட காலமா கட்டியும் இன்னும் இணைய மாட்டேங்குது பாலம். ஸ்பீட் படத்துல கிளைமேக்ஸ்ல வர்ர மாதிரி வண்டியெல்லாம் வேகமா போயி ‍‍ஹை ஜம்ப் பண்ணிதான் போகனும் போலயிருக்கு.


இதுல மாற்று பாதையில போயிட்டு இருக்குற பேருந்துகள்ல பயணம் செய்யற பயணிகள் எல்லாம் ரொம்ப பாவப்பட்டவங்க. ஏன்னா எப்ப பாரு ரெண்டு ரயில்வே லைன்லயும் ரயில் போயிட்டும் வந்துட்டும் இருக்கும் அதனால அடிக்கடி கேட் போட்டு குறைந்தது முக்கால் மணி நேரமாவது நிறுத்தி வச்சிடுவாங்க. குறிப்பிட்ட நேரத்துக்கு யாராலயும் போக வர முடியாது. இதுல கொடுமை என்னன்னா மழை வந்தா அந்த வழியில ஒரு சின்ன ஓடை உருவாகி தண்ணி போயிட்டேயிருக்கும். அப்பவெல்லாம் இந்த இரு சக்கர வாகனத்துல போறவங்க நிலைமைய நினைச்சாதான் பரிதாபம்.


ஆக மொத்தத்தில ஊர்ல பல பேருக்கு இந்த பாலம் திறக்கலையேனு மிகப்பெரிய வருத்தம் இருக்குது இதுனால பல கோடி பொருளாதார நஷ்டம், எரிபொருள், நேரம் இப்டியே சொல்லிட்டே போகலாம். இதைய எப்ப திறப்பாங்கனு தெரியல ஆனா கடந்த ஒரு மாதமா கொஞ்சம் சுறுசுறுப்பா ரயில்பாதை மேல இருக்கற பகுதிய இணைச்சிட்டு இருக்காங்க.





இவ்வளவு கஷ்டத்துக்கு நடுவிலயும் இப்ப திறப்பாங்க அப்ப திறப்பாங்கனு மக்களும் பொறுமையா நாலு வருசத்த ஓட்டிட்டாங்க. இப்ப அதெல்லாம் பிரச்னையில்ல கோவையில பொதுவா பொழுது போக்கறதுக்கு ஏத்த மாதிரி வசதியா பூங்காக்களோ இல்ல கடற்கரை ஆற்றங்கரை எதுவும் இல்ல. அதனால நம்ம ஊர் மக்கள் எல்லாம் என்ன பண்ணுனாங்க நடை பயிற்சி, உடற் பயிற்சி, மாலையில ஒரு சின்ன வாக்கிங் போக இப்டி எல்லா விதத்திலயும் அந்த பாலத்தைதான் பயன்படுத்திட்டு இருக்காங்க. இந்த பாலத்தை திறந்தா மக்களோட ஒரு பொழுதுது போக்கு இடம் இல்லாம போகப்போகுது. :(

Wednesday, January 03, 2007

கைத்தொ(ல்)லை பேசி

ரொம்ப நாளா கைத்தொலைபேசி வாங்காம இருந்தேன். எங்க அப்பாரு பாத்து சளிச்சு அவரே போயி ஒரு தொலைபேசி வாங்கிட்டு வந்து குடுத்து ஊர்ல எல்லாரும் வெச்சிருக்காங்க நீ மட்டும் ஏன் இல்லாம இருக்கனு சொன்னாரு. நானும் பவ்யமா எனக்கு எதுக்குங்கப்பா போனு அதான் வீட்ல ஒன்னு ஆபீஸ்ல ஒன்னும் இருக்குதே பத்தாதானு கேட்டேன். அவரும் விட்டனானு இல்ல இல்ல எல்லா புள்ளங்களும் வெச்சிருக்காங்க நீயும் வெச்சுக்கோனு சொல்லி குடுத்தாரு. பாவம் அவரு அதுக்கப்புறந்தான ஆரம்பிச்சுச்சு நம்ம அட்டகாசம். முதல் வேலையா நம்ப நட்பு வட்டங்களுக்கு நம்பர் குடுக்க ஆரம்பிச்சேன். அவங்களும் தாராளமா அள்ளி வழங்குனாங்க அவங்கவங்க நம்பர. சரி இது ஒரு ஆத்திர அவசரம்னா கூப்பிட பேச வசதியா இருந்துச்சு. அப்புறம் மெல்ல மெல்ல ஒவ்வொருத்தரா குறுஞ்செய்தி (SMS) அனுப்ப ஆரம்பிச்சாங்க. நானும் சரி பிரியா குடுக்கறாங்க அனுபவிப்போம்னு அனுப்பினேன். முதல்ல காலைல எழுந்தவுடனே எல்லாருக்கும் ஒரு குட் மார்னிங். என்னமோ நாம குட் மார்னிங் அனுப்பலீனா அவங்க எழுந்திரிக்காத மாதிரி. அப்புறம் ஒரு 9 - 10 மணி சுமாருக்கு ஒரு சர்தார்ஜி ஜோக். பாவம் இந்த சர்தார்ஜிங்க நம்மகிட்ட மாட்டீட்டு படாதபாடு படறாரு. அப்புறம் ப்ரெண்ட்ஷிப் பத்தி ஒரு செண்டி மெ‍‍‍‍சேஜ், இன்றைய தத்துவம்னு ஒரு கடி, அதுபோக கங்கூலி, அஜீத், விஜய், கேப்டன் படங்கள பத்தி ஒரு கடி இப்டீனு நாள் முழுக்க ஓடும். கடைசில நைட் குட்நைட் சொல்றது. நாம குட் நைட் சொல்லுலீனா யாரும் தூங்கவே போறதில்ல மாதிரி ஊருக்கே குட் நைட் சொல்லறது.
இதெல்லாம் பத்தாதுனு ஆபீஸ்குள்ள டீ சாப்பிட போகலாமா? பிரிண்ட் அவுட் பேப்பர் கொஞ்சம் எடுத்துட்டு வா இப்டினு ஆபீஸ்குள்ளயே மெ‍சேஜ்.
இதெல்லாம் போக இந்த நியூ இயர், நல்ல நாள் கெட்ட நாள் இப்டி எது வந்தாலும் வாழ்த்து செய்தி வேற லிஸ்ட் போட்டு அனுப்பறது. இதெல்லாம் போக போன் பேசறது வேற. அது எப்டிதான் கட்டுபடி ஆகுதுன்னே தெரியல. ஒரு சிலர் மணிக்கணக்கா பேசறாங்க பேசறாங்க பேசிகிட்டே இருக்காங்க. காது என்னத்துக்குதான் ஆகுமோ தெரியல. அதவிட அவ்ளோ நேரம் என்னதான் பேசுவாங்க. எங்கயிருந்துதான் மேட்டர் கிடைக்குதோ தெரியல. இதுல Hands free வேற மாட்டிக்கறாங்க. தூரத்துலயிருந்து பார்த்தா தன்னப்போல பேசற மாதிரியிருக்கு. சில சமயம் என்னடாயிது லூசாப்பா நீனு கேட்கற அளவு இருக்கும்.
ம் ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணியாச்சு நாமளும் ஏதாவது இந்த வருசம் உருப்படியா பண்ணலாம்னு நினைச்சு இந்த வருசத்துலயிருந்து இந்த குறுஞ்செய்தி அனுப்பறது தொலை பேசியில பேசறது இதெல்லாம் படிபடியா குறைச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். பார்ப்போம் கொஞ்சமாவது குறையுதானு. :)

Friday, December 29, 2006

முதலாம் பிறந்த நாள்.

2006 ம் ஆண்டு முடிஞ்சுது புது வருசம் பிறக்க போகுது அதே நேரம் என் வலைப்பூவுக்கும் ஒரு வருடம் முடியுது. அதனால ஒரு சின்ன பார்வை. ஏன்னா பெரியவங்க சொல்லியிருக்காங்கள்ள கடந்து வந்த பாதைய எப்பவும் மறக்க கூடாதுனு அதான்.

பொதுவா இந்த ஆண்டு என்னை பொறுத்த வரைக்கும் வலையுலக ஆண்டுனே சொல்லலாம். அந்த அளவு 2006 வாழ்க்கையில் அதிலும் தமிழ் வலை உலகம் நிறைஞ்சிருக்குது.

இந்த வருட ஆரம்பத்துலதான் வலைப்பூ (Blog) அப்படீனா என்னனே எனக்கு தெரியும். என் சகோதரர் அறிமுகப்படுத்தி வெச்சாரு. அப்ப முதன்முதலா நான் படித்தது நம்ம கொங்கு நாட்டு ராசாவோட வலைத்தளம்தான் அதுக்கு பிறகு ஜிராகவனுடையது அப்புறம் அப்டியே தமிழ்மணம் ‍ஜோதியில நானும் இணைஞ்சுட்டேன்.

நான் பாட்டுக்கு அடுத்தவங்க கட்டுரைய படிச்சுட்டு கமெண்ட் போட்டுட்டு இருந்தேன். திடீர்னு முதன் முதலா நான் இந்தியாவும் உலக அதிசயமும் அப்டீனு ஒரு கட்டுரை எனக்கு தோனுத எழுதுனேன். அதைய தினமலர் பத்திரிக்கையில பிரசுரம் பண்ணினாங்க உடனே எனக்கு ஒரு நினைப்பு அட நாமளும் பெரிய எழுத்தாளர் போல இருக்கு. இனிமே நாமளும் எழுதுவோம்னு கண்டதையும் கிறுக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் போனவுடனே படம் போட்டு கதை எழுதறது கொஞ்சம் ஈசியா இருந்துச்சு. ஒரு படத்த போட்டு அதுக்கு ஒத்து வரமாதிரி ரெண்டு லைன் எழுத வேண்டியது. இப்டியே கொஞ்ச நாள் ஒப்பேத்துனேன். :)))))

அப்புறம் எனக்கு இந்த பூக்கள் மேல ஒரு பைத்தியம். எங்க பூ படம் பார்த்தாலும் உடனே புடுச்சு போட்டுடுவேன். அப்டியே எழுதி எழுதி கடைசில பூக்கள பத்தி மட்டுமே எழுதற நிலைமைக்கு வந்துட்டேன். கடைசியா கவிதைங்கற பேர்ல ஒரு கிறுக்கல் வேற.

ஆனா போன மாதம் திடீர்னு ஜி.கெளதம் வைச்ச போட்டில ஆறுதல் பரிசு வாங்கி குங்குமத்துல வேற பப்ளிஷ் பண்ணுனாங்க. அது ஒரு சந்தோசம். அப்பப்ப நான் எழுதி அடுத்தவங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு நினைக்கும் போது ஏதாவது ஒரு பரிசு கொடுத்து தொடர்ந்து எழுத வைச்சிடுறாங்க. பாவம் படிக்கறவங்க.

இந்த வலையுலகத்தை பொருத்த வரைக்கும் நான் ஒரு வருடக்குழந்தை. ஆனா இந்த ஒரு வருடத்துல கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய.
நிறைய நிறைய நண்பர்கள். நிறைய விதவிதமான மக்களை பற்றிய அறிமுகம். இந்த உலகத்தை சுருக்கி சின்னதாக்கிடுச்சு இந்த வலையுலகம். ஒரே விசயத்தை மத்தவங்க எவ்வளவு விதமா நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.

இனிவரும் அடுத்த ஆண்டிலாவது ஏதாவது உருப்படியா எழுதலாம்னு நினைக்கிறேன். :))

Wednesday, November 22, 2006

மழை....



எட்டிப்பிடிக்க முடியாத ஆகாயத்திற்கும்
எட்டநிற்கும் மண்ணிற்கும்
இடையில் ஒரு பிணைப்பினை
ஏற்படுத்தும் நீ கூட ஒரு அஞ்சலகம்தான்

கார்மேகமாய் காட்சி தந்து
நீ வரும் முன்னே இப்பூமிக்கு
உன் வாசத்தைக் கொடுத்து
இம்மண்ணிற்கு வளம் கொடுக்கும்
நீ கூட ஒருதாய் தான்.

உன்னில் நனைந்து என்னைத்
தேற்றி இயற்கை வியந்து என்
சோகத்தை மறப்பதால்
ஆம்! உன்னை நேசிக்கிறேன்.
நீ கூட எனக்கு ஒரு
எட்டாம் அதிசயம்தான்!
எட்டும் அதிசயம் கூட.!

Thursday, November 16, 2006

இலவசம் .....


வேணும் எனக்கு நல்லா வேணும் அப்பவே சொன்னாங்க கேட்டனா இலவசமா தர்ராங்கன்னு எல்லாத்துலயும் மெயில் அக்கவுண்ட் ஓபன் பண்ணினேனே. இப்ப தினமும் வந்த மெயில செக் பண்ணவே பாதி நேரம் சரியா போயிடுது.
வேணும் எனக்கு நல்லா வேணும், அது பத்தாதுன்னு ஆட்குட்ல வேற ஒரு ஐடி. இதுல ஸ்க்ராப் எழுதறவங்களுக்கு பதில் எழுத பாதி நேரம் போகுது.
வேணும் எனக்கு நல்லா வேணும் இலவசமா தர்ராங்கன்னு ப்ளாக் ஓபன் பண்ணினேனே. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். இலவசம்ன உடனே ப்ளாக் ஓபன் பண்ணியாச்சு இப்ப பாருங்க என்ன பதிவு போடலாம்னு மண்டை உடைய யோசனை பண்ணுனா. கல்லுதான் ஒடைஞ்சிருக்கு. பாவம் கல்லு. :)
டிஸ்கி : மக்களே ஒருத்தரும் பயப்படாதீங்க இந்த பதிவு சத்தியமா போட்டிக்கு இல்லீங்க யாரும் பயப்பட தேவையில்லை. :))))))))))

Wednesday, October 18, 2006

லாவண்டர்


கடந்த வாரம் திரு.கோபாலன் அவர்கள் லாவண்டர் பூ படம் எடுத்து அனுப்பியிருந்தார். சரி இந்த பூ பத்தி எதாவது தெரியுமானு கேட்டா ஒன்னுமே தெரியாது அங்க போனா கும்முனு வாசம் வரும் நிறைய தேனீக்கள் இருக்கும்னு மட்டும் சொல்லிட்டாரு.
லாவண்டர்னா பாய்ஸ் படத்துல ஷங்கர் காட்டுனதுதான் எனக்கு ஞாபகம் வருது. நானா வலைல தேடுனப்ப நிறைய விஷயம் தெரிஞ்சது. எனக்கு தெரிஞ்சத இங்க எழுதியிருக்கேன்.
லாவண்டர்னா கத்திரிபூ கலர்ல மட்டும்தான் இருக்கும்னு நினைச்சிட்டுயிருந்தேன். ஆனா
லாவண்டர்ல மட்டும் சுமார் 20 -30 வகையிருக்குது. அதுவும் பல நிறங்கள் இருக்கு. இங்க நீங்க பாக்கறது மஞ்சள் லாவண்டர் பூ.
லாவண்டர் பொதுவா சூரிய ஒளி அதிகம் விரும்பும் மலர். அதோட தாய்நாடு பிரான்ஸ்தான். ஆனா இப்ப பெரிய லாவண்டர் தோட்டம் ஆஸ்திரேலியாவுல டாஸ்மேனியாங்கற
இடத்துலயிருக்குது. இது குத்து செடி மட்டும் இல்ல சில வகையான பூ செடிகள் பல அடி உயரம் கூட வளருதாம்.



லாவண்டர் வெறும் வாசனைக்கு மட்டும் பயன்படுத்தறது இல்ல மருத்துவத்துக்கும் பயன்படுத்தறாங்க. இந்த லாவண்டர் பூச்சி கடி பூச்சிகள் வராமயிருக்கவும் பயன்படுத்தறாங்க. அதுபோக தலைவலி தைலம் தயாரிக்கவும் பயன்படுத்தறாங்க.


லாவண்டர் பூ தெய்வ வழிபாட்டுக்கும் பயன்படுத்தறாங்களாம். இந்த பூ பூக்கும் காலம் நவம்பர் டிசம்பர் தான். கிட்டதட்ட நம்ம ஊர் துளசி மாதிரி. ஏதோ எனக்கு நெட்டுல கிடைச்ச விசயங்கள எழுதியிருக்கேன்.

Tuesday, September 26, 2006

கிளி பூ







மேலயிருக்கறதெல்லாம் வலையுலக நண்பர் அனுப்புன படங்கள். இந்த பூ அப்பிடியே கிளி மாதிரியிருக்கு, இது தாய்லாந்து நாட்டுல இருக்கறதா தெரியுது. இது போக வேற எந்த தகவலும் இந்த பூ பத்தி தெரியலீங்க. பூ படத்த பாத்தவுடன எனக்கும் வலையேத்தனும்னு ஆசை வந்து போட்டாச்சு.
அப்புறம் நானும் பெரிய வலைப்பதிவர் ஆயிட்டனுங்க. எப்டினு கேட்கறீங்களா? நமக்கும் போலி பின்னூட்டம் வர ஆரம்பிச்சுடுச்சே. என் நண்பர்கிட்ட பேசும்போது இப்டி போலி பின்னூட்டம் வந்திருக்குனு சொன்னதுக்கு அவரு அட பரவாயில்ல நீயும் பெரிய வலைபதிவர் ஆயிட்டனு சொல்றாரு. ஏதோ பூ, மரம், செடி படம் போட்டு ரெண்டு வரி எழுதிட்டு இருக்கற நமக்கு எதுக்குங்க இந்த விளம்பரம். :(

Friday, September 22, 2006

புத்தகங்கள் ... ... ...

புத்தகங்களை பற்றி எழுத சொல்லி பரத். ரவி ரெண்டு பேரும் மாட்டி விட்டுட்டாங்க. நமக்கு இந்த படிப்பு வாசனை கொஞ்சம் கம்மிதானுங்க இருந்தாலும் ஏதோ நமக்கு தெரிஞ்சத எழுதியிருக்கேனுங்க.

One book that changed my life
இதுவரை படிச்சதுல வாழ்க்கைய மாத்தக்கூடிய அளவு எதுவும் படிக்கல. ஆனா, ஏதாவது பிரச்னைனா நெனச்சு பார்க்கிற அளவு ஞாபகம் இருக்கறது சில புத்தகங்கள். அதுல பட்டாம்பூச்சினு ஒரு புத்தகம் (Bapillon in english) ஆசிரியர் ஹென்றி ஷாரியர் எழுதுனது சுதந்திரமான வாழ்க்கைக்காக எவ்வளவு கஷ்டம் வேணாபடலாம்னு எழுதியிருப்பாரு.
அப்புறம் ஏழைபடும் பாடு, மோபிடிக் இதெல்லாம் ரொம்ப பிடிச்சது.

The book you have read more than once
பொன்னியின் செல்வன் 5 தடவைக்கு மேல படிச்சாச்சு ஆனா திரும்ப படிக்கற ஆசை இன்னும் இருக்கு. சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு 3 தடவை படிச்சிருக்கேன்.

One book you would want on dessert island
ஜெயமோகனோட விஷ்ணுபுரம் ஆளில்லாத தனி தீவிலயாவது வேற வழியில்லாம படிப்பேன்னு நினைக்கிறேன் :).

One book that made you laugh
எல்லா ஜென் கதைகளும் பிடிக்கும் படிச்சா மனச கொஞ்சம் லேசாக்கி சந்தோசத்த தரும் புத்தகங்கள்.

one book that made me cry
வேதியியல் பாட புத்தகங்கள் எப்ப படிச்சாலும் அழ வைக்க கூடியது அதுதான்.

One book you wish you had written
குழந்தைகளுக்கான சிறுகதை புத்தகம் எழுதனும்னு ஆசை.

One book that you wish had never been written
தெரியல

One book you are currently reading
இப்ப கைவசம் படிச்சிட்டு இருக்கறது ஊர்மண் ஆசிரியர் மேலாண்மை பொன்னுசாமி எழுதியிருக்கறார். அதுபோக வழக்கமான விகடன், இந்தியாடுடே, காமிக்ஸ் எல்லாம் படிச்சிட்டு
இருக்கறேன்.

One book you have been meaning to read
படிக்க விரும்பற புத்தகங்கள் நிறைய இருக்கு. கற்றது கை மண் அளவுதானுங்க..

இந்த புத்தகம் படிக்கற பழக்கம் சின்ன வயசுலயிருந்து இருக்கறதால நிறைய விசயம் தெரிஞ்சிக்கறதவிட கல்லூரியில பெரிய பெரிய புத்தகங்களை பாத்து பயப்படாம இருக்க முடிஞ்சுது. (முக்கியமா புக் படிக்கும்போது தூங்காமயாவது இருக்க முடிஞ்சுது :) )

அப்புறம் நான் மாட்டிவிட நினைக்கிறது சந்திர S சேகரன்.

Wednesday, September 20, 2006

மீண்டும்....


போன மாசம் புல்லா எங்க ஊர்க்காரர் அதாங்க சூர்யாவுக்கு கல்யாணங்கறதால ஒரே பிஸி அதனால பதிவு எதுவும் போட முடியல. ( ஓகே ஓகே இப்ப நான் எழுதலைனு யாரு கவலைப்பட்டாங்கன்னு கேக்கறது தெரியுது) இருந்தாலும் எல்லாருக்கும் சொல்றது என்னன்னா இனிமேல தொடர்ந்து எழுதுவனுங்க. இது சும்மா ஒரு அட்டெண்டன்ஸ் பதிவு அவ்வளவுதான். :)))))

Sunday, August 06, 2006

நண்பர்களே....




இதுவரை பார்த்த, பார்க்காத, என் வலைப்பூவில் பின்னூட்டம் இட்ட, பின்னூட்டம் இடாமல் அமைதியாக படித்துச் செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, July 20, 2006

அம்மா அப்பா.......




இந்த காலத்துல அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போக ஆரம்பிசசதுலயிருந்து குழந்தைக கதி இப்படிதான் ஆகி போச்சு. வேல வேலனு ரெண்டு பேரும் இயந்திரமா மாறீட்டாங்க. ஆதரவு காட்டற பாட்டி தாத்தவயும் முதியோர் இல்லத்துல சேர்த்தாச்சு கடைசில குழந்தைக நிலைமைதான் மோசமா போச்சு.
இந்த படம் குடுத்த உதவி செஞ்ச இவருக்கு ரொம்ப நன்றிங்கோ. அப்பா‍டி ஏதோ ஒரு பதிவு போட்டாச்சு.

Thursday, June 29, 2006

என்னை கவர்ந்த ஆறு

ஆறு பதிவுக்கு என்னை உண்மை, இளா ரெண்டு பேரும் அழைச்சிருக்காங்க. சரி நமக்கு பிடிச்ச ஆறுகளை பற்றி எழுதலாம்னு (யோசிச்சு) எழுதியிருக்கேன்.

1. சியன்னா - பிரான்ஸ்




இந்த ஆறு பிரான்ஸ்ல ஓடுது. ஈபிள் டவர் மேல இருந்து பாக்கும்போது ரொம்ப அழகா இருக்குது. அதவிட ஆத்துமேல அவங்க கட்டியிருக்கற பாலங்கள் தான் சூப்பர். எவ்வளவு அழகழகா கட்டியிருக்காங்க. பார்க்க பார்க்க அழகா இருக்குது. பல முக்கியமான இடங்கள் எல்லாமே இந்த ஆத்தங்கரையோரத்துலயேதான் இருக்குது. இரவு நேரத்துல படகுல போய் ஊர் சுத்தி பாக்கலாம் ரொம்ப நல்லாயிருக்கும்.

2. போ - இத்தாலி

இந்த ஆறு இத்தாலில ஓடுது. நம்ம ஊர் காவிரி மாதிரி அந்த ஊருக்கு. நான் தங்கியிருந்த பெராரா நகர்ல இந்த ஆறு ஓடுது. தினமும் என் டைம் பாஸ் இந்த ஆத்த வேடிக்கை பாக்கறதுதான். ஊர் பெரிசாயிருச்சுங்கறதுக்காக ஆத்தையே கொஞ்சம் தள்ளி வெச்சிருக்காங்க.


3. கங்கை - இந்தியா
இது வரைக்கும் நேர்ல பார்த்தது இல்ல. ஆனா கதைகளிலும் கட்டுரைகளிலும் படிச்சு படிச்சு கங்கை மேல ஒரு பெரிய மரியாதையும் பார்க்கனும்கற ஆவலும் அதிகமா இருக்கு. பார்க்கலாம் எதிர்காலத்தில் பார்க்க முடியுதானு.

4. காவிரி - கர்நாடகம்
முதன் முதலா காவிரிய சின்ன வயசுல கர்நாடகா சுற்றுலா போனப்போ ஸ்ரீரங்க பட்டினம்னு ஒரு இடத்துல பாத்தது. அப்ப எனக்கு ஒரே ஆச்சரியம் இவ்ளோ தண்ணியானு. அது வரைககும் நான் இவ்வளவு பெரிய ஆத்த பாத்தத‍ே இல்லை. இங்க கரை அகலமா இருக்கும் அதுல மீன் துள்ளி விளையாடிட்டு இருக்கும். சின்ன வயசுல பார்த்ததாலே அப்டியே மனசுல பதிஞ்சிடுச்சு.

5. வைகை - மதுரை
"வைகை நதியோரம் பொன்மாலை நேரம்... " அப்படீங்கற பாட்டு ரொம்ப பிடிக்கும். அவ்வளவுதான் எனக்கும் வைகைக்கும் உள்ள உறவு. எப்டியோ ஆறு ஆறுகளைப்பற்றி எழுதனுமே கணக்குக்காக இத சேர்த்திட்டேன். :)

6. நொய்யல் நதி - கொங்கு நாடு
எங்க ஊர்ல இருக்கற ஒரே ஆறு இதுதான். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு இருக்கறது. எனக்கு தெரிய இந்த ஆத்துல தண்ணிய பார்த்ததே இல்லை.




நொய்யலை காப்பாத்த இப்ப சிறுதுளினு ஒரு அமைப்பு ஏற்பாடு பண்ணி தூர்வாறி, நீர் பிடிப்பு பகுதிகளை சுத்தம் பண்ணி எப்டியோ ரொம்ப வருசத்துக்கு அப்புறம் தண்ணி வர வழைச்சிட்டாங்க. வாழ்க சிறுதுளி. வெளி நாடுகள்ள ஆறு களை அவங்க மிக மிக சுத்தமா கரை கட்டி பராமரிக்கறாங்க. ஆத்துல ஒருத்தரும் குளிக்கறதோ, துவைக்கறதோ, இறங்கி விளையாடறதோ இல்ல. அனுபவிக்க தெரியாதவங்க. நம்ம ஊருல அப்டியா? பண்ணாத வேலையெல்லாம் பண்றோம். அப்படிபட்ட ஆறுகளை முடிஞ்சவரைக்கும் குப்பைகளை போட்டு நிறைக்காம இருந்தாலே போதும்.

நான் அழைக்கும் ஆறு பேர்,
1. மனசு
2. பரத்
3. தியாகு
4. கோபாலன்
5. நெல்லை கிறுக்கன்
6. காயத்ரி

Wednesday, June 21, 2006

அடுத்த வீட்டு அல்லி



மாற்றான் தோட்டத்து மல்லிகை மணப்பதை போல அடுத்த வீட்டு அல்லியும் அழகாகதான் இருக்கிறது.

ஆபீஸ் பக்கத்து வீட்டுல இந்த அல்லி செடி வெச்சிருக்காங்க அதுவும் தினம் தினம் அழகா பூ விட்டுகிட்டு இருக்குது. உடனே போட்டோ பிடிச்சு போட்டாச்சு. ஆனா ஒரு சந்தேகம் இந்த அல்லியும், குமுதமலர் (குமுதவள்ளி இல்லீங்க) அப்டீனு சொல்லறதும் ஒன்னுதானா இல்ல வேற வேறயா?. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கறேன்.

Tuesday, June 13, 2006

வளர் சிதை மாற்றங்கள்











வளர் சிதை மாற்றத்தால இப்படியெல்லாம் செய்ய தோணுதோ?. ஆனா வாழ்க்கைல ஜாக்ரதையா இல்லைனா கடைசில இப்டிதான் ஆகனும்.


எப்டியோ எல்லாரும் வளர்சிதை மாற்றத்தை பத்தி பதிவு போடும் போது நான் மட்டும் எப்டி போடாம இருக்கறது. அதான் இந்த படங்கள போட்டு தலைப்பு மட்டும் சரியா வெச்சு ஒப்பேத்திட்டேன். ....... :)