Sunday, August 06, 2006

நண்பர்களே....




இதுவரை பார்த்த, பார்க்காத, என் வலைப்பூவில் பின்னூட்டம் இட்ட, பின்னூட்டம் இடாமல் அமைதியாக படித்துச் செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, July 20, 2006

அம்மா அப்பா.......




இந்த காலத்துல அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போக ஆரம்பிசசதுலயிருந்து குழந்தைக கதி இப்படிதான் ஆகி போச்சு. வேல வேலனு ரெண்டு பேரும் இயந்திரமா மாறீட்டாங்க. ஆதரவு காட்டற பாட்டி தாத்தவயும் முதியோர் இல்லத்துல சேர்த்தாச்சு கடைசில குழந்தைக நிலைமைதான் மோசமா போச்சு.
இந்த படம் குடுத்த உதவி செஞ்ச இவருக்கு ரொம்ப நன்றிங்கோ. அப்பா‍டி ஏதோ ஒரு பதிவு போட்டாச்சு.

Thursday, June 29, 2006

என்னை கவர்ந்த ஆறு

ஆறு பதிவுக்கு என்னை உண்மை, இளா ரெண்டு பேரும் அழைச்சிருக்காங்க. சரி நமக்கு பிடிச்ச ஆறுகளை பற்றி எழுதலாம்னு (யோசிச்சு) எழுதியிருக்கேன்.

1. சியன்னா - பிரான்ஸ்




இந்த ஆறு பிரான்ஸ்ல ஓடுது. ஈபிள் டவர் மேல இருந்து பாக்கும்போது ரொம்ப அழகா இருக்குது. அதவிட ஆத்துமேல அவங்க கட்டியிருக்கற பாலங்கள் தான் சூப்பர். எவ்வளவு அழகழகா கட்டியிருக்காங்க. பார்க்க பார்க்க அழகா இருக்குது. பல முக்கியமான இடங்கள் எல்லாமே இந்த ஆத்தங்கரையோரத்துலயேதான் இருக்குது. இரவு நேரத்துல படகுல போய் ஊர் சுத்தி பாக்கலாம் ரொம்ப நல்லாயிருக்கும்.

2. போ - இத்தாலி

இந்த ஆறு இத்தாலில ஓடுது. நம்ம ஊர் காவிரி மாதிரி அந்த ஊருக்கு. நான் தங்கியிருந்த பெராரா நகர்ல இந்த ஆறு ஓடுது. தினமும் என் டைம் பாஸ் இந்த ஆத்த வேடிக்கை பாக்கறதுதான். ஊர் பெரிசாயிருச்சுங்கறதுக்காக ஆத்தையே கொஞ்சம் தள்ளி வெச்சிருக்காங்க.


3. கங்கை - இந்தியா
இது வரைக்கும் நேர்ல பார்த்தது இல்ல. ஆனா கதைகளிலும் கட்டுரைகளிலும் படிச்சு படிச்சு கங்கை மேல ஒரு பெரிய மரியாதையும் பார்க்கனும்கற ஆவலும் அதிகமா இருக்கு. பார்க்கலாம் எதிர்காலத்தில் பார்க்க முடியுதானு.

4. காவிரி - கர்நாடகம்
முதன் முதலா காவிரிய சின்ன வயசுல கர்நாடகா சுற்றுலா போனப்போ ஸ்ரீரங்க பட்டினம்னு ஒரு இடத்துல பாத்தது. அப்ப எனக்கு ஒரே ஆச்சரியம் இவ்ளோ தண்ணியானு. அது வரைககும் நான் இவ்வளவு பெரிய ஆத்த பாத்தத‍ே இல்லை. இங்க கரை அகலமா இருக்கும் அதுல மீன் துள்ளி விளையாடிட்டு இருக்கும். சின்ன வயசுல பார்த்ததாலே அப்டியே மனசுல பதிஞ்சிடுச்சு.

5. வைகை - மதுரை
"வைகை நதியோரம் பொன்மாலை நேரம்... " அப்படீங்கற பாட்டு ரொம்ப பிடிக்கும். அவ்வளவுதான் எனக்கும் வைகைக்கும் உள்ள உறவு. எப்டியோ ஆறு ஆறுகளைப்பற்றி எழுதனுமே கணக்குக்காக இத சேர்த்திட்டேன். :)

6. நொய்யல் நதி - கொங்கு நாடு
எங்க ஊர்ல இருக்கற ஒரே ஆறு இதுதான். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு இருக்கறது. எனக்கு தெரிய இந்த ஆத்துல தண்ணிய பார்த்ததே இல்லை.




நொய்யலை காப்பாத்த இப்ப சிறுதுளினு ஒரு அமைப்பு ஏற்பாடு பண்ணி தூர்வாறி, நீர் பிடிப்பு பகுதிகளை சுத்தம் பண்ணி எப்டியோ ரொம்ப வருசத்துக்கு அப்புறம் தண்ணி வர வழைச்சிட்டாங்க. வாழ்க சிறுதுளி. வெளி நாடுகள்ள ஆறு களை அவங்க மிக மிக சுத்தமா கரை கட்டி பராமரிக்கறாங்க. ஆத்துல ஒருத்தரும் குளிக்கறதோ, துவைக்கறதோ, இறங்கி விளையாடறதோ இல்ல. அனுபவிக்க தெரியாதவங்க. நம்ம ஊருல அப்டியா? பண்ணாத வேலையெல்லாம் பண்றோம். அப்படிபட்ட ஆறுகளை முடிஞ்சவரைக்கும் குப்பைகளை போட்டு நிறைக்காம இருந்தாலே போதும்.

நான் அழைக்கும் ஆறு பேர்,
1. மனசு
2. பரத்
3. தியாகு
4. கோபாலன்
5. நெல்லை கிறுக்கன்
6. காயத்ரி

Wednesday, June 21, 2006

அடுத்த வீட்டு அல்லி



மாற்றான் தோட்டத்து மல்லிகை மணப்பதை போல அடுத்த வீட்டு அல்லியும் அழகாகதான் இருக்கிறது.

ஆபீஸ் பக்கத்து வீட்டுல இந்த அல்லி செடி வெச்சிருக்காங்க அதுவும் தினம் தினம் அழகா பூ விட்டுகிட்டு இருக்குது. உடனே போட்டோ பிடிச்சு போட்டாச்சு. ஆனா ஒரு சந்தேகம் இந்த அல்லியும், குமுதமலர் (குமுதவள்ளி இல்லீங்க) அப்டீனு சொல்லறதும் ஒன்னுதானா இல்ல வேற வேறயா?. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கறேன்.

Tuesday, June 13, 2006

வளர் சிதை மாற்றங்கள்











வளர் சிதை மாற்றத்தால இப்படியெல்லாம் செய்ய தோணுதோ?. ஆனா வாழ்க்கைல ஜாக்ரதையா இல்லைனா கடைசில இப்டிதான் ஆகனும்.


எப்டியோ எல்லாரும் வளர்சிதை மாற்றத்தை பத்தி பதிவு போடும் போது நான் மட்டும் எப்டி போடாம இருக்கறது. அதான் இந்த படங்கள போட்டு தலைப்பு மட்டும் சரியா வெச்சு ஒப்பேத்திட்டேன். ....... :)

Monday, June 05, 2006

ஸ்மைல் ப்ளீஸ்

கொஞ்சம் சீரியஸா எழுதறேன்னு சிலரும் கொஞ்சம் ஆழமா (எவ்வளவு அடினு தெரியல?) எழுதறேனு சிலரும் சொன்னதால சும்மா சிரிக்கறா மாதிரி (நகைச்சுவை மாதிரி) எழுதலாமேனு யோசிச்சப்ப நமக்கு வர குறுஞ்செய்திகள (SMS) போடலாம்னு தோணிச்சு அதான் இது,

முதல்ல குணா பட பாடல் ஒன்னு,

கண்மணி அன்போடு ப்ரெண்ட் நான் அனுப்பும் மெஸேஜ், இல்ல sms, வேணா மெஸேஜ்னே இருக்கட்டும்
பொண்மணி உன் செல்லில் சிக்னல் கிடைக்குதா?
என் செல்லில் இங்க கிடைக்குதே!
உன்னை எண்ணி பார்க்ககையில் மெஸேஜ் கொட்டுது, அதை அனுப்ப நினைக்கயில் பாலன்ஸ் முட்டுது,
" மனிதர் புரிந்து கொள்ள இது மொக்க மெஸேஜ்
அல்ல அல்ல அல்ல ........ ‍
அதையும் தாண்டி மட்டமானது "
அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல, என் செல்லுல மட்டும் பாலன்ஸ் நிக்கறதேயில்ல‍ை.

அடுத்தது ஒரு ஜோக், ஒரு சின்ன பையன் வீதில
நடந்துபோகும்போது தும்மிகிட்டே போனான்.
அது ஏன்?
ஏன்னா அவன் பொடி பையன். :)

அப்புறம் ஒரு தத்துவம்,
1. முதல்வரே ஆனாலும் முதல் சீட் டிரைவருக்குதான்.
2. ட்ரெயின் டிக்கட் எடுத்து ப்ளாட்பார்ம்ல உக்காரலாம்
ஆனா ப்ளாட்பார்ம் டிக்கட் எடுத்துட்டு ட்ரெயின்ல
உர்கார முடியாது
3. என்னதான் கராத்தேயில ப்ளாக் பெல்ட்
எடுத்திருந்தாலும், சொறி நாய் துரத்துனா ஓடித்தான்
ஆகனும்.


பின்குறிப்பு : முக்கியமான விசயம் தயவுசெய்து மேலே உள்ளதெல்லாம் படிச்சிட்டு கொஞ்சம் சிரிச்சிருங்க. இதெல்லாம் ‍‍ஜோக்னு நம்பி அனுப்பி வெச்சிருக்கிற என் நண்பர்களுக்காக....... :)

Sunday, May 28, 2006

நாகலிங்கம்


இந்த படத்துக்கு மேட்டர் இங்க போய் பாருங்க. இது நான் முதல்ல போட்ட போஸ்ட்டிங்கோட தொடர்ச்சினு வெச்சிக்கலாம்.இந்த மலர் இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. உள்ள இருக்கற லிங்க அமைப்பை சரியா படம் பிடிக்க முடியல. இத படம் பிடிக்க தேடின தேடல் ம்ம்... மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் எங்கயும் கிடைக்கல. கடைசில ஒரு நண்பர் கும்பகோணத்திலிருந்து எடுத்து கொடுத்தாரு.படம் எடுத்து கொடுத்த நண்பருக்கு நன்றிங்கோ.

Saturday, May 13, 2006

சித்தார்த்தா......

இன்று புத்தர் பிறந்த தினம். வட இந்தியாவிலும் சீனா,ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
புத்தரோட கொள்கைகள்னு பார்த்தா முக்கியமானது பிற உயிர்களுக்கு துன்பம் தரகூடாது,ஆசைதான் துன்பத்திற்கு அடிப்படை அப்டீனு சொல்லியிருக்காரு. எல்லாம் நம்ம பாட புத்தகங்களோட புண்ணியத்துல தெரிஞ்சுகிட்ட விசயங்கள். புத்த துறவிகள் வாழ்க்கைல அவங்களால முடிஞ்சவரைக்கும் பிறருக்கு உதவியா இருந்திருக்காங்க. வைத்தியம் செய்யறது, ஓவியம் வரையது அவங்கபாட்டுக்கு அமைதியா வாழ்ந்திருக்காங்க. இது போக சில துறவிகள் நல்ல பல நூல்களும் இயற்றியிருக்காங்க.
நம்ம அசோகர் (அதாங்க மயிலுக்கு மன்னிக்கவும் மையிலுக்கு ஒரு குளம் வெட்னவரு) காலத்துல புத்தரோட கொள்கைகளை நல்லாதான் வளத்துனாரு. தன்னோட மகன் மகள் எல்லாரையும் அனுப்பி புத்த மதத்தை பரப்பியிருக்காரு. அட நம்ம சிலப்பதிகாரம் மணிமேகலை காலத்திலகூட புத்த மதம் நல்லாதான் இருந்திருக்குது. இப்பவும் புதுக்கோட்டை சித்தன்னவாசல் குகைகளில் அவங்க ஓவியங்களும் கல் படுக்கை களும் இருக்குது.
விசயம் என்னனா புத்தர் பிறந்து வளர்ந்தது போதனை செய்தது எல்லாம் இந்தியாவில, ஆனா புகழ் பெற்று அது ஒரு தனி மதமா சிறந்து விளங்கறது வெளிநாட்டுங்கள்ல. இதுக்கு காரணம் என்னனே தெரியல. ஒரு வேலை அவர் தென் இந்தியாவில் பிறந்திருந்தா ஆழ்வார்கள், நாயன்மார்கள் வரிசையில அவரும் ஒருத்தரா ஆயிருப்பார்னு நெனக்கிறேன். எப்படியோ
இந்த ஒரு நாளாவது புத்தரைப்பற்றி நினைக்கலாம்.
வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் எப்படி புத்தரை கண்டுக்காம விட்டுதுனு தெரியல?

Thursday, April 06, 2006

பாசம் ...............


சென்ற வருடம் இத்தாலி சென்ற போது தங்கியிருந்த இல்லத்தின் எதிர் வீட்டில் ஒரு வயதான பாட்டி குடியிருந்தார்கள். தினமும் வெளியில் கிளம்பும்போதும் திரும்பும்போதும் அந்த பாட்டியை பார்த்து ஒரு புன்னகைத்துவிட்டு செல்வது வழக்கம். அதுபோக எப்போது எங்களை சந்தித்தாலும் அந்த பாட்டி மிக அருமையாக பேசுவார்கள். இதில் கொடுமை என்னவெனில் அவருக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. எனக்கோ கொஞ்சமே கொஞ்சம் இத்தாலி தெரியும் அவ்வளவுதான். எப்படியோ அபிநயம் முகபாவத்தில் எங்களுக்கு விசயத்தை புரிய வைத்துவிடுவார். விருப்பம் இருந்தால் மொழி ஒரு பிரச்சினையே இல்லை என்பது அங்கேதான் தெரிந்து கொண்டேன். ஒரு நாள் அந்த பாட்டியம்மாள் ஒரு மிகப் பெரிய கேக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றார் என்ன என விசாரித்ததில் அந்த கேக் அவரே எங்களுக்காக செய்தது என்று கூறினார். உண்மையில் அது மிக அருமையான சாக்லேட் கேக். வாழ்க பாட்டி என சொல்லிக் கொண்டே சாப்பிட்டோம்.
கடைசியில் நாங்கள் திரும்பி வரும் நாள் அன்று சொல்லி வர சென்றிருந்தோம். அப்போது அந்த பாட்டி கண்ணில் நீருடன் நீங்கள் என் பிள்ளைகளை போல உங்களை பிரிவது கடினமாக உள்ளது என்று கூறினார். அது மட்டும் இல்லை இந்தியா சென்ற பிறகு கடிதம் எழுதுங்கள் என்று அவர் இல்ல முகவரி கொடுத்தார். அந்த முகவரி என்னுடைய தொலைந்துபோன பெட்டியில் சென்றுவிட்டது நானும் மறந்து விட்டேன்.
சென்ற மாதம் எங்கள் நிறுவனத்தலைவர் இத்தாலியிருந்து வந்திருந்தார் அவர் என்னை அழைத்து "அனு, மேடம் லூயிசா உன்னை மிகவும் விசாரித்ததாக கூறினார்" என்ற போது உண்மையிலேயே எனக்கு வருத்தமாக போய்விட்டது. இத்தனை நாட்கள் மறந்து போனதற்கு.
பாசத்திற்கு நாடு, மொழி, இனம் ஒரு தடையே இல்லை என்பது உண்மையான விசயம்.

Friday, March 24, 2006

வரமா ? சாபமா?


பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமை,பருக புத்துணர்வூட்டும் பானம்,பிறப்பது எங்கோ ஆனால் வாழ்வது வெளிநாடுகளில்,சீனர்களின் பாரம்பரிய விருந்தோம்பல்,நம் முதல்குடிமகன் கொடுக்கும் விருந்து,ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை பருகுவது இப்படி எத்தனையோ புகழ் பெற்றது இந்த தேயிலை. இது வாங்கிவந்த வரம் அப்படி ஆனால், எந்த தாவரமாக இருந்தாலும் வளர்ந்து பூத்து காயாகி கனியாகி பின்புதான் பறிப்பார்கள். இதை மட்டும் முளையி‍லேயே கிள்ளுகிறார்கள் பாவம் இது வாங்கி வந்தது வரமா? சாபமா?.

Monday, March 20, 2006

நிம்மதியான வாழ்க்கை

பள்ளிக்கூடம் போகனுமா?
படிக்கணுமா?
வேலைககு போகணுமா?
நிறைய சம்பாதிக்கணுமா?
வாகனம் வாங்கனுமா?
வீடு கட்டணுமா?
ஊர் சுத்த நண்பர்கள் வேணுமா?
மொபைல் ரீசார்ஜ் பண்ணணுமா?
அப்புறம் இநத மாதிரி வலைப்பதிவு போடணுமா?
மெயில் அணுப்பனுமா?
காதலிக்க பொறுமை வேணுமா?
கல்யாணம் பண்ணி கஷ்டபடனுமா?
குழந்தைகளை படிக்க வைக்கணுமா?
வயசான காலத்தில் நல்ல உறவு ‍வேணுமா?

இப்படி வாழ்க்கையில் எந்த கவலையும் இல்லாம நிம்மதியா இயற்கையோட இணைந்து வாழ தெரியாத இந்த மனுஷங்கள பார்த்தா ஒரே சிரிப்பா இருக்குது.

Sunday, March 12, 2006

பக்தியும் மாமிசமும்

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக்
கொன்று அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும். வள்ளுவரின் வரிகள் இது. சரி மாமிசம் உண்ணாமல் இருக்க முடிவதில்லை இக்காலத்தில். ஆனால் அதற்காக நம் மக்கள் சொல்லும் காரணங்கள்தான் அதிசயமாக இருக்கிறது.

என் அலுவலகத்தில் ஒருவர் மட்டும் சுத்தமான சைவம் அதுபோக பாதிபேர் சைவமாக
நடிப்பவர்கள். எப்படியென்றால் சாதாரணமாக பேசும்போது நான் சைவம் எனக்கு அசைவம்
சுத்தமாக பிடிக்காது(வேக வைக்காமல் பிடிக்காது என்கிறார்களோ..?) என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அதுபோக வெள்ளி கிழமை, பிரதோஷம் அமாவாசை என்று பல காரணங்கள் கூறிக்கொண்டிருப்பார்கள். அதே சமயம் அலுவலகத்தில்ஏதாவது விருந்து என்று அசைவம் சாப்பிட சென்றால் மறக்காமல் அனைவரும் கட்டாயம் சாப்பிடுவார்கள். அது எந்த நாள் கிழமை என்றாலும் சரி. இதிலும் குறிப்பாக பெண்கள் (தாய்குலங்கள் மன்னிக்கவும்) இல்லாத விளம்பரம் செய்து விட்டுதான் சாப்பிட வருவார்கள்.எதற்கு இந்த அலட்டல் என்று தெரியவில்லை.

அசைவம் சாப்பிடுவேன் என்று கூறிவிட்டால் ஏதோ பாவ காரியம் செய்ததுபோல ஒரு
எண்ணம் நம் மக்களிடம். எந்த கடவுளும் அசைவம் வேண்டாம் என்று சொல்லவில்லை.
கண்ணப்ப நாயனார் கடவுளுக்கே மாமிசம் படைத்தார் அவருக்கும் கடவுள் காட்சியளித்து ஏற்றுக் கொண்டார். அப்படியே அசைவம் சாப்பிடுவதில்லை என்றால் எப்பொழுதும் சாப்பிடாமல் தூய சைவமாக இருப்பின் பரவாயில்லை அதை விட்டுவிட்டு இந்த கிழமையில் இந்த இந்த நாளில மட்டும் சாப்பிட மாட்டேன். எப்படி எந்த நாளில் சாப்பிட்டாலும் ஒரு உயிரை கொல்வது பாவ காரியம்தான் அதில் என்ன பெருமை குறிப்பிட்ட நாட்களில் மாதங்களில் சாப்பிடாமல் இருப்பது என்று எனக்கு புரியவில்லை?

Tuesday, February 21, 2006

சங்கிலி

ஏதோ இந்த சங்கிலி அப்படீ இப்படீங்கறாங்க சரின்னு நானும் போட்டுட்டேன். எல்லாம் நம்ம கொங்கு நாட்டு தங்கம். ராசா வோட புண்ணியத்தில போட்டாச்சு. நன்றி ராசு.

Four jobs I have had:
1. காலங்காத்தால நல்லா இழுத்து போத்தி தூங்கறது
2. மயிலு அனுப்பறது
3. நல்லா கொட்டிக்கறது.
4. திரும்ப தூங்கறது.

Four movies I would watch over and over again:
English
1. E-D (English)
2. The day after tomorrow
3. The god must be grazy
4. Mummy

Tamil
1. காந்தி
2. காதலிக்க நேரமில்லை
3. மின்சார கனவு
4. அன்பே சிவம்


Four places I have lived (for years):
1. ஈரோடு
2. கோவை
3. பெராரா
4. மீண்டும் கோவை


Four TV shows I love to watch:
1. தூர்தர்ஷன் - வயலும் வாழ்வும்
2. தூர்தர்ஷன் - குடியரசு தின நிகழ்ச்சிகள்
3. Cartoon network - Tom & Jerry
4. Cartoon network - Poppye Show


Four places I have been on vacation:
1. பாரீஸ்
2. இத்தாலி
3. மாமா வீடு
4. சிங்கை தொடர் வண்டி நிலையம்

Four of my favourite foods:
1. தோசை
2. மசால் தோசை
3. நெய் தோசை
4. ஆனியன் தோசை

Four places I'd rather be now:
1. வீதியிலே பராக்கு பார்த்துக்கிட்டிருக்கலாம்
2. சும்மா ஷாப்பிங் போயி ஒண்ணும் வாங்காம வரலாம்.
3. அம்புலி மாமா படிக்கலாம்
4. படக்கதை படிக்கலாம்

Four sites I visit daily:
1. தமிழ் பயணி
2. கூகிள்
3. தமிழ்மணம்
4. தமிழ் சத்திரம்

Four bloggers I am tagging: *
1. என்னார்
2. அனுசூயா
3. சிவா
4. ஞானம்

Saturday, February 18, 2006

மலர்களும் மனிதர்களும்


மலர்களும் மனிதர்களும்

மலர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு ஆதிகாலம் முதல் தற்காலம் வரை பிரிக்க முடியாமல் தொடர்கிறது. இந்த வாரம் விகடனில் எஸ்ரா அவர்களின் தேடல் மலர்களைப்பற்றி இருந்தது. அப்போதுதான் மலர்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பற்றிய எண்ணம் எழுந்தது.

அந்த கால இலக்கியங்களில் நம் தமிழர் பண்பாட்டை விளக்கும்போது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்ப போருக்கு செல்ல, வெற்றி பெற, திருமணம் என பல்வேறு நிகழ்வுகளுக்கும் பல வகையான மலர்களை பயன்படுத்துவதை பற்றி பாடல்கள் இடம் பெற்றிருக்கும். சித்தன்ன வாசல் குகை ஓவியங்களில் இடம் பெற்ற ஒவ்வொரு ஓவியத்திலும் தாமரை, அல்லி போன்ற மலர்கள் இடம்‍பெற்றுள்ளன. புத்த பிரானின் ஓவியம் வரையும் போது கட்டாயம் தாமரை இடம் பெற்று வருகிறது.

என் சிறுவயதில் வெள்ளிங்கிரி மலைக்கு சென்ற போது என் தந்தை எனக்கு நாகலிங்க பூவை காட்டினார். உண்மையில் மிக அதிசயமான மலர் அது கடவுளின் படைப்பில் பல அதிசயங்கள் உண்டு அவற்றில் அதுவும் ஒன்று. ஒரு சிறு மலருக்குள் பீடம் நடுவில் லிங்கம் அதனை சுற்றி ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு என எவ்வளவு அருமையான படைப்பு. மணமும் அபாரம். நான் நினைக்கிறேன் மனிதன் அந்த மலரை பார்த்துதான் சிவலிங்கத்தை சிற்பமாக செய்திருப்பான் என எண்ணுகிறேன். அன்று இருந்து இன்று வரை இந்த நாகலிங்க பூவின் மீதுள்ள வியப்பு தீரவே இல்லை.

மகுடமல்லி (மகிழ மல்லி) எனும் இப்பூவினை எனக்கு அறிமுகம் செய்தவர் எனது தமிழ் ஆசிரியை. அவர் தினமும் ஏதாவது ஒரு மலரை பற்றியும் அதனை தமிழர் வாழ்வில் உபயோகப்படுத்தியது பற்றியும் எடுத்துரைப்பார். உண்மையில் அப்படி ஒரு ஆசிரியை அமைவது ஆபூர்வம் அவர் வெறும் பாடம் மட்டும் நடத்தாமல். தமிழர் பண்பாடு, மலர்கள், உணவு பழக்கம் பற்றி ஏதாவது ஒன்றை விவாதிப்பார். இதனாலேயே தமிழ் வகுப்புகள் இனிமையாக அமைந்தது. அதற்கு பிறகு மகுடமல்லியை பூம்புகார் சென்ற போது பார்த்தது. வேறு எஙகும் காண கிடைக்கவில்லை. சிறியதாக இருந்தாலும் மணம் மிக அதிகம்.

பவளமல்லி என் உறவினர் வீட்டில் பார்த்தது. இது மற்றொரு அதிசயம். எல்லா பூ விற்கும் காம்பு பச்சை நிறத்தில் இருக்க இதற்கு மட்டும் பவிள நிறத்தில் அமைந்துள்ளது. இது மாலையில் மட்டுமே மலர்கிறது. அருமையான மணம் கொண்டது.

இப்படியே பார்த்தால் செண்பகம், அல்லி, செம்பருத்தி, அந்திமல்லி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஆனால் தற்போது உள்ள இட நெருக்கடியில் பின் வரும் சந்ததியினருக்கு இந்த மலர்களை சந்திக்க வாய்ப்பே இருக்காது என எண்ணுகிறேன். ஏன் நம்மில் பலருக்கு நம் முன்னோர் பார்த்து ரசித்த பல மலர்கள் காண கிடைப்பதில்லை. இது போக நம் இலக்கியங்களில் வரும் ஆத்தி மலர், அனிச்சை, காந்தள், இச்சி மலர் என பல வகையான மலர்களை காலம் தொலைத்து விட்டது. ஆனாலும் அந்த இடத்தை நிறைவு செய்ய தற்போது ரோஜா டூலிப், லாவண்டர் என பல புதுப்புது அயல்நாட்டு மலர்கள் வந்து விட்டது. எந்த நாட்டை சேர்ந்தததாக இருந்தாலும் மலர் மலர்தான். ரசிக்கும் வகையில்தான் உள்ளது. மலர்களை பார்த்து மயங்காத மனித மனம் ஏதும் உண்டா?

Friday, February 10, 2006

என்ன விலை அழகே?






போட்டோவ பார்த்தாச்சா? எல்லாம் காசுக்காக போடும் ‍வேஷம். வெனீஸ் மற்றும் ரோம் நகரில் இந்த மாதிரி வேடமிட்ட மனிதர்கள் நின்றிருப்பார்கள். அவர்களுக்கு 50 சென்ட் காசு கொடுத்தால் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாம். காசு போடாம போட்டோ எடுத்தா மூஞ்சியை திருப்பிக்குவாங்க. நம்மூர் பிச்சைகாரர்கள் போலதான் என்ன கொஞ்சம் கலையலகுடன் புது உத்தியில் பிச்சை எடுக்கிறார்கள். ஆனால் பாவம் காலை முதல் மாலை வரை எந்த சிறு சலனமும் இன்றி நிற்பது மிகவும் கடினம்.சில சமயம் உண்மையான சிலையா மனிதர்களா? என வித்தியாசமே தெரியாது. என்ன கண்கள் மட்டும் காட்டிக் கொடுத்துவிடும் உண்மையை.

Thursday, February 09, 2006

போதுமடா சாமி

கோவையில் ஏற்கனவே தனியாரால் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது திருப்பூரில் ஒரு வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு செலவு செய்யப்பட்ட பல கோடிகளில் சில கோடிகளை சிறு சிறு தொழிற்சாலைகளுக்கு கழிவு நீர் சுத்திகரிப்புசாலை அமைக்க கொடுத்திருந்தாலோ அல்லது சிறுதுளி போன்ற அமைப்புக்கு கொடுத்திருந்தாலோ திருப்பூரின் தண்ணீர் பஞ்சம் கொஞ்சமாவது தீர்ந்திருக்கும்.

அதே போல பொள்ளாச்சிக்கு அருகில் ஒரு கிராமம் உள்ளது. அந்த ஊரில் ஒரு பொதுவான அம்மன் கோவில் உள்ளது. அதற்கு அடுத்து ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தங்களுக்கு என புதிய தனி அம்மன் கோவில் கட்டினர் அதனை அடுத்து அதே மக்கள் ஒரு குறிப்பிட்ட குலத்திற்கு என தனி கோவில் கட்டிக்கொண்டு உள்ளார்கள். தற்போது அந்த ஒரு கிராமத்தில் மட்டும் 3 அம்மன் கோவில்கள் உள்ளன. அதுபோக மற்றகடவுள் கோவில்கள் தனி. ஆனால் அந்த ஊரில் ஒரே ஒரு ஆரம்ப பள்ளிதான் உள்ளது. நடுநிலைப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள சிற்றூருக்கு பேருந்தில்தான் மாணவர்கள் செல்ல வேண்டும். மேற்படிப்பு படிக்க பொள்ளாச்சிக்கோ அல்லது கோவைக்கோதான் செல்ல வேண்டும். இந்த கோவில்கள் கட்ட செலவு செய்யும் பல லட்சங்களில் சில லட்சங்களையாவது பள்ளிகள் கட்ட உதவியிருந்தால் பல மாணவர்களின் படிப்பு பாதியில் நின்றிருக்காது.

நாம் போற்றி வணங்கும் அடியார்களும் ஆழ்வார்களும் இறைவன் அருளை பெற கோவில் கட்டி வணங்கவில்லை. அவர்கள் இறைவன் அருளை பெற அவனுடைய படைப்பு (உயிரினங்கள்) களுக்கு உதவி செய்து அருளடைந்தனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வாழ்ந்து இறை அருளை பெற்றனர். ஆனால் தற்காலத்தில் தங்களுடைய புகழை பரப்பவும் தங்களின் பெருமையை உலகறிய செய்யவும் போட்டி போட்டுக் கொண்டு அதிக செலவில் கோவில்கள் கட்டி தங்கள் பெயரை நிலைநாட்டுகின்றனர். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பல கோவில்கள் நம் முன்னோர்களால் கட்டப்பட்டு தற்போது கேட்பாரற்று, முறையான பராமரிப்பு இன்றி சிதைந்து அழிந்து கொண்டுள்ளன. நாம் புதிது புதிதாக கோவில்கள் கட்டுவதைவிட இருப்பதை நல்ல முறையில் பராமரிப்பு செய்தாலே போதும். ஒரு ஊருக்கு ஒரு கோவில் என்று இருந்தது இன்று ஒரு வீதிக்கு பல கோவில் என்ற நிலையில் உள்ளது. இனியாவது சிந்தித்து செயல்படுவோம். நம்நாட்டின் அத்தியாவசிய தேவைகள் நிறைவடைந்தபின் இம்மாதிரி செலவுகள் செய்யலாமே?

Thursday, February 02, 2006

தினமலருக்கு நன்றி

நேற்று எனது வலைப்பதிவை வெளியிட்ட தினமலருக்கு எனது மனமார்ந்த நன்றி. முதலில் வலைப்பதிவை ஏதோ நமக்கு தெரித்த தெரியாத சில விசயங்களை பற்றி எழுதினேன். அதற்கு வலைப்பதிவு நண்பர்களின் ஆதரவும் பின்னூட்டங்களையும் கண்டபிறகு சற்று பொறுப்பு கூடி விட்டது. அதுபோக தற்போது தினமலரும் எனது வலைப்பதிவை வெளியிட்டுவிட்டது. சற்று பொறுப்பு அதிகமாகியுள்ளது. முடிந்த வரை நல்ல கருத்துகளை வெளியிட இந்த எளியவளின் முயற்சி தொடரும். அதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. முதன் முதலில் தினமலர் செய்தி பற்றி தெரிவித்து வாழ்த்திய திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றிகள். மேலம் பின்னூட்டம் இட்டவர்கள் இடப்போகிறவர்கள் அனைவருக்கும் நன்றி,நன்றி.

Wednesday, January 25, 2006

குடியரசு தினவிழா

குடியரசு தினவிழா
அனைவருக்கும் குடியரசு தினவிழா நல்வாழ்த்துக்கள். பொதுவாக குடியரசு தினம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது விடுமுறை மட்டுமே. அதனையும் தாண்டி ஒரு சிலர் குடியரசை பற்றி நினைத்தால் அது அதிசயம்தான். நம் நாடு கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக குடியரசு நாடாக இருப்பதற்கு நாம் உண்மையிலேயே பெருமிதம் கொள்ள வேண்டும். வரும் காலங்களிலும் இந்த குடியாட்சி தொடர இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். நாம் எப்போது வருடப்பிறப்பு, தீபாவளி போன்று குடியரசு தினத்தையும், சுதந்திர தினத்தையும் கொண்டாட தொடங்குகிறோமோ அன்றுதான் நாம் உண்மையான குடிமக்கள் ஆகின்‍றோம். முன்‍பெல்லாம் குடியரசு தினத்தன்று பள்ளிகளுக்கு சென்று கொடியேற்றிவிட்டு வீட்டுக்கு வருவோம். அப்போது நமது தூர்தர்ஷனில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் செங்கோட்டையில் குடியரசு தலைவர் கொடியேற்றும் நிகழ்ச்சி காண்பிக்கப்படும். அதில் இறுதியாக ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளின் அணிவகுப்பும் நடைபெறும் உண்மையிலேயே பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதற்கேற்றார்போல் அலங்காரம், நடனம், இசை அமைத்துக் கொண்டு ஒரே சீராக செல்வது மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த வருடமும் குடியரசு தினத்தை ஒவ்வொருவரும் சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்.

Saturday, January 21, 2006

செய்திப் பஞ்சம்

வரவர வாரஇதழ்கள் ஏன்தான் இப்படியாகிறதோ, தெரியவில்லை. வாரஇதழ் என்றவுடன் நினைவுக்கு வருவது ஆனந்த விகடன், குமுதம் போன்ற சில புத்தகங்கள். ஆனால் அவற்றில் வரும் விசயங்களை பார்த்தால் சினிமா எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றிவிடலாம் போல் உள்ளது. இந்த வாரம் வார இதழ் வாங்கி படிக்க ஆரம்பித்தால் சரியாக முதல் 52 பக்கங்களுக்கும் முழுக்க முழுக்க சினிமா சினிமா வேறு ஏதும் இல்லை. அட தமிழ்நாட்டில் சினிமாவைத்தவிர ‍எழுதுவதற்கு வேறு விசயங்களே இல்லையா?. முன்பெல்லாம் வாரஇதழ் படிக்க போட்டியாக இருக்கும். நகைச்சுவை, சிறுகதைகள், கட்டுரைகள், ஆன்மீக பயணக்கட்டுரை கொஞ்சம் சினிமா என இருந்தது. தற்போது அட்டை படத்தில் தொடங்கி சினிமா நடிகைகளின் பேட்டி, நடிகர்களின் பேட்டி, இயக்குநர்களின் பேட்டி மற்றும் ஒளிப்பதிவாளர், ஒப்பனையாளர் என முழுக்க முழுக்க சினிமா பற்றியேதான். அது பரவாயில்லை நகைச்சுவையில்கூட நடிகைகளின் படங்கள். முன்பெல்லாம் நகைச்சுவைக்கு கார்ட்டூன் வரைந்து கொண்டிருந்தார்கள் தற்போது அதுவும் இல்லை. ஆக மொத்தத்தில் வார இதழ்களின் எழுதுவதற்கு வேறு செய்திகளே இல்லையெனும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. இதில் மட்டும் எல்லா வார இதழ்களும் போட்டி ‍போட்டுக் கொண்டு சரிக்கு சரியாக இருக்கின்றது. இந்த வார இதழில் இந்த நடிகை பேட்டி என்றால் மற்றொரு வார இதழில் வேறு நடிகை பேட்டி என சபாஷ் சரியான போட்டியாக உள்ளது. இந்த போட்டி வேறு ஏதாவது கதை, கட்டுரை விசயத்தில் இருந்தால் பரவாயில்லை. இப்படி சினிமா பற்றி ‍செய்திகளை படிக்க இந்த வார இதழை படிக்க வேண்டியதில்லையே. ஏதாவது ஒரு சினிமா பத்திரிகை வாங்கினாலே‍ போதுமே?.

Tuesday, January 17, 2006

உலக அதிசயங்களும் இந்தியாவும்

உலக அதிசயங்களும் இந்தியாவும்

உலக அதிசயங்களை கட்டுரைகள் மற்றும் கதைகளில் படிக்கும்போதும்
படங்களை பார்க்கும்போதும் மிக அதிசயமாக உள்ளது. அந்த நாட்டைப்பற்றி வியப்பும் மதிப்பும் அதிகரிக்கின்றது. ஆனால் அவற்றை நேரில் சென்று பார்க்கும்போதுதான் அதன் உண்மை நிலை என்ன என்பது விளங்குகிறது.
உதாரணத்திற்கு பைசா நகர சாய்ந்த கோபுரத்தை எடுத்துக் கொள்வோம்.




அக்கட்டிடம் ஒரு மிகப்பெரிய மாதா கோவிலின் மணிக்கூண்டு அவ்வளவுதான்.சரியான அடித்தளம் இல்லாததால் ஏற்பட்ட கோளாறால் அது சாய்ந்துவிட்டது. ஆனால் அதையும் அவர்கள் ஒரு சிறந்த கட்டிடமாக உலக அதிசயமாக கொண்டாடி விளம்பரம் செய்து பராமரித்து வருகிறார்கள். நாமும் சென்று பார்த்துவிட்டு வருகிறோம். சற்றே சிந்தித்தால் இதுபோல் எவ்வளவோ கட்டிடங்கள் நம்நாட்டில் கேட்பாரற்று பராமரிக்க ஆள் இல்லாமல் கிடக்கிறது. தமிழகத்தில் தஞ்சாவூர், தாராசுரம் கர்நாடகத்தில் பேளூர், ஹளேபேடு போன்று இன்னும் எத்தனை எத்தனையோ கோவில்களில் எண்ணிக்கையில் அடங்காத சிற்பங்களும் கட்டிடங்களும் அதன் சிறப்பை புகழை பரப்ப ஆளில்லாமல் கிடக்கிறது. ஏதோ அதைப்பற்றி தெரிந்த சிலர் சென்று பார்ப்பதோடு சரி. நம் நாட்டினரும் வெளிநாட்டிற்கு சென்று பார்ப்பதை
விரும்பும் ‍அளவு உள் நாட்டில் உள்ள கலை களை காண விரும்பம் கொள்வதில்லை.இதற்கு ஒரு முக்கிய காரணம் நம்மிடையே இன்னமும் வெளிநாட்டு பொருட்களின் மேல் உள்ள மோகம் தனியவில்லை. இனியாவது சற்று நம்நாட்டு கலைகளையும் பராமரிக்க புகழை பரப்ப நம்மால் இயன்றதை செய்வோம்.