Showing posts with label பூ. Show all posts
Showing posts with label பூ. Show all posts

Saturday, September 29, 2007

ஆப்பிள் பூவே நீ யாரோ.. ...


"ஆப்பிள் பெண்ணே நீ யாரோ"னு பாட்டு கேட்டுருக்கறோம் ஆனா ஆப்பிள் பூவ பத்தி பாட்டு இல்ல. இங்க பாருங்க ஆப்பிள் பூ சூப்பரா இருக்குது. மத்த எல்லா பூவயும்விட இது அழகா இருக்கு.
ஆப்பிள் மரம் 6 லயிருந்து 30 அடி வரை வளரும். அது மண்ணோட தன்மைய பொறுத்தது. ஆப்பிளோட சரித்திரம் தெளிவா கிடையாது ஆனா இது காஸ்பியன் மற்றும் கருங்கடலுக்கு நடுவுல இருந்திருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் கருதுறாங்க.இது ரோமானியர் களுக்கும் கிரேக்கர்களுக்கும் பிடித்தமான உணவா இருந்திருக்குது. அவ்ளோ ஏனுங்க ஆதாம் ஏவாள் கதைலயே ஆப்பிள்தான வருது.
அ‍மெரிக்காவுக்கு ஆப்பிள் வியாபாரிகளாலும் ஐரோப்பியர்களாலும் கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது.





ஆப்பிள் பூ பெரிய அளவுல வெள்ளை மற்றும் இளம் ரோசா வண்ணத்துல இருக்கும். 2 - 4 இன்ச் அளவுல நடுவுல அதிகமான மகரந்த துகள்களுடன் இருக்கும். இந்த மலரில் தேன் அதிக அளவுல இருக்கறதால தேனீக்களுக்கு எப்பவும் கொண்டாட்டம்தான். இத விட சிறப்பு இந்த மலரோட நறுமணம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் பாத்ததில்ல நீங்க யாராவது பாத்திருந்தா சொல்லுங்கப்பா.
ஆப்பிள் பழத்த பத்தி ஒன்னும் சொல்ல வேண்டியதில்ல நமக்கே தெரியும்ல.ஆப்பிள் பழத்தோட விதையும் வேர்களும் மிக விஷத்தன்மையுள்ளதுனு சொல்லறாங்க.இதுல முக்கிய விசயம் ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டா டாக்டரே தேவையில்லங்கற பழமொழிதான். பாத்துங்க டாக்டருக்கு படிக்கறவங்க யாரும் ஆப்பிள் மரத்த வளர்த்துடாதீங்க அப்புறம் உங்க தொழிலுக்கு கஷ்டம் ஆயிடும். :)

Wednesday, July 18, 2007

செவ்வந்தி







ஆயுத பூ‍ஜை சரஸ்வதி பூஜை வந்தா கண்டிப்பா எல்லா பக்கமும் சும்மா பளிச்னு இந்த செவ்வந்தி பூ கடை போட்டிருப்பாங்க. யார் யாரோ திடீர் திடீர்னு கடை போட்டு வியாபாரம் ரெண்டு நாள் செய்வாங்க. மழைக்கு வரும் காளான் போல இந்த கடை தோன்றி மறையும். நாமும் அந்த பூவ வாங்கி சாமிக்கு போட்டு பூஜை பண்ணுவோம் ஆனா ஒரு நாள் கூட அதோட பூர்வீகம் என்ன அதனோட குணங்கள் என்னனு யோசிச்சது இல்ல.
செவ்வந்தி பூ பத்தி தெரிஞ்சுக்கலாம்னு கூகுளாண்டவரையும் விக்கி அண்ணனையும் போய் கேட்டா அப்டி ஒரு பேரே இல்லைனு சொல்லிபுட்டாங்க. அட கொடுமையே இது என்ன நம்ம பூவூக்கு வந்த சோதனையின்னு தேடுனப்ப இந்த வலைப்பூ கிடைச்சது. யாரோ ஒரு நல்லவங்க என்ன மாதிரியே பூக்கள பத்தி பதிவுகளா போட்டு தள்ளியிருக்காங்க. அவங்க யாரு எவருனு தெரியல ஆனா அவங்க புண்ணியத்துலதான் தெரிஞ்சுது செவ்வந்திப்பூ பேரு க்ருசாந்தேமம் (Chrysanthemum). இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையில இருந்து வந்ததா சொல்றாங்க.









இந்த பூக்கள் பல நிறங்களில் இருக்கின்றன. மஞ்சள் நமக்கு தெரியும் அதுபோக சிவப்பு, ஆரஞ்சு இப்டி நிறைய கலர்ல இருக்குதுங்க. ஆனா நாம சாமிக்கு வெக்கறது மஞ்சள்தானுங்களே. அது போக வெள்ளை கலரும் வெப்போம்.

அப்புறம் இத முக்கியமா ஜப்பான் சீனாவுல தானுங்க வளர்த்து பயன்படுத்தறாங்க. ஆனா அவங்க இத மன்னரோட சின்னமாவும் துக்கத்தோட வெளிப்பாடாவும் நினைக்கிறாங்க. ஜப்பானுல இத மகிழ்ச்சியான புனித சின்னமா பாக்கறாங்க. ஊருக்கு ஊரு ஒரே பொருள் வெவ்வேறு விதமா பார்க்கபடுது.





இந்த பூக்களுக்குனு பல மருத்துவ குணம் சொல்லறாங்க முக்கியமா இதிலிருந்து தயாரிக்கபடும் ஒரு ரசாயனம் சிறந்த கொசு மற்றும் பூச்சி கொல்லியா பயன்படுது. ஆனா இதுல இருக்கற ரசாயனம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தறதில்ல அது மட்டும் இல்ல இது பயோ டீ கிரேடபுல் (அதாங்க இயற்கையா மட்கும் பொருள்) அதனால சுற்றுசூழல் பாதிப்பு சுத்தமா கிடையாது. கொஞ்சம் பேரு இதனோட இதழ்கள காய வெச்சு டீ தயாரிச்சு சாப்பிடறாங்களாம் நல்லா இருக்குனு போட்டு இருக்குது குடிச்சு பார்த்தாதான் தெரியும்.

Saturday, April 21, 2007

தமிழ்நாடு தேசிய மலர்


சித்திரை கனி முடிஞ்சு ஆபீஸ் வந்தவுடன் என் சகா ஒருத்தரு கேரளா காரர் தன் கணிணி பெட்டியில் மஞ்சள் நிற கனி பூ படம் வச்சிருந்தாரு. நான் போ்ய் இந்த பூ எனக்கு ரொம்ப பிடிக்கும் இதோட பேர் என்னங்கனு கேட்டேன். உடனே அவரு இதுக்கு பேரு கனிக்கொன்னா பூ இத வச்சுதான் நாங்க விஷு பண்டிகை கொண்டாடுவோம்னு சொன்னாரு. அத்தோட விட்டா பரவாயில்ல இதுதான் எங்க மாநிலத்தோட பூ (State flower of Kerala) அப்டீனு சொன்னாரு. சொல்லிட்டு உங்க மாநில பூ எதுனு வேர கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி. அதுலதான் பிரச்னையே நானும் தேடறேன் தேடறேன் தேடிட்டேயிருக்கேன். கிடைக்க மாட்டேங்குது.


கூகுள் ஆண்டவர கேட்டேன், விக்கி அண்ணன கேட்டேன் ஒன்னும் பிரயோசனம் இல்ல. என் அரட்டையில ஸ்டேடஸ் போட்டு பார்த்தேன். என் நண்பர்களுக்கும் தெரியல. சிலரு சட்னு தாமரைனு சொல்லி சிரிக்க வெச்சாங்க. சிலர் அப்டி ஒரு விசயம் இருக்கானு கேள்வி கேட்டாங்க. இப்டியே போகுதே தவிர பதில் இன்னும் கிடைக்கல. நம்ம ப்ளாக்க படிக்கற மக்கள் யாராவது விபரம் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா மாநிலங்களுக்குனு மலர் உண்டா? அதாவது தேசிய மலர் போல. அப்டியிருந்தா நம்ம மாநில மலர் எதுனு ‍சொல்லுங்க? அது சம்பந்தமா இணையத்துலயிருந்தா லிங்க் கொடுங்கப்பா.

Wednesday, October 18, 2006

லாவண்டர்


கடந்த வாரம் திரு.கோபாலன் அவர்கள் லாவண்டர் பூ படம் எடுத்து அனுப்பியிருந்தார். சரி இந்த பூ பத்தி எதாவது தெரியுமானு கேட்டா ஒன்னுமே தெரியாது அங்க போனா கும்முனு வாசம் வரும் நிறைய தேனீக்கள் இருக்கும்னு மட்டும் சொல்லிட்டாரு.
லாவண்டர்னா பாய்ஸ் படத்துல ஷங்கர் காட்டுனதுதான் எனக்கு ஞாபகம் வருது. நானா வலைல தேடுனப்ப நிறைய விஷயம் தெரிஞ்சது. எனக்கு தெரிஞ்சத இங்க எழுதியிருக்கேன்.
லாவண்டர்னா கத்திரிபூ கலர்ல மட்டும்தான் இருக்கும்னு நினைச்சிட்டுயிருந்தேன். ஆனா
லாவண்டர்ல மட்டும் சுமார் 20 -30 வகையிருக்குது. அதுவும் பல நிறங்கள் இருக்கு. இங்க நீங்க பாக்கறது மஞ்சள் லாவண்டர் பூ.
லாவண்டர் பொதுவா சூரிய ஒளி அதிகம் விரும்பும் மலர். அதோட தாய்நாடு பிரான்ஸ்தான். ஆனா இப்ப பெரிய லாவண்டர் தோட்டம் ஆஸ்திரேலியாவுல டாஸ்மேனியாங்கற
இடத்துலயிருக்குது. இது குத்து செடி மட்டும் இல்ல சில வகையான பூ செடிகள் பல அடி உயரம் கூட வளருதாம்.



லாவண்டர் வெறும் வாசனைக்கு மட்டும் பயன்படுத்தறது இல்ல மருத்துவத்துக்கும் பயன்படுத்தறாங்க. இந்த லாவண்டர் பூச்சி கடி பூச்சிகள் வராமயிருக்கவும் பயன்படுத்தறாங்க. அதுபோக தலைவலி தைலம் தயாரிக்கவும் பயன்படுத்தறாங்க.


லாவண்டர் பூ தெய்வ வழிபாட்டுக்கும் பயன்படுத்தறாங்களாம். இந்த பூ பூக்கும் காலம் நவம்பர் டிசம்பர் தான். கிட்டதட்ட நம்ம ஊர் துளசி மாதிரி. ஏதோ எனக்கு நெட்டுல கிடைச்ச விசயங்கள எழுதியிருக்கேன்.

Tuesday, September 26, 2006

கிளி பூ







மேலயிருக்கறதெல்லாம் வலையுலக நண்பர் அனுப்புன படங்கள். இந்த பூ அப்பிடியே கிளி மாதிரியிருக்கு, இது தாய்லாந்து நாட்டுல இருக்கறதா தெரியுது. இது போக வேற எந்த தகவலும் இந்த பூ பத்தி தெரியலீங்க. பூ படத்த பாத்தவுடன எனக்கும் வலையேத்தனும்னு ஆசை வந்து போட்டாச்சு.
அப்புறம் நானும் பெரிய வலைப்பதிவர் ஆயிட்டனுங்க. எப்டினு கேட்கறீங்களா? நமக்கும் போலி பின்னூட்டம் வர ஆரம்பிச்சுடுச்சே. என் நண்பர்கிட்ட பேசும்போது இப்டி போலி பின்னூட்டம் வந்திருக்குனு சொன்னதுக்கு அவரு அட பரவாயில்ல நீயும் பெரிய வலைபதிவர் ஆயிட்டனு சொல்றாரு. ஏதோ பூ, மரம், செடி படம் போட்டு ரெண்டு வரி எழுதிட்டு இருக்கற நமக்கு எதுக்குங்க இந்த விளம்பரம். :(

Wednesday, June 21, 2006

அடுத்த வீட்டு அல்லி



மாற்றான் தோட்டத்து மல்லிகை மணப்பதை போல அடுத்த வீட்டு அல்லியும் அழகாகதான் இருக்கிறது.

ஆபீஸ் பக்கத்து வீட்டுல இந்த அல்லி செடி வெச்சிருக்காங்க அதுவும் தினம் தினம் அழகா பூ விட்டுகிட்டு இருக்குது. உடனே போட்டோ பிடிச்சு போட்டாச்சு. ஆனா ஒரு சந்தேகம் இந்த அல்லியும், குமுதமலர் (குமுதவள்ளி இல்லீங்க) அப்டீனு சொல்லறதும் ஒன்னுதானா இல்ல வேற வேறயா?. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கறேன்.

Sunday, May 28, 2006

நாகலிங்கம்


இந்த படத்துக்கு மேட்டர் இங்க போய் பாருங்க. இது நான் முதல்ல போட்ட போஸ்ட்டிங்கோட தொடர்ச்சினு வெச்சிக்கலாம்.இந்த மலர் இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. உள்ள இருக்கற லிங்க அமைப்பை சரியா படம் பிடிக்க முடியல. இத படம் பிடிக்க தேடின தேடல் ம்ம்... மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் எங்கயும் கிடைக்கல. கடைசில ஒரு நண்பர் கும்பகோணத்திலிருந்து எடுத்து கொடுத்தாரு.படம் எடுத்து கொடுத்த நண்பருக்கு நன்றிங்கோ.

Saturday, February 18, 2006

மலர்களும் மனிதர்களும்


மலர்களும் மனிதர்களும்

மலர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு ஆதிகாலம் முதல் தற்காலம் வரை பிரிக்க முடியாமல் தொடர்கிறது. இந்த வாரம் விகடனில் எஸ்ரா அவர்களின் தேடல் மலர்களைப்பற்றி இருந்தது. அப்போதுதான் மலர்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பற்றிய எண்ணம் எழுந்தது.

அந்த கால இலக்கியங்களில் நம் தமிழர் பண்பாட்டை விளக்கும்போது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்ப போருக்கு செல்ல, வெற்றி பெற, திருமணம் என பல்வேறு நிகழ்வுகளுக்கும் பல வகையான மலர்களை பயன்படுத்துவதை பற்றி பாடல்கள் இடம் பெற்றிருக்கும். சித்தன்ன வாசல் குகை ஓவியங்களில் இடம் பெற்ற ஒவ்வொரு ஓவியத்திலும் தாமரை, அல்லி போன்ற மலர்கள் இடம்‍பெற்றுள்ளன. புத்த பிரானின் ஓவியம் வரையும் போது கட்டாயம் தாமரை இடம் பெற்று வருகிறது.

என் சிறுவயதில் வெள்ளிங்கிரி மலைக்கு சென்ற போது என் தந்தை எனக்கு நாகலிங்க பூவை காட்டினார். உண்மையில் மிக அதிசயமான மலர் அது கடவுளின் படைப்பில் பல அதிசயங்கள் உண்டு அவற்றில் அதுவும் ஒன்று. ஒரு சிறு மலருக்குள் பீடம் நடுவில் லிங்கம் அதனை சுற்றி ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு என எவ்வளவு அருமையான படைப்பு. மணமும் அபாரம். நான் நினைக்கிறேன் மனிதன் அந்த மலரை பார்த்துதான் சிவலிங்கத்தை சிற்பமாக செய்திருப்பான் என எண்ணுகிறேன். அன்று இருந்து இன்று வரை இந்த நாகலிங்க பூவின் மீதுள்ள வியப்பு தீரவே இல்லை.

மகுடமல்லி (மகிழ மல்லி) எனும் இப்பூவினை எனக்கு அறிமுகம் செய்தவர் எனது தமிழ் ஆசிரியை. அவர் தினமும் ஏதாவது ஒரு மலரை பற்றியும் அதனை தமிழர் வாழ்வில் உபயோகப்படுத்தியது பற்றியும் எடுத்துரைப்பார். உண்மையில் அப்படி ஒரு ஆசிரியை அமைவது ஆபூர்வம் அவர் வெறும் பாடம் மட்டும் நடத்தாமல். தமிழர் பண்பாடு, மலர்கள், உணவு பழக்கம் பற்றி ஏதாவது ஒன்றை விவாதிப்பார். இதனாலேயே தமிழ் வகுப்புகள் இனிமையாக அமைந்தது. அதற்கு பிறகு மகுடமல்லியை பூம்புகார் சென்ற போது பார்த்தது. வேறு எஙகும் காண கிடைக்கவில்லை. சிறியதாக இருந்தாலும் மணம் மிக அதிகம்.

பவளமல்லி என் உறவினர் வீட்டில் பார்த்தது. இது மற்றொரு அதிசயம். எல்லா பூ விற்கும் காம்பு பச்சை நிறத்தில் இருக்க இதற்கு மட்டும் பவிள நிறத்தில் அமைந்துள்ளது. இது மாலையில் மட்டுமே மலர்கிறது. அருமையான மணம் கொண்டது.

இப்படியே பார்த்தால் செண்பகம், அல்லி, செம்பருத்தி, அந்திமல்லி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஆனால் தற்போது உள்ள இட நெருக்கடியில் பின் வரும் சந்ததியினருக்கு இந்த மலர்களை சந்திக்க வாய்ப்பே இருக்காது என எண்ணுகிறேன். ஏன் நம்மில் பலருக்கு நம் முன்னோர் பார்த்து ரசித்த பல மலர்கள் காண கிடைப்பதில்லை. இது போக நம் இலக்கியங்களில் வரும் ஆத்தி மலர், அனிச்சை, காந்தள், இச்சி மலர் என பல வகையான மலர்களை காலம் தொலைத்து விட்டது. ஆனாலும் அந்த இடத்தை நிறைவு செய்ய தற்போது ரோஜா டூலிப், லாவண்டர் என பல புதுப்புது அயல்நாட்டு மலர்கள் வந்து விட்டது. எந்த நாட்டை சேர்ந்தததாக இருந்தாலும் மலர் மலர்தான். ரசிக்கும் வகையில்தான் உள்ளது. மலர்களை பார்த்து மயங்காத மனித மனம் ஏதும் உண்டா?