Thursday, April 10, 2008

கற்கை நன்றே..!!

நான் கற்ற புத்தகங்களில் முக்கியமான சிலவற்றை குறித்த பகிர்தல்.
இதை நான் நமது புதிய இளைய தலைமுறைக்கு எனது ஆலோசனையாகவும் தெரிவிக்க விரும்புகிறேன். இதில் காந்தியின் சத்திய சோதனை போன்ற நீதிநெறி மற்றும் பகவத்கீதை போன்ற மதம், அரசியல் சார்ந்த தனிநபர் விருப்பு வெறுப்புகளை பேச போவதில்லை. உலக அறிவு மற்றும் பல்வேறு வெற்றி தோல்விகளையும், ஒற்றுமை மற்றும் விரோதங்கள் குறித்து சொல்லும் நூல்கள் இவை. தவிரவும் இவைகளை பின்வரும் வரிசையில் படிப்பதால் உலக அறிவும் வளரும் என்றே அசட்டு நம்பிக்கையும் உள்ளது.

நீரினுள் எழும்பி வெடிக்கும் காற்று குமிழி போல...
- நேரு


1. நேருவின் உலகவரலாறு பாகங்கள் 1 & 2
தனது பதின்ம வயது மகளுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே என்றாலும்
பலமடங்கு வயதான நமக்கும் வியப்பான ஒரு நூலே. இது புத்தகமாக வெளி வந்த சமயத்திலேயே தமிழாக்கம் (திரு.அழகேசன் என்பது சரி என்றே எண்ணுகிறேன்) செய்யப் பட்டுவிட்டது. ஒரு தந்தை தன் குழந்தைக்கு சொல்லும் அதே பாங்குடன் உலகை குறித்த வரலாற்றை விவரிக்கிறார். பல்வேறு மொழிகள், மதங்கள், இராச்சியங்கள் என்று அனைத்தையும் கால வெள்ளத்தினுள் நீந்திவாறே விளக்குகிறார்.

அவருடைய கொள்கைகளை மறந்து படிக்க ஆரம்பித்தால் மிக அருமையான நூல் இது. எண்ணற்ற மதங்கள், மொழிகள், கொள்கை கோட்பாடுகள், இராச்சியங்கள் அனைத்தும் தோன்றி அழிந்த பாங்கினை விவரித்து வரும் போது மேலே சொல்லியுள்ள உவமையை காட்டுவார். மெய்சிலிர்க்க வைக்கும் தருணம். கிட்டதட்ட ஆங்கில அரசாங்கமும், அடிமை இந்தியாவும் என்ற வரைக்கும் இருக்கும்.

2. மதனின் - வந்தார்கள் வென்றார்கள்

கிட்டதட்ட இரு பாகங்களாக உள்ள உலக வரலாற்றின் சுருக்கி வரைதல் போன்று எளிய முறையில் சுவைபட விவரித்துள்ளார். தைமூரில் ஆரம்பித்து கிட்டதட்ட ஆங்கில ஆட்சி துவக்கம் வரை புத்தகத்தை கீழே வைக்க இயலாத அளவு சுவையுடன் கொடுத்துள்ளார். வண்ண வண்ண ஓவியங்கள் மிக அழகாக மனதை கொள்ளை கொள்ளும் வ‍கையில் இருக்கிறது.

3. கல்கியின் - சிவகாமியின் சபதம்

காலத்தே இரண்டாவதாக எழுதப்பட்டு இருந்தாலும் முதலில் படிக்க வேண்டியது. ஓவியக்கலை, சிற்பக் கலை, நடனக் கலை என்று எங்கு எந்த பக்கம் படித்தாலும் அரசியலும் , கலையும் சரியான போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். இவை தவிர அன்றைய தமிழர் தம் வாழ்வியல் முறைகள், போர் திட்டமிடல், ஒற்றாடல் என்று இன்றைய நவீன நாவல்களுக்கு சவால் விடும் வண்ணம் அமைந்திருக்கும்.

4. கல்கியின் - பார்த்தீபன் கனவு

கல்கியின் கிட்டதட்ட முதலாவது வரலாற்று நாவல். அளவில் சிறிதாக
இருப்பினும் படிக்க சுவையான எளிய கதை.

5. கல்கியின் - பொன்னியின் செல்வன் 1,2,3,4 & 5

சொல்லி தெரியவேண்டியதில்லை பொன்னியின் செல்வன் பெருமைகளை. யாவரும் படித்து இன்புறும வண்ணம் தமிழர் தம் வாழ்க்கை முறை, அது இது என எண்ணற்ற செய்தி குவியல்கள் நிலவறையினுள் உள்ள பொக்கிஷம் போல குவிக்கப் பட்டுள்ளது. உள்ளே போய் வர பயிற்ச்சி எடுத்தால் அனுபவிக்க ஏராளம், ஏராளம்...

6. நள்ளிரவில் சுதந்திரம்- வெளிநாட்டு ஆசிரியர்கள் (Larry Collins,Dominique Lapierre)

இந்திய சுதந்திர சமயத்தில் நடைபெற்ற சுவாரசியமான தகவல்கள் களஞ்சியம் என்றே சொல்லலாம். இன்றைய இந்திய டூடே புத்தகத்தின் அன்றைய முன்மாதிரியாக செய்தி திரட்டுவது மற்றும் வழங்கும் கோணங்கள் பிரமிக்க வைக்கிறது. நாம் எதிர் பாரா கோணங்கள் நமக்கு வெளிச்சமிடப் பட்டு காண்பிக்க படும் போது மிகவும் வியப்படைய வேண்டியிருக்கிறது. தமிழாக்கம் செய்ய பட்டு வெகு அருமையாக உள்ளது. தமிழாசிரியர் பெயர் அறிய இயலவில்ல‍ை.

மேற்க் கண்ட புத்தகங்களை மேற்க் கண்ட வரிசையிலேயே படிப்பது
நமக்கும், நம் வாரிசுகளுக்கும் பாரதம் மற்றும் பிற சமூகங்கள் குறித்த தேவையான அறிவை வழங்கும் என்றே எண்ணுகிறேன்.

7 comments:

தமிழ் பிரியன் said...

தமிழ் மற்றும் இந்திய வரலாற்று நூல்கள் படிக்க வேண்டியவை. கல்கியின் புத்தகங்களின் படிக்க வேண்டிய வரிசையும் அதே.....

ILA(a)இளா said...

சரிங்க மேடம்

SP.VR. SUBBIAH said...

தகவலுக்கு நன்றி சகோதரி!
நல்ல பதிவு!

மாதங்கி said...

நல்ல அறிமுகங்கள் அனுசூயா

ஹாரி said...

அனு

தமிழ்ல நல்ல புத்தகங்கள் நான் படிச்சதில்ல. இப்ப சுஜாதா பத்தின பதிவுகள்ளாம் படிச்சிட்டு ஸ்ரீரங்கத்து கதைகள், கணையாழி பக்கங்கள்னு வாங்கலாம்னு இருக்கேன். நீங்க லிஸ்ட பெரிசாக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன். நன்றி.

நீங்க சொன்னதில் Freedom at MidNight மட்டும் இங்க்லீஷ்ல படிச்சிருக்கேன்.

செல்வேந்திரன் said...

அனு நீயுமா?

Anonymous said...

Just I saw you post , it's better info. Thankx ...