Saturday, April 21, 2007

தமிழ்நாடு தேசிய மலர்


சித்திரை கனி முடிஞ்சு ஆபீஸ் வந்தவுடன் என் சகா ஒருத்தரு கேரளா காரர் தன் கணிணி பெட்டியில் மஞ்சள் நிற கனி பூ படம் வச்சிருந்தாரு. நான் போ்ய் இந்த பூ எனக்கு ரொம்ப பிடிக்கும் இதோட பேர் என்னங்கனு கேட்டேன். உடனே அவரு இதுக்கு பேரு கனிக்கொன்னா பூ இத வச்சுதான் நாங்க விஷு பண்டிகை கொண்டாடுவோம்னு சொன்னாரு. அத்தோட விட்டா பரவாயில்ல இதுதான் எங்க மாநிலத்தோட பூ (State flower of Kerala) அப்டீனு சொன்னாரு. சொல்லிட்டு உங்க மாநில பூ எதுனு வேர கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி. அதுலதான் பிரச்னையே நானும் தேடறேன் தேடறேன் தேடிட்டேயிருக்கேன். கிடைக்க மாட்டேங்குது.


கூகுள் ஆண்டவர கேட்டேன், விக்கி அண்ணன கேட்டேன் ஒன்னும் பிரயோசனம் இல்ல. என் அரட்டையில ஸ்டேடஸ் போட்டு பார்த்தேன். என் நண்பர்களுக்கும் தெரியல. சிலரு சட்னு தாமரைனு சொல்லி சிரிக்க வெச்சாங்க. சிலர் அப்டி ஒரு விசயம் இருக்கானு கேள்வி கேட்டாங்க. இப்டியே போகுதே தவிர பதில் இன்னும் கிடைக்கல. நம்ம ப்ளாக்க படிக்கற மக்கள் யாராவது விபரம் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா மாநிலங்களுக்குனு மலர் உண்டா? அதாவது தேசிய மலர் போல. அப்டியிருந்தா நம்ம மாநில மலர் எதுனு ‍சொல்லுங்க? அது சம்பந்தமா இணையத்துலயிருந்தா லிங்க் கொடுங்கப்பா.

Wednesday, April 18, 2007

அழகே அழகே

அழகு பத்தி எழுத சொல்லி தேவ் சொல்றாரு ஆனா பாருங்க எனக்கு இந்த சனி உச்சத்துல இருக்கும் போலயிருக்கு. கடந்த 2 வாரமா வீட்டுல இணையம் வேலை செய்யில சரினு ஆபீஸ் வந்தா தமிழ் வர மாட்டேங்குது இப்டி பல பிரச்னைகளுக்கு நடுவுல ஒரு வழியா சுடர ஏத்தி முடிச்சுட்டு பாத்தா நம்ம தேவ் அழகபத்தி எழுத சொலறாரு. ம்ம்ம்ம்... எனக்கு எது அழகுனு தோணுதோ அதை பத்தி ‍எழுதறேன்.

1. மலர்கள்


எனக்கு அழகுனு சொன்னவுடனே ஞாபகம் வரது மலர்கள்தான். எந்த பூவ பார்த்தாலும் எனக்கு அழகாதான் தெரியுது. எங்க பூ படம் பார்த்தாலும் புடிச்சு நம்ம கணிணியில நிறைச்சுடுவேன் :). மலர்களை பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் தனியானது.

2. இயற்கை

அழகுங்கறது என்ன பொருத்தவரைக்கும் மனதுக்கு உற்சாகம் தரக்கூடியதா இருக்கனும் அப்டி பார்த்தா இயற்கைய விட்டா சிறந்த அழகு எதுவும் இல்லை. மலைகள், பச்சை பசும் புல் வெளிகள், பனிவிழும் காலை நேரம், பறவைகள், பூக்கள் இப்டி சொல்லிகிட்டே போகலாம். இயற்கையில எல்லாமே அழகுதான்.

3. புன்னகை

மனுசனோட முகம் எப்டியிருந்தாலும் சரி புன்னகை செய்யும்போது அழகா ஆயிடுவாங்க அது புன்னகையின் சிறப்பு. எவ்ளோ அழகான முகமாயிருந்தாலும் புன்னகையில்லாம உம்முனு இருந்தா அழகு கெட்டு போயிடுது. ஒரு சின்ன புன்னகை மிக அழகா மாத்திடும். எனக்கு புன்னகை செய்யற முகம் எல்லாம் அழகுதான் :)

4. கருணை முகம்

பொதுவா எல்லாருக்கும் அவங்கஅவங்க அம்மாதான் முதல் அழகி. அவங்க எப்டியிருந்தாலும் அவங்க முகம் மடடும்தான் அழகா தெரியும் எல்லா குழந்தைகளுக்கும் அதுக்கு ஒரே காரணம் அன்புதான். எவ்ளோ முகங்களை பார்த்தாலும் அவங்க அம்மா முகம் மட்டும் அழக தெரிய காரணம் அவங்களோட தூய்மையான அன்புதான். அன்னை தெரசா எல்லாருக்கும் அழகா தெரிய காரணமும் அன்பு கருணைதான். நம்மிடம் அன்பா இருக்கற எல்லாரோட முகமும் அவங்கவங்களுக்கு அழகுதான்.

5. குழந்தைகள்.

எந்த நிறம் சாதி உயரம் எடை எப்டியிருந்தாலும் எல்லா குழந்தைகளும் அழகுதான். அவங்க சிரிப்பு அழுகை எல்லாமே அழகுதான்.

அப்பாடி எப்டியோ தேவ் எழுத சொன்னத எழுதிட்டேன்.

நான் கூப்பிடறவங்க...

கொங்கு ராசா
இளா.
இராகவன்

Wednesday, April 11, 2007

சுட்டும் விழிச் சுடரே...

இத்தனை பெரியவர்கள் ஏந்திய சுடரை நம்பிக்கையுடன் இச்சிறுப் பெண்ணிடம்கொடுத்த அய்யா ஞானவெட்டியான் அவர்களுக்கு நன்றி. என்னால் இயன்ற வரை சுடரைசிறப்பாக ஏற்ற முயற்சித்துள்ளேன்.

1.இக்காலகட்டத்தில், பணிபுரியும் மங்கையருக்கு உண்டாகும், அல்லது பிறரால் உருவாக்கப்படும் சரவல்கள் எத்தன்மையது? அவைகளால் ஏற்படும் மனத் தாக்கத்தைப்போக்க அல்ல எதிர்கொள்ள எடுக்கவேண்டிய செயல்கள் என்ன?

முதலில் சரவல்கள் என்றால் சரியாக விளங்கவில்‍லை எனினும் இடையூறுகள் எனக்கொண்டு நான் பதில் கூறுகிறேன். பொதுவாக தற்காலத்தில் பணிபுரியும் மங்கையர்கள் மட்டும் அல்ல, அந்த காலத்தில் இருந்து பெண் வெளியே செல்லும் போது பலப்பல இடையூறுகளை சந்தித்துதான் வருகிறாள். ஆனால் இக்காலகட்டத்தில் சற்று குறைந்துள்ளது என்பது எனது கருத்து. ஆனால் இந்த சரவல்களை சமாளிக்க முதலில் பெண்களுக்குள்ளே ஒற்றுமை வேண்டும். அது கொஞ்சம் குறைவாகவே உள்ளது என்பது என் கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட படித்த பெண்களிடம் இருப்பதில்லை.

பிரச்சினைகள் அற்ற மனிதர்கள் தான் யார் உள்ளனர். பெண்களுக்கு வரும் பிரச்சினைகள் மட்டும் பிரச்சினையா உடல் ஊனமுற்ற நண்பர்களுக்கு வருவதை காணும் போது பெண்கள் பிரச்சினை எனப்படும் வாய்க் கேலி போன்றவை சற்று தாக்கம் குறைவாகவே இருக்கும்.நமது பிரச்சினையை பிறரிடம் தொடர்ந்து சொல்லுவதால் புலம்பல்வாதி (புலம்பல் கேசு) என்ற பெயர்தான் கிடைக்கும். முடிந்த அளவு ஒரு பிரச்சினைக்கு தீர்வை கண்டறிதல்தான் அவசியம். சரவல்களை விளக்கி பலருக்கும் சொல்லுவதால் முன்னேற்றம் ஏதும் கிடையாதே.

"குற்றம் பார்க்கின் சுற்றம் கிடையாது"

2.இணைய அனுபவம் எப்படி உள்ளது? வலைப்பூக்களில் நிலவி வரும் சாதி சமய, ஆத்திக நாத்திக விவாதங்களால் அவைகளைப் படிப்பவரின் மன நிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? இவைகளால் பயனுண்டா? அல்லது கால விரயமா?

இணைய அனுபவம் என்னை பொறுத்த வரையில் மசாலா கலவை போல எல்லா சுவையும் கலந்தே இருக்கிறது. ஆனால் நிறைய நல்ல நண்பர்களை அறிமுகம் செய்தது இந்த இணையம்தான். மேலும் சில எதிர்கருத்துக்களை அறிய உதவியதும் இணையம்தான் சில விசயங்களில் இப்படி கூட யோசிக்க முடியுமா என வியக்கவும் வைத்துள்ளது.

சாதி, சமய, ஆத்திக, நாத்திக விவாதங்கள் இன்று இந்த இணையத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்லவே. இது தொன்று தொட்டு பல பெயர்களில் நடைபெற்றுள்ளது. சைவ, வைணவ சண்டை, பகுத்தறிவு பற்றிய சர்ச்சை, மத சண்டை, பெண்ணுரிமை இப்படி பல தலைப்புகளில் விவாதங்கள் பழங்காலத்தில் இருந்து நடந்து கொண்டே உள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக காணோம். ‍வெறும் அரசியலுக்கும் புகழ் பெறவும் மட்டுமே உதவுகிறது என்பது என் கருத்து. என்னதான் விவாதங்கள் நடத்தினாலும் இன்னும் தெய்வ வழிபாடு செய்பவர்களும் தெய்வத்தை எதிர்பவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த விவாதம் அவர்களுக்கு உதவாது சொந்த அனுபவம், வாழ்க்கை சூழ்நிலை மட்டுமே இதை தீர்மானிக்கிறது.

இந்த விவாதங்களால் மன அமைதி பாதிப்படைகிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். சில விவாதங்களை பார்க்கும்போது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களோ என எண்ணத் தோன்றுகிறது. விவாதிப்பவர்கள் ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். நாம் கூறும் கருத்துக்கு கட்டாயம் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதை விடுத்து நாம் சொல்லும் கருத்து மட்டும் மிகச்சிறந்தது இதை விட வேறு இல்லை என எண்ணக்கூடாது.

"கற்றது கைம்மண் அளவு.. கல்லாதது உலகளவு"

3. "தமிழ் வாழவேண்டும்; அழிந்துவிடலாகாது." இது குறித்து இன்றைய இளைய தலைமுறையினரின் கருத்து என்ன? செயல்கள் எப்படி உள்ளன?

இந்த கால இளைஞர்களிடம் தமிழ் நன்றாகவே வளர்ந்து வருகிறது என்பது என் கருத்து. தினம் தோன்றும் தமிழ் வலைப்பூக்களை பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்த இளைய தலைமுறையினர் யாரும் தமிழ் வாழ்க என கோஷம் போட்டு அதை செயல் படுத்துவதில்லை அமைதியாக தங்களின் கருத்துக்களை கணிணியில் தட்டிவிட்டு இருந்து விடுகிறார்கள். வீதியில் வந்து போராட்டம் நடத்த தயாராக இல்லை. படிக்கும்வரை எப்படியோ ஆனால் படித்து வேலையில் அமர்ந்த பின்பு தங்களின் தாய்மொழி மீதான பற்று அதிகப்படுவதாகவே தோன்றுகிறது.

"காய்த்த மரமே கல்லடி படும்"

4.மங்கையரின் சுதந்திரம் பற்றித் தங்களின் கருத்துக்களை விரிவாக எழுதவும்.

மங்கையரின் சுதந்திரம் பற்றி என் கருத்து மங்கையர்க்கு தேவையான அளவு சுதந்திரம் இருக்கிறது. இதை பயன்படுத்தி முன்னேற வேண்டியது பெண்களின் வேலைதான். இந்தியஅரசின் அரசியல் அமைப்பில் இருந்து நடைமுறை வாழ்க்கை வரை பெண்ணுக்கு படிப்பு, உடை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கருத்து என அனைத்திலும் முழு சுதந்திரம் இருந்து கொண்டுதான் உள்ளது. அதை பயன்படுத்தி முன்னேற வழி பார்க்க வேண்டும் அதை விடுத்து பெண்ணுரிமை சுதந்திரம் என பேசிக்கொண்டே இருப்பது அநாவசியம். சுதந்திரம் அதிகம் உள்ள மேற்கத்திய நாடுகளில் கூட பெண் அதிபர்களோ அதிகபட்சம் பெண்கள் அரசியலில் சாதித்ததோ இல்லை ஆனால் இந்தியாவில் மட்டுமே பெண்கள் அரசியலில் கூட அதிக அளவில் சாதித்துள்ளார்கள்.
இந்த வலைப்பூவில் எடுத்துக்கொண்டால் கூட பெண் வலைபதிவர்கள் இடும் பதிவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பல ஆண் வலைபதிவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் மிக குறைந்த எணணிக்கையில் பெண்கள் இருப்பதால் அதிக அளவில் கவனிக்கப்படுகிறார்கள் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும் அதிகம். இங்கு பெண் எதிர் கொள்ளும் அதே அளவு பிரச்னைகளை ஆண்களும் எதிர் கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த கருத்துகள் அவ்வளவாக முக்கியத்துவம் பெறுவதில்லை. இதை நல்ல விதமாக உபயோகிக்க வேண்டிய கடமை பெண் பதிவர்களுக்கு உள்ளது. பெண் முயற்சி செய்தால் முன்னேற இந்த நாடு எல்லா உதவியும் செய்கிறது. ஆனால் இது பத்தாது என்று மேலும் பல சிறப்பு சலுகைகளை எதிர்பார்ப்பது அநாவசியம் என்பதே என் கருத்து.

"மாதா பிதா குரு தெய்வம் "

5.தங்களுக்குப் பிடித்த தங்களின் பதிவு, அல்லது மிகவும் பிடித்த தலைப்பில் ஒரு பதிவை இடவும்.
இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி பதிவு எழுதுனதே இல்லீங்க (பதிவு ஏதாவது போட்டாதான :)) எனக்கு பிடித்த தலைப்பில் பதிவு இனிவரும் நாட்களில் எழுதலாம் என எண்ணியுள்ளளேன். இப்போதைக்கு இந்த சுடரை ஏத்திட்டேன்.

"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்"

அடுத்தது நமது பெயரிலி(அனானி) புகழ் செந்தழல் இரவி அவர்களிடம் ஒப்படைக்கிறேன்.
அவருக்கு வைக்க ஆசைப்படும் ஆப்புகள்..

1. சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்த வளாகத்தேர்வுகள் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. இந்த போக்கின் எதிர்காலம் என்ன?

2. E-lanes வகை வேலைகள் தமிழர்கள் எந்த அளவு பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். நடைமுறையில் இந்த வகை வேலைகளின் எதிர்காலம் மற்றும் வெற்றி சாத்தியகூறுகள் என்ன?

3. நாஸ்காம் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் குடுத்துள்ள அறிக்கையில் 25% மாணவர்கள் கூட வேலைக்கு தகுதியற்றவர்கள் என கூறியுள்ளது. இது குறித்து தங்களின் சொந்த கருத்து மற்றும் சொந்த அனுபவம் என்ன?

4. இந்த கால இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்த பின்பு பொருளாதாரத்தை எதிர்காலத்திற்காக சேர்ப்பவர்கள் அதிகமா? அல்லது ஆடம்பரத்தில் மூழ்கி விடுகிறார்களா?

5. இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலையின் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்மற்ற துறையினரின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் பாதிக்கப் படுகிறது. இந்த அதீத ஊதியம் பற்றிய தங்களின் கருத்துதேவைதானா?