Thursday, April 06, 2006

பாசம் ...............


சென்ற வருடம் இத்தாலி சென்ற போது தங்கியிருந்த இல்லத்தின் எதிர் வீட்டில் ஒரு வயதான பாட்டி குடியிருந்தார்கள். தினமும் வெளியில் கிளம்பும்போதும் திரும்பும்போதும் அந்த பாட்டியை பார்த்து ஒரு புன்னகைத்துவிட்டு செல்வது வழக்கம். அதுபோக எப்போது எங்களை சந்தித்தாலும் அந்த பாட்டி மிக அருமையாக பேசுவார்கள். இதில் கொடுமை என்னவெனில் அவருக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. எனக்கோ கொஞ்சமே கொஞ்சம் இத்தாலி தெரியும் அவ்வளவுதான். எப்படியோ அபிநயம் முகபாவத்தில் எங்களுக்கு விசயத்தை புரிய வைத்துவிடுவார். விருப்பம் இருந்தால் மொழி ஒரு பிரச்சினையே இல்லை என்பது அங்கேதான் தெரிந்து கொண்டேன். ஒரு நாள் அந்த பாட்டியம்மாள் ஒரு மிகப் பெரிய கேக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றார் என்ன என விசாரித்ததில் அந்த கேக் அவரே எங்களுக்காக செய்தது என்று கூறினார். உண்மையில் அது மிக அருமையான சாக்லேட் கேக். வாழ்க பாட்டி என சொல்லிக் கொண்டே சாப்பிட்டோம்.
கடைசியில் நாங்கள் திரும்பி வரும் நாள் அன்று சொல்லி வர சென்றிருந்தோம். அப்போது அந்த பாட்டி கண்ணில் நீருடன் நீங்கள் என் பிள்ளைகளை போல உங்களை பிரிவது கடினமாக உள்ளது என்று கூறினார். அது மட்டும் இல்லை இந்தியா சென்ற பிறகு கடிதம் எழுதுங்கள் என்று அவர் இல்ல முகவரி கொடுத்தார். அந்த முகவரி என்னுடைய தொலைந்துபோன பெட்டியில் சென்றுவிட்டது நானும் மறந்து விட்டேன்.
சென்ற மாதம் எங்கள் நிறுவனத்தலைவர் இத்தாலியிருந்து வந்திருந்தார் அவர் என்னை அழைத்து "அனு, மேடம் லூயிசா உன்னை மிகவும் விசாரித்ததாக கூறினார்" என்ற போது உண்மையிலேயே எனக்கு வருத்தமாக போய்விட்டது. இத்தனை நாட்கள் மறந்து போனதற்கு.
பாசத்திற்கு நாடு, மொழி, இனம் ஒரு தடையே இல்லை என்பது உண்மையான விசயம்.