Thursday, February 09, 2006

போதுமடா சாமி

கோவையில் ஏற்கனவே தனியாரால் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது திருப்பூரில் ஒரு வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு செலவு செய்யப்பட்ட பல கோடிகளில் சில கோடிகளை சிறு சிறு தொழிற்சாலைகளுக்கு கழிவு நீர் சுத்திகரிப்புசாலை அமைக்க கொடுத்திருந்தாலோ அல்லது சிறுதுளி போன்ற அமைப்புக்கு கொடுத்திருந்தாலோ திருப்பூரின் தண்ணீர் பஞ்சம் கொஞ்சமாவது தீர்ந்திருக்கும்.

அதே போல பொள்ளாச்சிக்கு அருகில் ஒரு கிராமம் உள்ளது. அந்த ஊரில் ஒரு பொதுவான அம்மன் கோவில் உள்ளது. அதற்கு அடுத்து ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தங்களுக்கு என புதிய தனி அம்மன் கோவில் கட்டினர் அதனை அடுத்து அதே மக்கள் ஒரு குறிப்பிட்ட குலத்திற்கு என தனி கோவில் கட்டிக்கொண்டு உள்ளார்கள். தற்போது அந்த ஒரு கிராமத்தில் மட்டும் 3 அம்மன் கோவில்கள் உள்ளன. அதுபோக மற்றகடவுள் கோவில்கள் தனி. ஆனால் அந்த ஊரில் ஒரே ஒரு ஆரம்ப பள்ளிதான் உள்ளது. நடுநிலைப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள சிற்றூருக்கு பேருந்தில்தான் மாணவர்கள் செல்ல வேண்டும். மேற்படிப்பு படிக்க பொள்ளாச்சிக்கோ அல்லது கோவைக்கோதான் செல்ல வேண்டும். இந்த கோவில்கள் கட்ட செலவு செய்யும் பல லட்சங்களில் சில லட்சங்களையாவது பள்ளிகள் கட்ட உதவியிருந்தால் பல மாணவர்களின் படிப்பு பாதியில் நின்றிருக்காது.

நாம் போற்றி வணங்கும் அடியார்களும் ஆழ்வார்களும் இறைவன் அருளை பெற கோவில் கட்டி வணங்கவில்லை. அவர்கள் இறைவன் அருளை பெற அவனுடைய படைப்பு (உயிரினங்கள்) களுக்கு உதவி செய்து அருளடைந்தனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வாழ்ந்து இறை அருளை பெற்றனர். ஆனால் தற்காலத்தில் தங்களுடைய புகழை பரப்பவும் தங்களின் பெருமையை உலகறிய செய்யவும் போட்டி போட்டுக் கொண்டு அதிக செலவில் கோவில்கள் கட்டி தங்கள் பெயரை நிலைநாட்டுகின்றனர். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பல கோவில்கள் நம் முன்னோர்களால் கட்டப்பட்டு தற்போது கேட்பாரற்று, முறையான பராமரிப்பு இன்றி சிதைந்து அழிந்து கொண்டுள்ளன. நாம் புதிது புதிதாக கோவில்கள் கட்டுவதைவிட இருப்பதை நல்ல முறையில் பராமரிப்பு செய்தாலே போதும். ஒரு ஊருக்கு ஒரு கோவில் என்று இருந்தது இன்று ஒரு வீதிக்கு பல கோவில் என்ற நிலையில் உள்ளது. இனியாவது சிந்தித்து செயல்படுவோம். நம்நாட்டின் அத்தியாவசிய தேவைகள் நிறைவடைந்தபின் இம்மாதிரி செலவுகள் செய்யலாமே?

8 comments:

Pavals said...

//பொள்ளாச்சிக்கு அருகில் ஒரு கிராமம் உள்ளது.//

எந்த ஊருங்க..? கேள்வி படாத விஷயமா சொல்றீங்க..

அனுசுயா said...

குள்ளக்கா பாளையம் (குல்லக்கா பாளையம்) என்ற கிராமம்

சிங். செயகுமார். said...

ஏனுங்க மகாலிங்கம் ஐயாதான் ஊருக்கு நல்லா பண்ணிகிட்டு இருக்காப்டில்ல .இதையெல்லாம் கவனிக்கலையா? அதுக்கோசரம் ஆத்திர படாதீங்க.ஒருசில சென்மங்களை திருத்தவே முடியாது!

அனுசுயா said...

அவர் நல்லது செய்யரார் இல்லைனு சொல்லல ஆனா இவ்ளோ பெரிய ஊர்ல ஒருத்தர் மட்டும் நல்லது செஞ்சா பத்தாதுங்க.

rnatesan said...

நீங்கதான் வேந்தனை கோவையில் பார்க்காமல் விட்டவரா!!ரொம்பத் தப்புங்க!!
ஆனால் என்னாலும் பாக்க முடியவில்லைங்க!!
இவங்க கோயிலை கட்டறது ஒரு புறம் இருக்கட்டும்!!டொனேஷனுக்கு எல்லாரும் வந்துடறாங்களே!!

Suka said...

உண்மை. கோவில்கள் ஒரு காலத்தில் பலவேறு காரணங்களுக்காகக் கட்டப்பட்டன. அதன் காரணங்களை உணராமல் 'புண்ணியங்களுக்காக' கோவில்களைக் கட்டுவது உண்மையில் மிகமிக ஆபத்தானது.

'அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்று கூறியது இவர்கள் காதில் விழவில்லையே :(

சுகா

அனுசுயா said...

உண்மைதான் திரு.சுகா அவர்களே. பழங்காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் சிதிலமடைந்து கிடக்க நாம் புதுக் கோவில்கள் கட்ட செலவழிப்பது வீண்.

Gopalan Ramasubbu said...

//*தற்போது திருப்பூரில் ஒரு வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு செலவு செய்யப்பட்ட பல கோடிகளில் சில கோடிகளை சிறு சிறு தொழிற்சாலைகளுக்கு கழிவு நீர் சுத்திகரிப்புசாலை அமைக்க கொடுத்திருந்தாலோ அல்லது சிறுதுளி போன்ற அமைப்புக்கு கொடுத்திருந்தாலோ திருப்பூரின் தண்ணீர் பஞ்சம் கொஞ்சமாவது தீர்ந்திருக்கும்*//

Anu,

Money they(Garments Company owners)spend on this temple projects are black money. just another way to convert blck in to white.we can't expect any Samuga sevai from them.