Tuesday, September 23, 2008

ஆப்பிரிக்காவில் அனு

வணக்கமுங்க இந்த பதிவு ஒரு தொடர்பதிவு இதுல நான் இருக்கற நாடு அதாவது தான்சானியா அதோட சுத்துபட்டு நாடுகள், அவங்க வரலாறு,வாழ்க்கை முறை, மக்களோட அன்றாட வேலை எல்லாத்தையும் பத்தி முடிஞ்ச வரைக்கும் தெளிவா எனக்கு தெரிஞ்சத எழுத போறேன்.படிச்சுட்டு நல்லா இருந்தா கமெண்ட் போடுங்க இல்லைனாலும் கமெண்ட் போடுங்க மாத்திக்க முயற்சி பண்றேன். பொதுவா ஆப்பிரிக்கானாலே இன்னும் எல்லாரும் இருண்ட கண்டம் அப்படினுதான் நினைக்கறாங்க. இன்னும் இங்க மனிச கறி சாப்பிடறஆதிவாசிகள் குடியிருக்காங்க. இங்க போனா எதுவுமே கிடைக்காது அப்படி இப்படினு பல பயங்கர பயமுறுத்தல்கள் இருந்துகிட்டுதான் இருக்குஅது உண்மைனு நானும் கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நம்பிட்டுதான் இருந்தேன். இங்க வந்த பிறகுதான் சில உண்மைகள் புரியும்.சரி சரி கதைக்கு வரேன் வழக்கம் போல எங்கயோ சுத்திட்டு இருக்கேன்.


ஆப்பிரிக்கா அப்படினாலே மிகப் பெரிய கண்டம்னு எல்லாறுக்கும் தெரியும். சரி ஆனா இதுல மிக்பெரிய நிலப்பகுதி சகாரா பாலைவனம். அதாவது வடக்கு பகுதி, அதே வடகிழக்கு பகுதியில குறிப்பா எகிப்து, சூடான் இங்கயெல்லாம் நைல் நதி பாஞ்சு மிக மிக செழிப்பா இருக்குது.ஆப்பிரிக்காவ மொத்தமா ரெண்டு பாகமா பிரிக்கலாம் அதாவது பாலைவனத்துக்கு மேல வடக்கு பகுதி, பாலைவனத்துக்கு கீழ தெற்கு பகுதினு. இதுல பாலைவனத்துக்கு மேல உள்ள நாடுகள் நைல் நதி பாயறதாலயும், ஐரோப்பாவுக்கு ரொம்ப பக்கத்தில இருக்கறதாலயும் நல்ல முன்னேற்றத்தோட இருக்குது.அதே போல கிழக்கு பகுதியில கடலோரம் இருக்குற நாடுகளும் தென் ஆப்பிரிக்காவும் நல்ல நீர் வழத்தோடயும் ஆசியா அரேபிய நாடுகள்கூட தொடர்பு கொண்டு நல்லா வழமாதான் இருக்காங்க. இது எல்லாத்துலயும் பாவப்பட்டவங்க மேற்கு ஆப்பிரிக்காதான். ஏன்னா இவங்க அடுத்த கண்டத்தோட தொடர்பு கொள்ளனும்னா ஒன்னு மேற்கு பக்கம் அட்லாண்டிக் கடல்ல பல தூரம் கடந்து தென் அமெரிக்காவுக்கு வரனும் இல்லைனா கிழக்க பெரிய ஆப்பிரிக்க நிலப்பரப்ப கடந்து அரேபியா அல்லது ஆசியாவ அடையனும். ரெண்டு பக்கமுமே ரொம்ப தூரம்.அதனால முன்னேற்றம் கொஞ்சம் கம்மிதான் அங்கெல்லாம்.
இப்ப இந்த கண்டத்துல கிழக்கு கடலோரம் இருக்கற தான்சானியாங்கற நாட்டுலதான் நான் இருக்கேன். இந்த நாட்ட பத்திதான் நான் எழுத போறேன்.
அடுத்த பதிவுல சந்திக்கறேனுங்க நன்றி வணக்கம் இப்போதைக்கு :)

Wednesday, September 17, 2008

ஒரு சின்ன சந்தேகமுங்க

வணக்கம்,
இந்த பதிவுல ஒன்னுமே இல்லீங்க வெறும் டெஸ்ட் பதிவுதான் பல நாள் நான் என் வலைப்பக்கம் வரவே இல்ல அதான் ஒரு சந்தேகம் வலைப்பூ உயிரோட இருக்கா இல்லையானு ஒரு சின்ன சந்தேகம் அதான் இந்த பதிவு. சரி வந்தது வந்துட்டீங்க இந்த படத்தையும் பார்த்துட்டு போங்க.


இது தான்சானியாவுக்கு பக்கத்துல இருக்கற சான்சிபார்ங்கற தீவுல எடுத்தது. முடிஞ்சா இனிமேலாவது ஏதாவது எழுத முயற்சி செய்ய‍றேன். (ஆமா ஒவ்வொரு தடவையும் இததான சொல்லறேனு நினைக்கறீங்க :)

Saturday, April 12, 2008

மக்களாட்சி

பல நாளா நானும் யோசிச்சது உண்டு. இந்த ஜனநாயகம் அரசியல் அமைப்பு சட்டம், திட்டங்கள், கொள்கை, அறிக்கை இப்டியெல்லாம் எப்பபாரு மெனக்கெட்டு பேசிக்கறாங்க. இதுக்காக எல்லா அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டபடி திட்டி திண்டாடி என்ன என்னமோ பண்ணி நிறைவேத்துறாங்களே. இதுக்கெல்லாம் ஏன் இப்டி கஷ்டப்படறாங்க. எதுக்கு வீணா வாதம் பிரதிவாதம் பண்ணி நேரத்தையும் பணத்தையும் வீணாக்குறாங்க இப்‍டியெல்லாம் யோசிச்சதுண்டு. ஏன்னா பள்ளிகூடத்துல இருந்து பாடங்கள பெறும்பாலும் இதை சுத்தியேதான் இருக்கும். ஆனா எந்த மாணவனும் அதை படிச்சு பயன் அடைஞ்சதா தெரியல இதுக்கு காரணம் நம்ம கல்வி சொல்லி தர முறை மாற வேண்டும் அல்லது விசயத்தை கொஞ்சம் சுருக்கி படங்கள் மற்றும் நடப்பு நிலவரத்தோட கம்பேர் பண்ணி சொல்லி தரனும். சரி விடுங்க அது கல்வி முறை மாற்றத்தில வருது. இப்ப தலைப்புக்கு வர்ரேன்.

திட்டம்னா முதன் முதல்ல இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்போ மக்கள் தொகை கிட்டதட்ட வெறும் 50கோடிதான் ஆனா பஞ்சம் வறுமை எல்லாம் நல்லா அமோகமா இருந்துச்சு இதை போக்க என்ன பண்ணலாம்னு சில நல்ல அரசியல்வாதிகள் ஐந்தாண்டு திட்டம்னு ஒன்னு கொண்டு வந்து எங்க எங்க முடியுதோ அங்க எல்லாம் அணைகளை கட்டி வாய்க்கால் வெட்டி நீர் பாசனத்தை பெறுக்கி உணவு உற்பத்திய பெறுக்கி இப்டி என்ன என்னவோ செஞ்சு உணவு பற்றாக்குறையில்லாம வறுமை அண்டாம இன்னிய மக்கள் தொகையிலயும் காலந்தள்ளற அளவு முன்னேற்றம் பண்ணியிருக்காங்க.

அதுக்கு பிறகு உள் கட்டுமானம் அதாங்க (Infra structure) போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு. இத பத்தி சொல்லவே வேண்டாம் யாராவது தப்பி தவறி மொபைல் போன் இல்லைனு சொன்னா ஒன்னு அவரு வெளிநாட்டுகாரரா இருக்கும் இல்லைனா பேச முடியாத குழந்தையா இருக்கும் அந்த அளவு பெறுத்துடுச்சு. போக்குவரத்தும் ஒன்னும் குறைஞ்சிடல கிட்டதட்ட எல்லா கிராமங்களும் போக்குவரத்து வசதில தன்னிறைவு பெற்றுதான் இருக்கு.

அது போக சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு இப்டி சொல்லிகிட்டே போகலாம். கண்டிப்பா 100 சதவீத தன்னிறைவு இல்லை. ஆனா கிட்டதட்ட முழு அளவு இருக்குது. சரி எதுக்கு இப்போ இந்த விளம்பரம்னு கேட்கறீங்களா? ஒன்னும் இல்லீங்க திட்டம்னு ஒன்னு போட்டா அதை நிறைவேத்தி செயல் படுத்த கொஞ்ச காலம் ஆகும். ஏன்னா எத்தனையோ அரசு அலுவலகங்களை தாண்டி மக்களை வந்தடையவே பல காலம் ஆகும். அது வரைக்கும் அரசாங்கம்னு ஒன்னு நிலையா இருந்தாதான் அந்த திட்டம் கடைசி குடி மகனுக்கும் வந்து சேர்ந்து கொஞ்சமாச்சும் ஆமை வேகத்திலயாவது முன்னேற முடியும், அதை விட்டுட்டு இந்த ஜனநாயம் எல்லாம் சுத்த தெண்டம். கம்முனு சர்வாதிகாரம்தான் நல்லதுஅல்லது வேற ஆட்சி முறைதான் நல்லதுனு இள ரத்தங்கள்லாம் கர்ஜணை பண்றாங்க ஆனா ஒரு விசயம் தெளிவா இருக்கனும் என்ன ஆட்சி நடந்தாலும் ஜனநாயகத்துலதான் பலன் ஆமை வேகத்துலயாவது நிஜமா கஷ்டப்படுற மக்களுக்கு போய் சேரும் அதை விட்டுட்டு குதிச்சா அது முக்கிய நகரங்கள்ள மட்டும்தான் பலன் அடைஞ்சு முன்னேறும். ஆனா சத்தம் இல்லாத கிராமங்கள் முன்னேறாது. அதனால மக்களே முடிஞ்ச வரைக்கும் ஜனநாயகத்தை பாதுகாக்க நம்மளால முடிஞ்ச கடமைய செய்யனும் இல்லீனா அடுத்த தலைமுறைக்கு ‍ரொம்ப சிரமமா போயிடும்.

எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் இப்படி பாராட்டவோ அல்லது திட்டவோ அல்லது மொக்கை போடவோ அனுமதிக்கும் மக்களாட்சிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய ஒரு மொக்கை கட்டுரை சமர்ப்பணம்.

வாழ்க மக்களாட்சி..!!

Thursday, April 10, 2008

கற்கை நன்றே..!!

நான் கற்ற புத்தகங்களில் முக்கியமான சிலவற்றை குறித்த பகிர்தல்.
இதை நான் நமது புதிய இளைய தலைமுறைக்கு எனது ஆலோசனையாகவும் தெரிவிக்க விரும்புகிறேன். இதில் காந்தியின் சத்திய சோதனை போன்ற நீதிநெறி மற்றும் பகவத்கீதை போன்ற மதம், அரசியல் சார்ந்த தனிநபர் விருப்பு வெறுப்புகளை பேச போவதில்லை. உலக அறிவு மற்றும் பல்வேறு வெற்றி தோல்விகளையும், ஒற்றுமை மற்றும் விரோதங்கள் குறித்து சொல்லும் நூல்கள் இவை. தவிரவும் இவைகளை பின்வரும் வரிசையில் படிப்பதால் உலக அறிவும் வளரும் என்றே அசட்டு நம்பிக்கையும் உள்ளது.

நீரினுள் எழும்பி வெடிக்கும் காற்று குமிழி போல...
- நேரு


1. நேருவின் உலகவரலாறு பாகங்கள் 1 & 2
தனது பதின்ம வயது மகளுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே என்றாலும்
பலமடங்கு வயதான நமக்கும் வியப்பான ஒரு நூலே. இது புத்தகமாக வெளி வந்த சமயத்திலேயே தமிழாக்கம் (திரு.அழகேசன் என்பது சரி என்றே எண்ணுகிறேன்) செய்யப் பட்டுவிட்டது. ஒரு தந்தை தன் குழந்தைக்கு சொல்லும் அதே பாங்குடன் உலகை குறித்த வரலாற்றை விவரிக்கிறார். பல்வேறு மொழிகள், மதங்கள், இராச்சியங்கள் என்று அனைத்தையும் கால வெள்ளத்தினுள் நீந்திவாறே விளக்குகிறார்.

அவருடைய கொள்கைகளை மறந்து படிக்க ஆரம்பித்தால் மிக அருமையான நூல் இது. எண்ணற்ற மதங்கள், மொழிகள், கொள்கை கோட்பாடுகள், இராச்சியங்கள் அனைத்தும் தோன்றி அழிந்த பாங்கினை விவரித்து வரும் போது மேலே சொல்லியுள்ள உவமையை காட்டுவார். மெய்சிலிர்க்க வைக்கும் தருணம். கிட்டதட்ட ஆங்கில அரசாங்கமும், அடிமை இந்தியாவும் என்ற வரைக்கும் இருக்கும்.

2. மதனின் - வந்தார்கள் வென்றார்கள்

கிட்டதட்ட இரு பாகங்களாக உள்ள உலக வரலாற்றின் சுருக்கி வரைதல் போன்று எளிய முறையில் சுவைபட விவரித்துள்ளார். தைமூரில் ஆரம்பித்து கிட்டதட்ட ஆங்கில ஆட்சி துவக்கம் வரை புத்தகத்தை கீழே வைக்க இயலாத அளவு சுவையுடன் கொடுத்துள்ளார். வண்ண வண்ண ஓவியங்கள் மிக அழகாக மனதை கொள்ளை கொள்ளும் வ‍கையில் இருக்கிறது.

3. கல்கியின் - சிவகாமியின் சபதம்

காலத்தே இரண்டாவதாக எழுதப்பட்டு இருந்தாலும் முதலில் படிக்க வேண்டியது. ஓவியக்கலை, சிற்பக் கலை, நடனக் கலை என்று எங்கு எந்த பக்கம் படித்தாலும் அரசியலும் , கலையும் சரியான போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். இவை தவிர அன்றைய தமிழர் தம் வாழ்வியல் முறைகள், போர் திட்டமிடல், ஒற்றாடல் என்று இன்றைய நவீன நாவல்களுக்கு சவால் விடும் வண்ணம் அமைந்திருக்கும்.

4. கல்கியின் - பார்த்தீபன் கனவு

கல்கியின் கிட்டதட்ட முதலாவது வரலாற்று நாவல். அளவில் சிறிதாக
இருப்பினும் படிக்க சுவையான எளிய கதை.

5. கல்கியின் - பொன்னியின் செல்வன் 1,2,3,4 & 5

சொல்லி தெரியவேண்டியதில்லை பொன்னியின் செல்வன் பெருமைகளை. யாவரும் படித்து இன்புறும வண்ணம் தமிழர் தம் வாழ்க்கை முறை, அது இது என எண்ணற்ற செய்தி குவியல்கள் நிலவறையினுள் உள்ள பொக்கிஷம் போல குவிக்கப் பட்டுள்ளது. உள்ளே போய் வர பயிற்ச்சி எடுத்தால் அனுபவிக்க ஏராளம், ஏராளம்...

6. நள்ளிரவில் சுதந்திரம்- வெளிநாட்டு ஆசிரியர்கள் (Larry Collins,Dominique Lapierre)

இந்திய சுதந்திர சமயத்தில் நடைபெற்ற சுவாரசியமான தகவல்கள் களஞ்சியம் என்றே சொல்லலாம். இன்றைய இந்திய டூடே புத்தகத்தின் அன்றைய முன்மாதிரியாக செய்தி திரட்டுவது மற்றும் வழங்கும் கோணங்கள் பிரமிக்க வைக்கிறது. நாம் எதிர் பாரா கோணங்கள் நமக்கு வெளிச்சமிடப் பட்டு காண்பிக்க படும் போது மிகவும் வியப்படைய வேண்டியிருக்கிறது. தமிழாக்கம் செய்ய பட்டு வெகு அருமையாக உள்ளது. தமிழாசிரியர் பெயர் அறிய இயலவில்ல‍ை.

மேற்க் கண்ட புத்தகங்களை மேற்க் கண்ட வரிசையிலேயே படிப்பது
நமக்கும், நம் வாரிசுகளுக்கும் பாரதம் மற்றும் பிற சமூகங்கள் குறித்த தேவையான அறிவை வழங்கும் என்றே எண்ணுகிறேன்.

Tuesday, April 08, 2008

ஊழல்

இந்தியர்கள் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஊழல் வழக்கு உண்டென்றால் அது போபர்ஸ் பீரங்கி ஊழலதான்..இது நடந்த போது(1987) இப்போது இருக்கும் இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் பிறக்கவே இல்லை..இந்த வழக்கினால் காங்கிரஸ் கட்சி 1989ல் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது..ஆனால் அந்த ஊழல் வழக்கு மட்டும் இன்னும் நடந்துட்டு இருக்கு .கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் எதுவும் முடிவுக்கு வந்தபாடில்லை..போபர்ஸ் போல நிறைய ஊழல் வழக்குகள் நம் அன்றாட வாழ்க்கையில் வந்து போயிருக்கின்றன. இதுபோல பரபரப்பாகப் பேசப்பட்டு நம்மால் மறக்கப்பட்ட ஊழல்கள் குறித்தும், அந்த ஊழல்கள் சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தண்டனை பெற்றவர்கள் குறித்தும் இந்தப்பதிவில் சில விசயங்கள் எழுத எண்ணம்.


1. போபர்ஸ் ஊழல்- 64 கோடி


வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி-22-01-1990
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- 22-10-1999

தண்டனை பெற்றவர்கள்--- தேடுராங்க,தேடுராங்க....தேடிட்டே இருக்காங்க.
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


2.HDW Submarine- 32.55 கோடி



வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி-05-03-1990
தண்டனை பெற்றவர்கள்--- தேடித்தேடி சலிச்சுபோய் ஒன்னும் பண்ண முடியாம சி.பி.ஐ வழக்கை மூடிச்சுக்கறோம் அனுமதி கொடுங்கனு நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள்.

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


3. பங்குச்சந்தை ஊழல்- 4100 கோடி



வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி - 72 வழக்கு.(1992 - 1997 வரை)
குற்றம் சாட்டப்பட்டவர்கள்--- 4 பேர்(ஹர்சத் மேத்தா உட்பட)

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


4. ஏர்பஸ்(Airbus) ஊழல்- 120கோடி



வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி- 23-03-1990
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- இன்னும் தாக்கல் செய்யப்படவில்லைதண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


5.இந்தியன் வங்கி ஊழல்- 762.92 கோடி


வழக்குப் பதிவு- 45 (1992ல் இருந்து)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 27 நபர்கள் மீது

தண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


6.ஹவுஸிங் ஊழல்- 65 கோடி


வழக்குப் பதிவு- 11/03/1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -தண்டனை பெற்றவர்கள்-- நான்கு இளநிலை ஊழியர்கள் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


7.கால்நடைத் தீவன ஊழல்- 950


கோடிவழக்குப் பதிவு- மார்ச் 1995லிருந்து (64 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -63

தண்டனை பெற்றவர்கள்-- ஒரே வழக்கில் மூன்று அதிகாரிகள் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


8.பெட்ரோல் பங்க் ஊழல்- 950கோடி


வழக்குப் பதிவு- நவம்பர் 1996 -1997 (15 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


9.யூரியா ஊழல்- 133கோடி



வழக்குப் பதிவு- 28/05/1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 26/12/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


10.சி.ஆர்.பி(CRB) ஊழல்- 1031கோடி


வழக்குப் பதிவு- 20/05/1997

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 02/09/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


11.டெலிகாம் ஊழல்- 1200கோடி


வழக்குப் பதிவு- ஆகஸ்ட் 1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 4

தண்டனை பெற்றவர்கள்-- ஒருவர் மட்டும்

கைப்பற்றப் பட்ட பணம்- 5.36 கோடி


12.யுடிஐ(UTI) ஊழல்- 9500கோடி



வழக்குப் பதிவு- ஜூலை 2001(1 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 2004 வரை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


13.கே.பி ஊழல்(KAY PEE)- 3128கோடி


வழக்குப் பதிவு- மார்ச்&மே 2001(மூன்று வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இரண்டு
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


14.வீடு விற்பனை (Home Trade) ஊழல்- 1200கோடி



வழக்குப் பதிவு- 10/05/2002

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


இதெல்லாம் சும்மா சில கூகிள் தேடல் மூலமும், சில கட்டுரைகள் உதவியுடனும் கிடைத்த தகவல்கள்..சரி, என்னோட ஒரே ஒரு கேள்வி என்ன என்றால் இந்திய மக்களாகிய நாம் ஊழல் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றே நினைக்கிறேன்?...அதை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி எதற்கு நம் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணாக்கவேண்டும்?

Monday, April 07, 2008

மணற்கோவில் - கைலாச நாதர் கோவில்

பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் அமைந்துள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று தென்திசைக் கைலாயம் எனும் கைலாசநாதர் கோயில் ஆகும். இந்த ஆலயம் கட்டிட கலையின் முக்கியமான ஒரு வகையாகும். கல்வெட்டு இக்கோயிலை "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" ன்றழைக்கிறது.மணற்சிலைகள் கண்ணை கவரும் விதத்தில் காலத்தே சிறிது சிதைவுற்று அழகுற விளங்குகின்றன.

(அனைத்து படங்களையும் சொடுக்கினால் முழுமையான பெரிய அளவிலான ஒளிப்படத்தை காணலாம்.)


ஒளிபடம் (1) கோவிலின் முழு உருவத்தை காட்டுகிறது. கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுபாட்டில் உள்ளதால் சுற்றிலும் அழகிய புல்வெளி பராமரிக்க பட்டுவருகிறது.

ஒளிபடம் (2) கோவிலின் முன்நுழைவாயில் அருகே உள்ள கோபுரமாகும்.
இதன் இருபுறமும் உள்ளே நுழைய வழிகள் உள்ளன. பொதுவாக மற்ற கோவில்களில் கோபுரத்தின் வழியே நுழைவதாக இருக்கும்.







ஒளிபடங்கள் (3,4) உள்சுற்றுபுற பிரகாரங்கள் ஆகும். இவைகள் முழுக்க முழுக்க சிற்பங்கள் நிறைந்துள்ளன. மணற் சிற்பங்கள் (சுதை) என்ற வகையில் அமைந்துள்ளன.



ஒளிபடம் (5) ஒரு சிதைந்த சிற்பத்தைக் காட்டுகிறது. மற்ற அங்கங்கள் அனைத்தும் சரியே பெற்று தங்கள் முகத்தை மட்டும் காலதேவனின் இரக்கமற்ற அலட்சியத்தால் இழந்து விட்ட இந்த நடன ஜோடியினரை எண்ணினால் மனம் பதைக்கிறது.





ஒளிபடம் (6) நடனத்தின் அழகை துல்லியமாக காட்ட முயன்றுள்ள சிற்பியின் திறனை கண்டு நாம் வியக்காமல் இருக்க இயலாது அல்லவா..? எத்தனை எத்தனை கற்பனையை நம் கண் முன் கொண்டு நிறுத்தியுள்ளனர் சிற்பி...



ஒளிபடம் (7) அன்றிலிருந்து இன்று வரை நம் பாரதம் கலாச்சாரத்தில் பிண்ணி பிணைந்தவை என்பதை உணர்த்தும் சிற்பம். இன்று பாரதத்தின் தேசிய சின்னமாக உள்ள நான்கு சிங்கங்களின் முன்மாதிரியாக உள்ள சிற்பம்.




ஒளிபடம் (8) இங்கு எதைச் சொல்ல எதை விட..? ஒரே இடத்தில் சிங்கங்கள், யானைகள், ஆடல் மகளீர், வதம் செய்யும் காட்சி, மற்றும் பிற உப குள்ளர்கள் போன்றவைகளை காட்டி தன் முழு திறனை வெளிகாட்டியுள்ளார் சிற்பி.

ஒளிபடம் (9) கோவிலின் சுற்று சுவரில் உள்ள காவல் சிற்பங்கள். எண்ணற்ற சிற்பங்கள் வகைவகையாய் அமைந்துள்ளன. விலங்குகள் மீதமர்ந்துள்ள காவற் வீரர்கள் என மிகவும் தத்துரூபமாய் அமைக்கபட்டு நம்மை வியக்க வைக்கிறது.




குறிப்பு : இந்த தலமானது தற்கால புகழ்பெற்ற காமட்சி அம்மன் கோவில் போன்றவைகளிலிருந்து சற்றே விலகியுள்ளது. நகர மையத்திலிருந்து 4கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் செல்லாத காரணத்தால் அதிக கடைகள் மற்றும் உணவுவிடுதிகள் அருகில் இல்லாத குறையுண்டு.

Wednesday, February 27, 2008

சிற்சில கணங்களில்...

சில எதிர்பார்ப்புகள் முடக்கப்படுகின்றன
சில எதிர்பார்ப்புகள் தேவையற்று போகின்றன
சில எதிர்பார்ப்புகள் தேய்ந்து மறைந்துவிடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் கேள்வி குறியாகின்றன
சில எதிர்பார்ப்புகள் நடந்தும் விடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் தோற்கின்றது - ஆனாலும்
பல எதிர்பார்ப்புகள் தினம் தோன்றுகின்றன
தினம் தோன்றி மறையும் விண்மீன்களை போல.


இதை கவிதைனும் எடுத்துக்களாம் மொக்கைனும் எடுத்துக்கலாம். ஆனா ஏனோ எனக்கு நம்ம ராசா எழுதுன இந்த பதி ஞாபகம் வருது.

Monday, January 28, 2008

பிரிவோம் சந்திப்போம் - என் பார்வையில்

போன வாரம் படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணவுடனே. பில்லா பீமா எல்லாம் அடிதடியா இருக்கும் இந்த படம் கொஞ்சம் குடும்ப பாங்கா இருக்கும்னு போனேன். அது மட்டும் இல்ல விகடன்ல வேற இந்த படத்துக்காக காரைக்குடில போட்ட செட்டு. அங்க அவங்க நடத்துன கல்யாணம் எல்லாம் விலாவாரியா எழுதி கொஞ்சம் எதிர் பார்ப்ப ஏத்தி விட்டிருந்தாங்க.
படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் வரைக்கும் பொண்ணு பார்க்க போறது. கல்யாணம் இப்டியே போயிடுச்சு. நான் நினைச்சேன். இதென்ன கொடுமையிது
ஒரு கல்யாணத்த காட்டறதுக்கு ஒரு படமானு நினைச்சேன். அப்புறம் இடை‍வேளைக்கு பிறகு கொஞ்சம் அவங்க தனியா போனப்புறம் தினமும் சாப்பிடறது சமைக்கிறது இப்டியே இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு எங்க அண்ணாவேற இததான தினமும் வீட்டுல பார்க்கறோம் இதுக்கு போயி செலவு பண்ணி இங்க வந்து பார்க்கணுமான வேற டயலாக்கு.
ஆனா படம் முக்கால்வாசி போன பிறகுதான் தெரிய வருது எடுத்துகிட்ட
நோக்கம். ஆனா அதை புரிய வைக்கறதுகாக கொஞ்சம் இழுத்துட்டே போயிட்டாரு கதைய. ஆனா வேற வழியில்ல இந்த விசயத்தை இந்த மாதிரி கொஞ்சம் இழுத்து சொன்னாதான் தெளிவா புரியும். கண்டிப்பா இந்த படத்தை
தொலைகாட்சில ரிமோட்டோட பார்த்தம்னா ஒன்னுமே இல்லனு சொல்லிட்டு
போயிடுவோம். திரையரங்குல உக்காந்து வேற வழியே இல்லனு பார்த்தாதான் இந்த படத்‍தோட விசயம் விளங்கம். தனிமை கொடுமைங்கறதுதான் எடுத்துகிட்ட விசயம். அதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு எடுத்திருக்காரு படத்தை.

பாராட்ட வேண்டியது :
1. இயல்பான கதை அமைப்பு, நடிப்பு, காஸ்ட்யூம்.
(நான் நினைக்கிறேன் எல்லா நடிகர்களையும் அவங்க அவங்க வீட்லயிருந்து கிளம்பி வர சொல்லி அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ல அப்டியே படம் எடுத்திருப்பாரு போல இருக்கு :) )

2. எடுத்துகிட்ட விசயத்துல கொஞ்சமும் மாறாம அப்டியே கடைசி வரைக்கும் அப்டியே கொண்டு போனது.

3. எல்லாருமே நல்லவங்கனு காட்டுனது. சண்டை காட்சி இல்லாதது. அப்புறம் முக்கியமா ஒரு எடத்துலகூட துப்பாக்கியோ அல்லது அரிவாளோ காட்டாம படம் எடுத்ததுக்கு நன்றி.

குறைகள் :
1. முக்கியமான விசயம் கதைய ரொம்ப ஸ்லோவா நகர்த்தியிருக்கிறது. (ரொம்ப கஷ்டம் அடங்கி 2.30 மணி நேரம் உட்கார்ந்து பார்க்கறது. அதுலயும் ரிமோட் இல்லாம ரொம்ப கஷ்டமப்பா )

Sunday, January 20, 2008

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

வணக்கம் மக்களே மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு போடலாம்னு வந்திருக்கேன். தற்போதைய நிலைமையில் எனக்கு பதிவு போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. சரி இருந்தாலும் இது அவசியம்னு நினைச்சதால எழுதறேன்.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஒரு கேள்வி அடிக்கடி பதிவுலக நண்பர்கள் கேட்டுக்கிட்டே இருக்காங்க. அது என்னா கேள்வினா

பெண் பதிவர்கள் ஏன் தங்களுடைய புகைப்படத்தை பதிவுகளில் அல்லது ப்ரொபைலில் போடுவதில்லை?

இது தான் கேள்வி இது பல தடவை நேர்லயும் சிலரால் சாட்டிங்கிலும் கேட்கப்பட்டு விட்டது. நானும் என்னவோ பதில் சொல்லிட்டேன். இருந்தாலும் மத்தவங்களுக்கும் இது ஒரு பயனுள்ளதா (ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவைனு சொல்றது காதுல விழுது :) ) இருக்கும்னு இங்க எழுதறேன்.

1. பதிவு எழுதவர்ரவங்க அவங்களோட கருத்துகளை அடுத்தவங்ககிட்ட பகிர்ந்துகனும்னுதான் எழுத வராங்க. இதுல படத்த பார்த்து ஒன்னும் ஆக போறது இல்ல.

2. அப்ப‍டியே படம் போட்டு பேர் வாங்கனும்னு நினைச்சா அதுக்கு மாடலிங், நடிப்புனு நிறைய மத்த துறைகள் இருக்குது. இங்க பதிவு எழுதனும்னு அவசியம் இல்ல.

3. அப்புறம் சிலர் ‍கேட்கறாங்க முகமிலிகூட எப்டி பேச்சுவார்த்தை வெச்சுக்கிறது. நட்பு எப்படி சாத்தியம்னு கேட்கறாங்க. இதுக்கு என் பதில் ஏன் குறிப்பா பெண்களை மட்டுமே கேட்கறீங்க இன்னும் பல ஆண் பதிவர்களும்தான் முகமிலியா இருக்காங்க. அதுக்காக உங்க நட்புல ஏதாவது தடை ஏற்பட்டு இருக்குதா?

4. இன்னும் சிலர் இப்டி தங்கள் புகைப்படத்தையே வெளியிடாதவங்க எப்டி சமூகத்த பத்தி எழுத முடியும்னு கேட்கறாங்க. ஏனுங்க பதிவு எழுதறதே அவங்கவங்க இஷ்டத்துக்கு அவங்க கருத்துகளை தெரிவிக்கதானே தவிர சமூகத்தை சீர் திருத்தறதுக்காக இல்ல. அப்டியே இருந்தாலும் சமூக சிந்தனைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு புரியல.

5. இதெல்லாத்தையும் விட முக்கியமா நம்ம படத்தை பார்த்து அடுத்தவங்க பயப்பட கூடாதுங்கற ஒரு சமூக அக்கறைனு கூட சொல்லலாம். (பெண்களோட நல்ல மனச புரிஞ்சுக்கோங்க :) )

Tuesday, January 01, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2008


என் இனிய வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனி வரும் ஆண்டுகளில் மேலும் மேலும் நட்பும் உருபடியான பதிவுகளும் பெருக வாழ்த்துகின்றேன். :)