Tuesday, February 21, 2006

சங்கிலி

ஏதோ இந்த சங்கிலி அப்படீ இப்படீங்கறாங்க சரின்னு நானும் போட்டுட்டேன். எல்லாம் நம்ம கொங்கு நாட்டு தங்கம். ராசா வோட புண்ணியத்தில போட்டாச்சு. நன்றி ராசு.

Four jobs I have had:
1. காலங்காத்தால நல்லா இழுத்து போத்தி தூங்கறது
2. மயிலு அனுப்பறது
3. நல்லா கொட்டிக்கறது.
4. திரும்ப தூங்கறது.

Four movies I would watch over and over again:
English
1. E-D (English)
2. The day after tomorrow
3. The god must be grazy
4. Mummy

Tamil
1. காந்தி
2. காதலிக்க நேரமில்லை
3. மின்சார கனவு
4. அன்பே சிவம்


Four places I have lived (for years):
1. ஈரோடு
2. கோவை
3. பெராரா
4. மீண்டும் கோவை


Four TV shows I love to watch:
1. தூர்தர்ஷன் - வயலும் வாழ்வும்
2. தூர்தர்ஷன் - குடியரசு தின நிகழ்ச்சிகள்
3. Cartoon network - Tom & Jerry
4. Cartoon network - Poppye Show


Four places I have been on vacation:
1. பாரீஸ்
2. இத்தாலி
3. மாமா வீடு
4. சிங்கை தொடர் வண்டி நிலையம்

Four of my favourite foods:
1. தோசை
2. மசால் தோசை
3. நெய் தோசை
4. ஆனியன் தோசை

Four places I'd rather be now:
1. வீதியிலே பராக்கு பார்த்துக்கிட்டிருக்கலாம்
2. சும்மா ஷாப்பிங் போயி ஒண்ணும் வாங்காம வரலாம்.
3. அம்புலி மாமா படிக்கலாம்
4. படக்கதை படிக்கலாம்

Four sites I visit daily:
1. தமிழ் பயணி
2. கூகிள்
3. தமிழ்மணம்
4. தமிழ் சத்திரம்

Four bloggers I am tagging: *
1. என்னார்
2. அனுசூயா
3. சிவா
4. ஞானம்

Saturday, February 18, 2006

மலர்களும் மனிதர்களும்


மலர்களும் மனிதர்களும்

மலர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு ஆதிகாலம் முதல் தற்காலம் வரை பிரிக்க முடியாமல் தொடர்கிறது. இந்த வாரம் விகடனில் எஸ்ரா அவர்களின் தேடல் மலர்களைப்பற்றி இருந்தது. அப்போதுதான் மலர்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பற்றிய எண்ணம் எழுந்தது.

அந்த கால இலக்கியங்களில் நம் தமிழர் பண்பாட்டை விளக்கும்போது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்ப போருக்கு செல்ல, வெற்றி பெற, திருமணம் என பல்வேறு நிகழ்வுகளுக்கும் பல வகையான மலர்களை பயன்படுத்துவதை பற்றி பாடல்கள் இடம் பெற்றிருக்கும். சித்தன்ன வாசல் குகை ஓவியங்களில் இடம் பெற்ற ஒவ்வொரு ஓவியத்திலும் தாமரை, அல்லி போன்ற மலர்கள் இடம்‍பெற்றுள்ளன. புத்த பிரானின் ஓவியம் வரையும் போது கட்டாயம் தாமரை இடம் பெற்று வருகிறது.

என் சிறுவயதில் வெள்ளிங்கிரி மலைக்கு சென்ற போது என் தந்தை எனக்கு நாகலிங்க பூவை காட்டினார். உண்மையில் மிக அதிசயமான மலர் அது கடவுளின் படைப்பில் பல அதிசயங்கள் உண்டு அவற்றில் அதுவும் ஒன்று. ஒரு சிறு மலருக்குள் பீடம் நடுவில் லிங்கம் அதனை சுற்றி ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு என எவ்வளவு அருமையான படைப்பு. மணமும் அபாரம். நான் நினைக்கிறேன் மனிதன் அந்த மலரை பார்த்துதான் சிவலிங்கத்தை சிற்பமாக செய்திருப்பான் என எண்ணுகிறேன். அன்று இருந்து இன்று வரை இந்த நாகலிங்க பூவின் மீதுள்ள வியப்பு தீரவே இல்லை.

மகுடமல்லி (மகிழ மல்லி) எனும் இப்பூவினை எனக்கு அறிமுகம் செய்தவர் எனது தமிழ் ஆசிரியை. அவர் தினமும் ஏதாவது ஒரு மலரை பற்றியும் அதனை தமிழர் வாழ்வில் உபயோகப்படுத்தியது பற்றியும் எடுத்துரைப்பார். உண்மையில் அப்படி ஒரு ஆசிரியை அமைவது ஆபூர்வம் அவர் வெறும் பாடம் மட்டும் நடத்தாமல். தமிழர் பண்பாடு, மலர்கள், உணவு பழக்கம் பற்றி ஏதாவது ஒன்றை விவாதிப்பார். இதனாலேயே தமிழ் வகுப்புகள் இனிமையாக அமைந்தது. அதற்கு பிறகு மகுடமல்லியை பூம்புகார் சென்ற போது பார்த்தது. வேறு எஙகும் காண கிடைக்கவில்லை. சிறியதாக இருந்தாலும் மணம் மிக அதிகம்.

பவளமல்லி என் உறவினர் வீட்டில் பார்த்தது. இது மற்றொரு அதிசயம். எல்லா பூ விற்கும் காம்பு பச்சை நிறத்தில் இருக்க இதற்கு மட்டும் பவிள நிறத்தில் அமைந்துள்ளது. இது மாலையில் மட்டுமே மலர்கிறது. அருமையான மணம் கொண்டது.

இப்படியே பார்த்தால் செண்பகம், அல்லி, செம்பருத்தி, அந்திமல்லி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஆனால் தற்போது உள்ள இட நெருக்கடியில் பின் வரும் சந்ததியினருக்கு இந்த மலர்களை சந்திக்க வாய்ப்பே இருக்காது என எண்ணுகிறேன். ஏன் நம்மில் பலருக்கு நம் முன்னோர் பார்த்து ரசித்த பல மலர்கள் காண கிடைப்பதில்லை. இது போக நம் இலக்கியங்களில் வரும் ஆத்தி மலர், அனிச்சை, காந்தள், இச்சி மலர் என பல வகையான மலர்களை காலம் தொலைத்து விட்டது. ஆனாலும் அந்த இடத்தை நிறைவு செய்ய தற்போது ரோஜா டூலிப், லாவண்டர் என பல புதுப்புது அயல்நாட்டு மலர்கள் வந்து விட்டது. எந்த நாட்டை சேர்ந்தததாக இருந்தாலும் மலர் மலர்தான். ரசிக்கும் வகையில்தான் உள்ளது. மலர்களை பார்த்து மயங்காத மனித மனம் ஏதும் உண்டா?

Friday, February 10, 2006

என்ன விலை அழகே?






போட்டோவ பார்த்தாச்சா? எல்லாம் காசுக்காக போடும் ‍வேஷம். வெனீஸ் மற்றும் ரோம் நகரில் இந்த மாதிரி வேடமிட்ட மனிதர்கள் நின்றிருப்பார்கள். அவர்களுக்கு 50 சென்ட் காசு கொடுத்தால் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாம். காசு போடாம போட்டோ எடுத்தா மூஞ்சியை திருப்பிக்குவாங்க. நம்மூர் பிச்சைகாரர்கள் போலதான் என்ன கொஞ்சம் கலையலகுடன் புது உத்தியில் பிச்சை எடுக்கிறார்கள். ஆனால் பாவம் காலை முதல் மாலை வரை எந்த சிறு சலனமும் இன்றி நிற்பது மிகவும் கடினம்.சில சமயம் உண்மையான சிலையா மனிதர்களா? என வித்தியாசமே தெரியாது. என்ன கண்கள் மட்டும் காட்டிக் கொடுத்துவிடும் உண்மையை.

Thursday, February 09, 2006

போதுமடா சாமி

கோவையில் ஏற்கனவே தனியாரால் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது திருப்பூரில் ஒரு வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு செலவு செய்யப்பட்ட பல கோடிகளில் சில கோடிகளை சிறு சிறு தொழிற்சாலைகளுக்கு கழிவு நீர் சுத்திகரிப்புசாலை அமைக்க கொடுத்திருந்தாலோ அல்லது சிறுதுளி போன்ற அமைப்புக்கு கொடுத்திருந்தாலோ திருப்பூரின் தண்ணீர் பஞ்சம் கொஞ்சமாவது தீர்ந்திருக்கும்.

அதே போல பொள்ளாச்சிக்கு அருகில் ஒரு கிராமம் உள்ளது. அந்த ஊரில் ஒரு பொதுவான அம்மன் கோவில் உள்ளது. அதற்கு அடுத்து ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தங்களுக்கு என புதிய தனி அம்மன் கோவில் கட்டினர் அதனை அடுத்து அதே மக்கள் ஒரு குறிப்பிட்ட குலத்திற்கு என தனி கோவில் கட்டிக்கொண்டு உள்ளார்கள். தற்போது அந்த ஒரு கிராமத்தில் மட்டும் 3 அம்மன் கோவில்கள் உள்ளன. அதுபோக மற்றகடவுள் கோவில்கள் தனி. ஆனால் அந்த ஊரில் ஒரே ஒரு ஆரம்ப பள்ளிதான் உள்ளது. நடுநிலைப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள சிற்றூருக்கு பேருந்தில்தான் மாணவர்கள் செல்ல வேண்டும். மேற்படிப்பு படிக்க பொள்ளாச்சிக்கோ அல்லது கோவைக்கோதான் செல்ல வேண்டும். இந்த கோவில்கள் கட்ட செலவு செய்யும் பல லட்சங்களில் சில லட்சங்களையாவது பள்ளிகள் கட்ட உதவியிருந்தால் பல மாணவர்களின் படிப்பு பாதியில் நின்றிருக்காது.

நாம் போற்றி வணங்கும் அடியார்களும் ஆழ்வார்களும் இறைவன் அருளை பெற கோவில் கட்டி வணங்கவில்லை. அவர்கள் இறைவன் அருளை பெற அவனுடைய படைப்பு (உயிரினங்கள்) களுக்கு உதவி செய்து அருளடைந்தனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வாழ்ந்து இறை அருளை பெற்றனர். ஆனால் தற்காலத்தில் தங்களுடைய புகழை பரப்பவும் தங்களின் பெருமையை உலகறிய செய்யவும் போட்டி போட்டுக் கொண்டு அதிக செலவில் கோவில்கள் கட்டி தங்கள் பெயரை நிலைநாட்டுகின்றனர். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பல கோவில்கள் நம் முன்னோர்களால் கட்டப்பட்டு தற்போது கேட்பாரற்று, முறையான பராமரிப்பு இன்றி சிதைந்து அழிந்து கொண்டுள்ளன. நாம் புதிது புதிதாக கோவில்கள் கட்டுவதைவிட இருப்பதை நல்ல முறையில் பராமரிப்பு செய்தாலே போதும். ஒரு ஊருக்கு ஒரு கோவில் என்று இருந்தது இன்று ஒரு வீதிக்கு பல கோவில் என்ற நிலையில் உள்ளது. இனியாவது சிந்தித்து செயல்படுவோம். நம்நாட்டின் அத்தியாவசிய தேவைகள் நிறைவடைந்தபின் இம்மாதிரி செலவுகள் செய்யலாமே?

Thursday, February 02, 2006

தினமலருக்கு நன்றி

நேற்று எனது வலைப்பதிவை வெளியிட்ட தினமலருக்கு எனது மனமார்ந்த நன்றி. முதலில் வலைப்பதிவை ஏதோ நமக்கு தெரித்த தெரியாத சில விசயங்களை பற்றி எழுதினேன். அதற்கு வலைப்பதிவு நண்பர்களின் ஆதரவும் பின்னூட்டங்களையும் கண்டபிறகு சற்று பொறுப்பு கூடி விட்டது. அதுபோக தற்போது தினமலரும் எனது வலைப்பதிவை வெளியிட்டுவிட்டது. சற்று பொறுப்பு அதிகமாகியுள்ளது. முடிந்த வரை நல்ல கருத்துகளை வெளியிட இந்த எளியவளின் முயற்சி தொடரும். அதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. முதன் முதலில் தினமலர் செய்தி பற்றி தெரிவித்து வாழ்த்திய திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றிகள். மேலம் பின்னூட்டம் இட்டவர்கள் இடப்போகிறவர்கள் அனைவருக்கும் நன்றி,நன்றி.