Wednesday, April 11, 2007

சுட்டும் விழிச் சுடரே...

இத்தனை பெரியவர்கள் ஏந்திய சுடரை நம்பிக்கையுடன் இச்சிறுப் பெண்ணிடம்கொடுத்த அய்யா ஞானவெட்டியான் அவர்களுக்கு நன்றி. என்னால் இயன்ற வரை சுடரைசிறப்பாக ஏற்ற முயற்சித்துள்ளேன்.

1.இக்காலகட்டத்தில், பணிபுரியும் மங்கையருக்கு உண்டாகும், அல்லது பிறரால் உருவாக்கப்படும் சரவல்கள் எத்தன்மையது? அவைகளால் ஏற்படும் மனத் தாக்கத்தைப்போக்க அல்ல எதிர்கொள்ள எடுக்கவேண்டிய செயல்கள் என்ன?

முதலில் சரவல்கள் என்றால் சரியாக விளங்கவில்‍லை எனினும் இடையூறுகள் எனக்கொண்டு நான் பதில் கூறுகிறேன். பொதுவாக தற்காலத்தில் பணிபுரியும் மங்கையர்கள் மட்டும் அல்ல, அந்த காலத்தில் இருந்து பெண் வெளியே செல்லும் போது பலப்பல இடையூறுகளை சந்தித்துதான் வருகிறாள். ஆனால் இக்காலகட்டத்தில் சற்று குறைந்துள்ளது என்பது எனது கருத்து. ஆனால் இந்த சரவல்களை சமாளிக்க முதலில் பெண்களுக்குள்ளே ஒற்றுமை வேண்டும். அது கொஞ்சம் குறைவாகவே உள்ளது என்பது என் கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட படித்த பெண்களிடம் இருப்பதில்லை.

பிரச்சினைகள் அற்ற மனிதர்கள் தான் யார் உள்ளனர். பெண்களுக்கு வரும் பிரச்சினைகள் மட்டும் பிரச்சினையா உடல் ஊனமுற்ற நண்பர்களுக்கு வருவதை காணும் போது பெண்கள் பிரச்சினை எனப்படும் வாய்க் கேலி போன்றவை சற்று தாக்கம் குறைவாகவே இருக்கும்.நமது பிரச்சினையை பிறரிடம் தொடர்ந்து சொல்லுவதால் புலம்பல்வாதி (புலம்பல் கேசு) என்ற பெயர்தான் கிடைக்கும். முடிந்த அளவு ஒரு பிரச்சினைக்கு தீர்வை கண்டறிதல்தான் அவசியம். சரவல்களை விளக்கி பலருக்கும் சொல்லுவதால் முன்னேற்றம் ஏதும் கிடையாதே.

"குற்றம் பார்க்கின் சுற்றம் கிடையாது"

2.இணைய அனுபவம் எப்படி உள்ளது? வலைப்பூக்களில் நிலவி வரும் சாதி சமய, ஆத்திக நாத்திக விவாதங்களால் அவைகளைப் படிப்பவரின் மன நிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? இவைகளால் பயனுண்டா? அல்லது கால விரயமா?

இணைய அனுபவம் என்னை பொறுத்த வரையில் மசாலா கலவை போல எல்லா சுவையும் கலந்தே இருக்கிறது. ஆனால் நிறைய நல்ல நண்பர்களை அறிமுகம் செய்தது இந்த இணையம்தான். மேலும் சில எதிர்கருத்துக்களை அறிய உதவியதும் இணையம்தான் சில விசயங்களில் இப்படி கூட யோசிக்க முடியுமா என வியக்கவும் வைத்துள்ளது.

சாதி, சமய, ஆத்திக, நாத்திக விவாதங்கள் இன்று இந்த இணையத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்லவே. இது தொன்று தொட்டு பல பெயர்களில் நடைபெற்றுள்ளது. சைவ, வைணவ சண்டை, பகுத்தறிவு பற்றிய சர்ச்சை, மத சண்டை, பெண்ணுரிமை இப்படி பல தலைப்புகளில் விவாதங்கள் பழங்காலத்தில் இருந்து நடந்து கொண்டே உள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக காணோம். ‍வெறும் அரசியலுக்கும் புகழ் பெறவும் மட்டுமே உதவுகிறது என்பது என் கருத்து. என்னதான் விவாதங்கள் நடத்தினாலும் இன்னும் தெய்வ வழிபாடு செய்பவர்களும் தெய்வத்தை எதிர்பவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த விவாதம் அவர்களுக்கு உதவாது சொந்த அனுபவம், வாழ்க்கை சூழ்நிலை மட்டுமே இதை தீர்மானிக்கிறது.

இந்த விவாதங்களால் மன அமைதி பாதிப்படைகிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். சில விவாதங்களை பார்க்கும்போது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களோ என எண்ணத் தோன்றுகிறது. விவாதிப்பவர்கள் ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். நாம் கூறும் கருத்துக்கு கட்டாயம் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதை விடுத்து நாம் சொல்லும் கருத்து மட்டும் மிகச்சிறந்தது இதை விட வேறு இல்லை என எண்ணக்கூடாது.

"கற்றது கைம்மண் அளவு.. கல்லாதது உலகளவு"

3. "தமிழ் வாழவேண்டும்; அழிந்துவிடலாகாது." இது குறித்து இன்றைய இளைய தலைமுறையினரின் கருத்து என்ன? செயல்கள் எப்படி உள்ளன?

இந்த கால இளைஞர்களிடம் தமிழ் நன்றாகவே வளர்ந்து வருகிறது என்பது என் கருத்து. தினம் தோன்றும் தமிழ் வலைப்பூக்களை பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்த இளைய தலைமுறையினர் யாரும் தமிழ் வாழ்க என கோஷம் போட்டு அதை செயல் படுத்துவதில்லை அமைதியாக தங்களின் கருத்துக்களை கணிணியில் தட்டிவிட்டு இருந்து விடுகிறார்கள். வீதியில் வந்து போராட்டம் நடத்த தயாராக இல்லை. படிக்கும்வரை எப்படியோ ஆனால் படித்து வேலையில் அமர்ந்த பின்பு தங்களின் தாய்மொழி மீதான பற்று அதிகப்படுவதாகவே தோன்றுகிறது.

"காய்த்த மரமே கல்லடி படும்"

4.மங்கையரின் சுதந்திரம் பற்றித் தங்களின் கருத்துக்களை விரிவாக எழுதவும்.

மங்கையரின் சுதந்திரம் பற்றி என் கருத்து மங்கையர்க்கு தேவையான அளவு சுதந்திரம் இருக்கிறது. இதை பயன்படுத்தி முன்னேற வேண்டியது பெண்களின் வேலைதான். இந்தியஅரசின் அரசியல் அமைப்பில் இருந்து நடைமுறை வாழ்க்கை வரை பெண்ணுக்கு படிப்பு, உடை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கருத்து என அனைத்திலும் முழு சுதந்திரம் இருந்து கொண்டுதான் உள்ளது. அதை பயன்படுத்தி முன்னேற வழி பார்க்க வேண்டும் அதை விடுத்து பெண்ணுரிமை சுதந்திரம் என பேசிக்கொண்டே இருப்பது அநாவசியம். சுதந்திரம் அதிகம் உள்ள மேற்கத்திய நாடுகளில் கூட பெண் அதிபர்களோ அதிகபட்சம் பெண்கள் அரசியலில் சாதித்ததோ இல்லை ஆனால் இந்தியாவில் மட்டுமே பெண்கள் அரசியலில் கூட அதிக அளவில் சாதித்துள்ளார்கள்.
இந்த வலைப்பூவில் எடுத்துக்கொண்டால் கூட பெண் வலைபதிவர்கள் இடும் பதிவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பல ஆண் வலைபதிவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் மிக குறைந்த எணணிக்கையில் பெண்கள் இருப்பதால் அதிக அளவில் கவனிக்கப்படுகிறார்கள் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும் அதிகம். இங்கு பெண் எதிர் கொள்ளும் அதே அளவு பிரச்னைகளை ஆண்களும் எதிர் கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த கருத்துகள் அவ்வளவாக முக்கியத்துவம் பெறுவதில்லை. இதை நல்ல விதமாக உபயோகிக்க வேண்டிய கடமை பெண் பதிவர்களுக்கு உள்ளது. பெண் முயற்சி செய்தால் முன்னேற இந்த நாடு எல்லா உதவியும் செய்கிறது. ஆனால் இது பத்தாது என்று மேலும் பல சிறப்பு சலுகைகளை எதிர்பார்ப்பது அநாவசியம் என்பதே என் கருத்து.

"மாதா பிதா குரு தெய்வம் "

5.தங்களுக்குப் பிடித்த தங்களின் பதிவு, அல்லது மிகவும் பிடித்த தலைப்பில் ஒரு பதிவை இடவும்.
இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி பதிவு எழுதுனதே இல்லீங்க (பதிவு ஏதாவது போட்டாதான :)) எனக்கு பிடித்த தலைப்பில் பதிவு இனிவரும் நாட்களில் எழுதலாம் என எண்ணியுள்ளளேன். இப்போதைக்கு இந்த சுடரை ஏத்திட்டேன்.

"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்"

அடுத்தது நமது பெயரிலி(அனானி) புகழ் செந்தழல் இரவி அவர்களிடம் ஒப்படைக்கிறேன்.
அவருக்கு வைக்க ஆசைப்படும் ஆப்புகள்..

1. சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்த வளாகத்தேர்வுகள் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. இந்த போக்கின் எதிர்காலம் என்ன?

2. E-lanes வகை வேலைகள் தமிழர்கள் எந்த அளவு பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். நடைமுறையில் இந்த வகை வேலைகளின் எதிர்காலம் மற்றும் வெற்றி சாத்தியகூறுகள் என்ன?

3. நாஸ்காம் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் குடுத்துள்ள அறிக்கையில் 25% மாணவர்கள் கூட வேலைக்கு தகுதியற்றவர்கள் என கூறியுள்ளது. இது குறித்து தங்களின் சொந்த கருத்து மற்றும் சொந்த அனுபவம் என்ன?

4. இந்த கால இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்த பின்பு பொருளாதாரத்தை எதிர்காலத்திற்காக சேர்ப்பவர்கள் அதிகமா? அல்லது ஆடம்பரத்தில் மூழ்கி விடுகிறார்களா?

5. இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலையின் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்மற்ற துறையினரின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் பாதிக்கப் படுகிறது. இந்த அதீத ஊதியம் பற்றிய தங்களின் கருத்துதேவைதானா?

21 comments:

நாமக்கல் சிபி said...

அருமையாக சுடரை ஏற்றி உள்ளீர்கள். நல்ல பதில்கள்.

குறிப்பாக பெண்கள் சுதந்திரம்,முன்னேற்றம் மற்றும் தமிழ் பற்றிய நல்ல பார்வை.

ஆஹா! ஐந்து கேள்விகளிலும் அருமையாக கொலைவறியாருக்கு வைத்து விட்டீர்கள் ஆப்பு!

(ஆமா! உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி?)

Udhayakumar said...

முதல் முறையாக மங்கையரின் சுதந்திரம் பற்றி ஒரு மாற்றுக் கருத்து... பெண்ணியம் பேசுபவர்களின் கண்ணில் பட வேண்டிய விசயம்.

//நாம் கூறும் கருத்துக்கு கட்டாயம் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். //

இந்த கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை.


ரொம்ப சீரியசான பதில்கள், செந்தழல் ரவிக்கு இன்னமும் சீரியசான கேள்விகள்... இன்னமும் சிறுபிள்ளைன்னு கதையடிக்கிறீங்களே???

Osai Chella said...

அம்மினி நீங்க நம்மூருங்களா? நல்லாவே கலக்கியிருக்கீங்க! வாழ்த்துக்கள்.

Unknown said...

அனு நல்ல பதில்கள் பாராட்டுக்கள். ரவிக்கு அருமையானக் கேள்விகள் தலைவர் என்னச் சொல்லுறார்ன்னுப் பார்ப்போம்.

Anonymous said...

அய்யாவின் கேள்விகளுக்கு நல்ல பதில்கள் அளித்து தப்பித்துவிட்டீர்கள்...

எனக்கும் சரியான அளவுகளில் ஆப்புகளை தயாரித்து உள்ளீர்..( கண்டிப்பாக மொக்கை போடவே / கிண்டல் அடிக்கவோ முடியாத கேள்விகள் ஹும்)

விரைவில் ஏற்ற முயல்கிறேன். சுடர் வாய்(ஆ)ப்புக்கு நன்றி..!!!

Anonymous said...

////அம்மினி நீங்க நம்மூருங்களா? நல்லாவே கலக்கியிருக்கீங்க! வாழ்த்துக்கள். ///

செல்லா, உங்கள் சார்பா ஏற்கனவே நான் அனுவை மே மாத பிலாகர் மீட்டுக்கு கூப்பிட்ட்டுட்டேன்பா...

செந்தழல் ரவி

Butterflies said...

romba nallarukku......u spoke yr heart!
good well done anu!

மஞ்சூர் ராசா said...

ஞானவெட்டியான் அய்யாவின் சிறந்த கேள்விகளும் அதற்கான அனுவின் கச்சிதமான பதில்களும்.

நாமக்கல் சொல்வது போல
குறிப்பாக பெண்கள் சுதந்திரம்,முன்னேற்றம் மற்றும் தமிழ் பற்றிய நல்ல பார்வை.

ரவிக்கான கேள்விகளும் அருமை.

என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

Gopalan Ramasubbu said...

நல்லா எழுதியிருக்கீங்க அனு.. இனையத்தின் மூலம் தமிழ் நிஜமாகவே வளர்கிறது. மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழ்-இனையத்தில்தான் அதிக கட்டுரைகள் எழுதப்படுகின்றன.மகளிர் சுதந்திரம் என்பது படித்த பெண்களுக்குத்தான் இருகிறது என்பது என் கருத்து. படித்த, விவரம் தெரிந்த பெண்கள் தங்கள் உரிமையை தானே எடுத்துக்கனும்,மத்தவங்க கிட்ட கேட்டுட்டு இருக்கக் கூடாது. படிக்காத பாமர மக்களிடம் பெண் சுதந்திரம் பத்தி அவ்வளவு விழிப்புனர்ச்சி இல்லை என்றே நினைக்கிறேன். :)

Syam said...

அருமையான சுடர் அனு....நிறுத்தி நிதானமா ஒரு ஒரு கேள்விக்கும் உங்கள் மனதிலிருந்து பதில் சொல்லி இருக்கீங்க....

செந்தழலாருக்கு கேட்ட கேள்விகள் அதைவிட அருமை...கண்டிப்பா அவரோட பதில்கள் நிறைய பேருக்கு நல்ல விளக்கம் தரும்...

Syam said...

//தினம் தோன்றும் தமிழ் வலைப்பூக்களை பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்த இளைய தலைமுறையினர் யாரும் தமிழ் வாழ்க என கோஷம் போட்டு அதை செயல் படுத்துவதில்லை //

ரொம்ப சரி...தமிழ் தழிழ்னு கோஷம் போடுறதுனால மட்டும் தமிழ் வளராது...இந்த வலைப்பூக்கள் வந்ததுக்கு அப்புறம் "மெல்ல தமிழ் இனி சாகும்" அப்படிங்கற கோஷம் செத்துட்டதா நான் நினைக்கறேன்....

Anonymous said...

/////////////////
சில விவாதங்களை பார்க்கும்போது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களோ என எண்ணத் தோன்றுகிறது. ...... நாம் கூறும் கருத்துக்கு கட்டாயம் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
/////////////////

சாட்டை அடி!

தமிழின் எதிர்காலம்.. தற்போது இருப்பது சரி. இன்னும் 30 ஆண்டுகாலம் கழித்து, குறைந்த பட்சம் தற்போது இருக்கும் அளவில் இருந்தாலே நாம் புண்ணியம் செய்தவர்கள்தான்.
(தமிழ் படிச்சவங்களுக்கு வேலை கிடைச்சா தானாகவே மொழி வளர்ந்திடாதா என்ன.)

பாமர மக்களிடம் பெண்கள் விடுதலை பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று திரு. கோபாலன் சொன்னது உண்மைதான். ஆனால் பெண்கள் வளரக்கூடாது என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடம் இல்லை. (சொல்லப்போனா படித்த பல குடும்பங்களில் உண்டு :D ).

எங்கள் ஊரை எடுத்துக்கொண்டால், அந்தந்த குடும்பங்களுக்கு பொருளாதார விடுதலை கிடைத்தால், அந்தக் வீட்டுப் பெண்களின் படிப்புக்குப் பாதகம் நேராது. குடி மற்றும் வரதட்சணை நீங்கினால், வாழ்க்கைக்கும் அது ஒரு மைல்கல்லாக இருக்கும். குடும்பம் உயர குடும்பத்தின் ஒவ்வொரு பெண்களும் உயர்ந்தாலே போதுமே!
(பொருளாதாரம், படிப்பு போக குடும்பத்தில நீயா நானா சண்டை வந்தா அவங்க அவங்க தலையெழுத்து :))

////////////
இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி பதிவு எழுதுனதே இல்லீங்க
///////////
அட நல்லதுங்கிறேன்! அப்பத்தானே அடுத்தடுத்த பதிவுகள் நல்லதா வரும்.

அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் ஆக்கப்பூர்வமான பதில்களை எதார்த்தமாக எழுதியுள்ளீர்கள்.

நன்றி.

மனசு... said...

ம்ம்ம்ம்... உங்களுக்கு மட்டும் எழுதுறக்கு மேட்டரும் நேரமும் எப்படி கிடைக்குதோ தெரியல... நானும் ஒரு 4 மாதமா முயற்ச்சி பண்றேன்... ம்ம்ம்கூம் சத்தியமா முடியல... சரி எழுததான் முடியல படிக்கலாம்னு வந்தேன்... நீங்க என்னடான்னா இத்தனை பதிவு போட்டுட்டிங்க... வாழ்த்துக்கள் அருமையான பதிவு, அருமையான எண்ணங்கள்...


மனசு...

வெட்டிப்பயல் said...

அருமையா எழுதியிருக்கீங்க அனுசயா...

//மங்கையர்க்கு தேவையான அளவு சுதந்திரம் இருக்கிறது. இதை பயன்படுத்தி முன்னேற வேண்டியது பெண்களின் வேலைதான்.//
சூப்பர்...

//இந்த வலைப்பூவில் எடுத்துக்கொண்டால் கூட பெண் வலைபதிவர்கள் இடும் பதிவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பல ஆண் வலைபதிவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் மிக குறைந்த எணணிக்கையில் பெண்கள் இருப்பதால் அதிக அளவில் கவனிக்கப்படுகிறார்கள் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும் அதிகம். இங்கு பெண் எதிர் கொள்ளும் அதே அளவு பிரச்னைகளை ஆண்களும் எதிர் கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த கருத்துகள் அவ்வளவாக முக்கியத்துவம் பெறுவதில்லை.//

ரொம்ப தெளிவா இருக்கீங்க...

MSV Muthu said...

நல்ல பதில்கள். அதுவும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பொருத்தமான பழமொழி சொன்னதும் நன்றாக இருந்தது. முக்கியமாக நீங்கள் ரவிக்கு கேட்ட கேள்விகள் சூப்பர். அவரது பதில்களும் அருமை. அவருக்கு பொருத்தமான சூப்பர் கேள்விகள் கேட்டதற்கு thanks.

ஞானவெட்டியான் said...

அன்பு மகளே அனு,
இன்றுதான் கண்டேன் இப்பதிவை.
முத்து முத்தான இரத்தினச் சுருக்கமான விடைகள்.
வாழ்க! வளர்க!!

arun said...

hi anu, good post

1.onnu kurippa oththukka vendiya visayam intha thalaimurayiniridam Thamizh nandragave valarnthu varugirathu....(ennada ippidi sollitu aangilathule eluthirukranne yosikireengala? thamizh s/w off install pannale...)

2. indraya mangayar ethai suthandhiram endru karuthugirarkal??? araikurai adai anindhu kondu, pub matrum discothevil aduvathaiya??? ingu nan anaiththu magaliriyum kooravillai oru silarai mattume...
kandippaga indraya pengalukku niraya suthandhiram irukirathai oppukolle vendum..

culture and tradition is our identity, that we shld not lose it.. fashion enra peyaril ithai naam ilandhuviduvom endru anjuhirane.

ippadikku
arun

THOTTARAYASWAMY.A said...

எனது கவிதைத் தொகுப்பு "ஊரெல்லாம் தூரல்"
கவிதை நேசிக்கும் தமிழ் உள்ளங்களுக்காக இணையத்தில்.

படித்து உங்கள் கருத்துக்களை, பதித்துச் செல்லுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
தொட்டராயசுவாமி.அ
கோவை.

Unknown said...

அழகுப் பற்றி பதிய உங்களை ஆட்டத்துக்கு அழைக்கிறேன்.. வாங்க...வாங்க..

அனுசுயா said...

நாமக்கல் சிபி : நன்றி சிபி
//(ஆமா! உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி?)//
கஷ்டப்பட்டு சிந்திச்சு ஐந்து கேள்வி கேட்டா உங்களுக்கு கொலை வெறியா தெரியுதா? டூ பேட்

உதயகுமார் :
//பெண்ணியம் பேசுபவர்களின் கண்ணில் பட வேண்டிய விசயம்.// ஏனுங்க நான் நல்லா இருக்கறது புடிக்கலீனா சொல்லீருங்க அதுக்காக இப்டியெல்லாம் ஆப்பு வாங்கி ‍குடுக்க கூடாது.

செல்லா : ஆமாங்க நம்மூருதானுங்கோவ்
நன்றிங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

தேவ் : நன்றி

செந்தழல் ரவி : நீங்க மொக்கை போட கூடாதுன்னுதான் இல்லாத மூளைய கசக்கி பிழிஞ்சு கேள்வி கேட்டு இருக்கறேன்.

சுபா : நன்றி

மஞ்சூர் ராசா : நன்றி

கோபாலன் : படிக்காத பாமர பெண்களிடம் விழிப்புணர்ச்சி இல்லை என்று கூற முடியாது. அவர்களிடையேதான் மகளிர் குழுக்கள் போன்றவை சிறப்பாக செயல்படுகின்றன. சிறு சேமிப்பு போன்ற திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

ஷ்யாம் : நன்றி நாட்டாமை.

ஷ்யாம் : அதுவேதான் என் கருத்தும் தமிழ் இணையத்தில் நன்றாக வளர்ந்து வருகிறது.

பாண்டியன் : //தமிழ் படிச்சவங்களுக்கு வேலை கிடைச்சா தானாகவே மொழி வளர்ந்திடாதா என்ன//
நல்ல சிந்தனை :)

மனசு : எழுதறதுக்கு மேட்டர் எங்கங்க கிடைக்குது ஏதோ நம்மள நம்மி கேள்வி கேட்கறாங்க அதுக்கு முடிஞ்ச அளவு பதில் சொல்லியிருக்கேன் அவ்ளோதான். :)

வெட்டிப்பயல் : நன்றி

MSV Muthu : பாராட்டுக்கு நன்றிங்க

அய்யா : பாராட்டுக்கு நன்றிங்க அய்யா. ஏதோ என்னால் இயன்றவரை பதில் வழங்கியுள்ளேன். என் கருத்துக்களை தெரிவிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி.

அருண் : நன்றி அருண்

தேவ் : நன்றி கூடிய விரைவில் எழுதுகிறேன்.

Anonymous said...

பிரகாசமான சுடர்.

-Manic