Wednesday, January 25, 2006

குடியரசு தினவிழா

குடியரசு தினவிழா
அனைவருக்கும் குடியரசு தினவிழா நல்வாழ்த்துக்கள். பொதுவாக குடியரசு தினம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது விடுமுறை மட்டுமே. அதனையும் தாண்டி ஒரு சிலர் குடியரசை பற்றி நினைத்தால் அது அதிசயம்தான். நம் நாடு கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக குடியரசு நாடாக இருப்பதற்கு நாம் உண்மையிலேயே பெருமிதம் கொள்ள வேண்டும். வரும் காலங்களிலும் இந்த குடியாட்சி தொடர இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். நாம் எப்போது வருடப்பிறப்பு, தீபாவளி போன்று குடியரசு தினத்தையும், சுதந்திர தினத்தையும் கொண்டாட தொடங்குகிறோமோ அன்றுதான் நாம் உண்மையான குடிமக்கள் ஆகின்‍றோம். முன்‍பெல்லாம் குடியரசு தினத்தன்று பள்ளிகளுக்கு சென்று கொடியேற்றிவிட்டு வீட்டுக்கு வருவோம். அப்போது நமது தூர்தர்ஷனில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் செங்கோட்டையில் குடியரசு தலைவர் கொடியேற்றும் நிகழ்ச்சி காண்பிக்கப்படும். அதில் இறுதியாக ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளின் அணிவகுப்பும் நடைபெறும் உண்மையிலேயே பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதற்கேற்றார்போல் அலங்காரம், நடனம், இசை அமைத்துக் கொண்டு ஒரே சீராக செல்வது மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த வருடமும் குடியரசு தினத்தை ஒவ்வொருவரும் சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்.

Saturday, January 21, 2006

செய்திப் பஞ்சம்

வரவர வாரஇதழ்கள் ஏன்தான் இப்படியாகிறதோ, தெரியவில்லை. வாரஇதழ் என்றவுடன் நினைவுக்கு வருவது ஆனந்த விகடன், குமுதம் போன்ற சில புத்தகங்கள். ஆனால் அவற்றில் வரும் விசயங்களை பார்த்தால் சினிமா எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றிவிடலாம் போல் உள்ளது. இந்த வாரம் வார இதழ் வாங்கி படிக்க ஆரம்பித்தால் சரியாக முதல் 52 பக்கங்களுக்கும் முழுக்க முழுக்க சினிமா சினிமா வேறு ஏதும் இல்லை. அட தமிழ்நாட்டில் சினிமாவைத்தவிர ‍எழுதுவதற்கு வேறு விசயங்களே இல்லையா?. முன்பெல்லாம் வாரஇதழ் படிக்க போட்டியாக இருக்கும். நகைச்சுவை, சிறுகதைகள், கட்டுரைகள், ஆன்மீக பயணக்கட்டுரை கொஞ்சம் சினிமா என இருந்தது. தற்போது அட்டை படத்தில் தொடங்கி சினிமா நடிகைகளின் பேட்டி, நடிகர்களின் பேட்டி, இயக்குநர்களின் பேட்டி மற்றும் ஒளிப்பதிவாளர், ஒப்பனையாளர் என முழுக்க முழுக்க சினிமா பற்றியேதான். அது பரவாயில்லை நகைச்சுவையில்கூட நடிகைகளின் படங்கள். முன்பெல்லாம் நகைச்சுவைக்கு கார்ட்டூன் வரைந்து கொண்டிருந்தார்கள் தற்போது அதுவும் இல்லை. ஆக மொத்தத்தில் வார இதழ்களின் எழுதுவதற்கு வேறு செய்திகளே இல்லையெனும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. இதில் மட்டும் எல்லா வார இதழ்களும் போட்டி ‍போட்டுக் கொண்டு சரிக்கு சரியாக இருக்கின்றது. இந்த வார இதழில் இந்த நடிகை பேட்டி என்றால் மற்றொரு வார இதழில் வேறு நடிகை பேட்டி என சபாஷ் சரியான போட்டியாக உள்ளது. இந்த போட்டி வேறு ஏதாவது கதை, கட்டுரை விசயத்தில் இருந்தால் பரவாயில்லை. இப்படி சினிமா பற்றி ‍செய்திகளை படிக்க இந்த வார இதழை படிக்க வேண்டியதில்லையே. ஏதாவது ஒரு சினிமா பத்திரிகை வாங்கினாலே‍ போதுமே?.

Tuesday, January 17, 2006

உலக அதிசயங்களும் இந்தியாவும்

உலக அதிசயங்களும் இந்தியாவும்

உலக அதிசயங்களை கட்டுரைகள் மற்றும் கதைகளில் படிக்கும்போதும்
படங்களை பார்க்கும்போதும் மிக அதிசயமாக உள்ளது. அந்த நாட்டைப்பற்றி வியப்பும் மதிப்பும் அதிகரிக்கின்றது. ஆனால் அவற்றை நேரில் சென்று பார்க்கும்போதுதான் அதன் உண்மை நிலை என்ன என்பது விளங்குகிறது.
உதாரணத்திற்கு பைசா நகர சாய்ந்த கோபுரத்தை எடுத்துக் கொள்வோம்.




அக்கட்டிடம் ஒரு மிகப்பெரிய மாதா கோவிலின் மணிக்கூண்டு அவ்வளவுதான்.சரியான அடித்தளம் இல்லாததால் ஏற்பட்ட கோளாறால் அது சாய்ந்துவிட்டது. ஆனால் அதையும் அவர்கள் ஒரு சிறந்த கட்டிடமாக உலக அதிசயமாக கொண்டாடி விளம்பரம் செய்து பராமரித்து வருகிறார்கள். நாமும் சென்று பார்த்துவிட்டு வருகிறோம். சற்றே சிந்தித்தால் இதுபோல் எவ்வளவோ கட்டிடங்கள் நம்நாட்டில் கேட்பாரற்று பராமரிக்க ஆள் இல்லாமல் கிடக்கிறது. தமிழகத்தில் தஞ்சாவூர், தாராசுரம் கர்நாடகத்தில் பேளூர், ஹளேபேடு போன்று இன்னும் எத்தனை எத்தனையோ கோவில்களில் எண்ணிக்கையில் அடங்காத சிற்பங்களும் கட்டிடங்களும் அதன் சிறப்பை புகழை பரப்ப ஆளில்லாமல் கிடக்கிறது. ஏதோ அதைப்பற்றி தெரிந்த சிலர் சென்று பார்ப்பதோடு சரி. நம் நாட்டினரும் வெளிநாட்டிற்கு சென்று பார்ப்பதை
விரும்பும் ‍அளவு உள் நாட்டில் உள்ள கலை களை காண விரும்பம் கொள்வதில்லை.இதற்கு ஒரு முக்கிய காரணம் நம்மிடையே இன்னமும் வெளிநாட்டு பொருட்களின் மேல் உள்ள மோகம் தனியவில்லை. இனியாவது சற்று நம்நாட்டு கலைகளையும் பராமரிக்க புகழை பரப்ப நம்மால் இயன்றதை செய்வோம்.

Wednesday, January 11, 2006

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த பிளாக் ஆரம்பித்து முதல் என்ன எழுதுவது என்று யோசித்து யோசித்து ஒன்னுமே விளங்காம போச்சு அதனால் சரி பொங்கல் வாழ்த்துவோமுன்னு வாழ்த்திட்டேன்.